Do you know which is the only temple where Lord Nandi gets married? https://tut-temples.blogspot.com
ஆன்மிகம்

நந்தி பகவானுக்கு திருமணம் நடக்கும் ஒரே கோயில் எது தெரியுமா?

ஆர்.ஜெயலட்சுமி

ந்தி பகவானுக்கு திருமணம் நடக்கும் ஒரே கோயில் திருமழபாடி அருள்மிகு வைத்தியநாத சுவாமி திருக்கோயில்தான். அனைத்துக் கோயில்களிலும் தெய்வங்கள், உப தெய்வங்களுக்குத்தான் திருக்கல்யாணம் வைபவம் நடைபெறும். ஆனால், திருமழபாடியில் மட்டும்தான் சிவபெருமானின் வாகனமான நந்தியம்பெருமானுக்கு திருக்கல்யாணம் நடத்தப்படுகிறது. ஆண்டுதோறும் இது பெரிய விழாவாக நடத்தப்படுவது விசேஷம். அதுவும் சிவபெருமானே இத்தலத்திற்கு எழுந்தருளி இந்தத் திருக்கல்யாணத்தை நடத்தி வைப்பதாக ஐதீகம்.

தஞ்சை மாவட்டம், திருவையாறு பகுதியில் சிலாத முனிவர் வாழ்ந்து வந்தார். இவரது மனைவி சித்ரவதி. இவர்களுக்கு நெடுங்காலமாக குழந்தைப்பேறு இல்லை. இதையடுத்து சிவபெருமானை நோக்கி புத்திரப்பேறு வேண்டி தவமிருந்தார் சிலாத முனிவர். அவரது தவத்தில் மகிழ்ந்த ஈசன் அவர் முன்பு தோன்றி, “நீ புத்திர காமேஷ்டி யாகம் செய். அதற்காக யாக பூமியை உழும்போது பெட்டகம் ஒன்று தோன்றும். அதில் ஒரு புத்திரன் காணப்படுவான். அவனை உனது மகனாக வளர்த்து வா. அவன் பதினாறு வயது வரை உன்னிடம் இருப்பான்” என்று அருளினார்.

அதன்படியே பூமியில் இருந்து பெட்டகத்தைக் கண்டெடுத்த சிலாத முனிவர் அதனுள் ஓர் அதிசயக் குழந்தையை கண்டார். அந்தக் குழந்தை நான்கு தோள்களும் மூன்று கண்களும் சந்திரனை அணிந்த முடியும் கொண்டு விளங்கியது. அப்போது ஒரு அசரீரி ஒலித்தது. “பெட்டியை மூடிவிட்டு மீண்டும் திற” என்று ஒலித்தது. அதன்படியே முனிவரும் பெட்டியை மூடி மீண்டும் திறந்தார். இப்போது முந்தைய வடிவம் நீங்கி அதில் அழகிய ஆண் குழந்தை இருந்தது. அந்தக் குழந்தைக்கு செப்பேசன் என பெயர் சூட்டி வளர்த்தார் முனிவர்.

பதினாறு வயதுக்குள் வேதங்கள் அனைத்தையும் கற்றதோடு, கலைகள் அனைத்திலும் குழந்தை சிறந்து விளங்கியது. ஒரு சமயம் அவர் ஆழ்ந்த சிவ சிந்தனையில் இருந்தார். அப்போது அவர் சிவனுடைய அந்தரங்கக் காவலராக இருந்ததும், அப்போது ஆடி என்ற அசுரனை ஈசனின் உத்தரவு இல்லாமல் அனுப்பியதால் சிவபெருமானால் சபிக்கப்பட்டு பூமியில் பிறந்ததும் நினைவுக்கு வந்தது. பிறகு சிவனை நோக்கி ஒற்றைக் காலில் நின்று தவம் புரிந்தார். அவரது தவத்தை கண்டு மகிழ்ந்த பரமேஸ்வரன் அவர் முன் தோன்றி செப்பேசருக்கு சூரிய தீர்த்தம், சந்திர தீர்த்தம், கங்கை நீர், இறைவியின் கொங்கை நீர், இடபவாய் நுரை நீர்  ஆகிய ஐந்து வகை தீர்த்தங்களால் அபிஷேகம் செய்து தங்கப்பட்டம் அணிவித்து ‘நந்தீஸ்வரர்’ எனப்பெயர் சூட்டினார்.

