முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் நான்காவது படை வீடாகத் திகழ்வது திருவேரகம் என்று போற்றப்படும் சுவாமிமலை. இந்தத் தலத்தில் உறையும் கதிர்வேலன் சுவாமிநாதன், தகப்பன்சாமி என்றெல்லாம் அழைக்கப்படுகிறார்.
படைப்புத் தொழிலால் ஆணவம் கொண்ட பிரம்மன் ஒரு சமயம் கயிலாயத்திற்கு வந்தபோது, முருகனை சிறுவன்தானே என அலட்சியம் செய்தார். அவருக்குப் பாடம் புகட்ட எண்ணிய முருகன், பிரம்மாவிடம், ‘ஓம்’ என்ற பிரணவ மந்திரத்தின் பொருள் தெரியுமா என்று கேட்கிறார். அந்தக் கேள்விக்கு பிரம்மாவால் பதில் சொல்ல முடியவில்லை. பிரணவத்தின் பொருள் தெரியாததால் அவரை தலையில் குட்டி சிறையில் அடைத்தார் முருகன். ஈசனே நேரில் வந்து கேட்டுக் கொண்டதால் பிரம்மனை முருகன் விடுதலை செய்தார்.
அதைத் தொடர்ந்து சிவபெருமான், ‘பிரணவத்தின் பொருள் உனக்குத் தெரியுமா?’ என்று முருகனிடம் கேட்டார். ‘தெரியும்’ என்ற முருகன் குருவாக இருந்து சிவபெருமானுக்கு ‘ஓம்’ எனும் மந்திரத்தின் பொருளை உபதேசம் செய்தார். சிவபெருமான் இத்தலத்தில் சிஷ்யனாக அமர்ந்து முருகனிடம் பிரணவ உபதேசம் பெற்றார். சிவபெருமானுக்கு முருகன் குருநாதனாக ஆனார். அதனால் முருகன் சுவாமிநாதன் என்றும், பரமகுரு என்றும், தகப்பன்சாமி என்றும் போற்றப்பட்டார். இதனால் இந்தத் திருத்தலமும் சுவாமிமலை என்று அழைக்கப்பட்டது.
இக்கோயில் முருகன் விபூதி அபிஷேகம் செய்யும்போது ஞானியாகக் காட்சி தருவார். சந்தன அபிஷேகம் செய்யப்படும்போது பாலசுப்ரமணியமாக கம்பீரமாகக் காட்சி தருவார். கருவறையில் சுவாமிநாதன் நின்றிருக்கும் பீடம் சிவலிங்க ஆவுடையாகவும் அதன் மேல் எழுந்தருளி இருக்கும் சுவாமிநாதன் பாணலிங்கமாகவும் காட்சி தருகிறார். சிவனும் முருகனும் ஒன்றே என்பது போல் இந்த அமைப்பு உள்ளது. மூலவருக்கு எதிரில் மயிலுக்கு பதிலாக யானை வாகனம் உள்ளது. இது இந்திரன், முருகப்பெருமானுக்குக் காணிக்கையாக வழங்கிய ஐராவதம் என்று சொல்லப்படுகிறது. இந்தக் கோயிலின் தல விருட்சம் நெல்லி மரமாகும்.
மூலவர் சுவாமிநாதன் ஆறடி உயரத்தில் வலது கரத்தில் தண்டாயுதம் தரித்து இடது கரத்தை இடுப்பில் வைத்து சிரசில் ஊர்த்துவசிகா முடியும் மார்பில் பூணூலும் ருத்ராட்சமும் விளங்க கருணாமூர்த்தியாகக் காட்சி தருகிறார். இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி என மூன்று சக்திகளுமே ஒருங்கே அமையப்பெற்ற வஜ்