அத்துடன் சிவன் தமக்கு சமமான அதிகாரத்தையும், சிவ கணங்களுக்குத் தலைமை தாங்கும் பதவியினையும், முதல் குருநாதன் என்ற தகுதியினையும் நந்தீஸ்வரருக்கு அளித்தார். பின்னர் பட்டு சாத்தி முடி அணிவித்து வீதி உலாவாக நந்தி தேவரை கூட்டிச் சென்றனர். அன்று முதல் சிவனை விட்டு எங்குமே நீங்காமல் அவர் வாகனமாகவும் ஆனார். அதனால் அவர் நந்திதேவர் என்று அழைக்கப்பட்டார். பரமேஸ்வரன் நந்தீஸ்வரருக்கு திருமணம் செய்ய முடிவு செய்து அவருக்கு  இதற்காக திருமழபாடியில் ஆசிரமம் அமைத்து, தவமும் அறமும் செய்து வாழ்ந்து வந்த  வசிஷ்ட முனிவரின் பேத்தியும் வியாக்ரபாத முனிவரின் மகளுமான சுயம்பிரகாசையை மணப்பெண்ணாகப் பேசி முடித்தார்.

பங்குனி மாத புனர்பூச நட்சத்திரத்தில் திருமழபாடியில் திருமணம் செய்து வைத்தார். இதற்காக திருவையாறில் இருந்து ஏழு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள திருமழபாடிக்கு நந்தீஸ்வரர் குதிரை வாகனத்திலும் ஐயாறப்பர் அறம் வளர்த்த நாயகி வெட்டிவேர் பல்லக்கிலும் செல்கின்றனர். திருமழபாடியில் இறைவன் வைத்தியநாதரும், இறைவி சுந்தராம்பிகையும் கண்ணாடி பல்லக்கில் வந்து மாப்பிள்ளை வீட்டாரை எதிர்கொண்டு அழைக்கின்றனர். அன்று மாலை நந்தி தாலி கட்டும் நிகழ்ச்சியுடன் முடிவடைகிறது.

திருமணம் முடிந்ததும் புதுமண தம்பதியருக்கு தீபாராதனை காட்டப்படுகிறது. பின்னர் அங்கு இருக்கும் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்படுகிறது. இந்த திருமண விழாவிற்கு திருவையாறு மற்றும் அருகில் உள்ள திருப்பழனம், திருச்சோற்றுத்துறை, திருக்கண்டியூர், திருவேதிக்குடி, திருப்பூந்துருத்தி, திருநெய்த்தானம் சிவாச்சாரியார்கள் கலந்து கொண்டு அன்பளிப்புகள் வழங்குகின்றனர்.

‘நந்தி கல்யாணம் பார்த்தால் முந்தி கல்யாணம்’ என்பது சான்றோர் வாக்கு. நந்தி கல்யாணம் பார்த்தவருக்கு முந்தி திருமணம் ஆகும் என்பது இதன் பொருள். அதன்படி நந்தி கல்யாணத்தை பார்ப்பவர்களுக்கு அடுத்த வருடம் நந்தி கல்யாணம் நடைபெறுவதற்குள் திருமணம் நடைபெற்று விடும் என்பது நம்பிக்கை. நந்தி தேவர் திருமண கோலத்தில் மனைவியுடன் காட்சி தரும் திருக்கோலத்தையும் இந்த ஆலயத்தில் காண முடியும்.

70 வயதுக்குப் பிறகும் அறிவாற்றல், உடல் ஆரோக்கியத்துடன் இருப்பது எப்படி?

தவறுகளை ஒப்புக்கொள்வது உங்களை அடுத்த உயரத்துக்கு எடுத்துச்செல்லும்!

தாவரங்களுக்கும் உயிர் உண்டு என்பதை நிரூபித்த முதல் இந்திய விஞ்ஞானி!

உளவியல் விஞ்ஞானிகளுக்கு ஆன்மிகத்தின் அதிசயத்தை உணர்த்திய ஸ்ரீ சத்ய சாயி பாபா!

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

SCROLL FOR NEXT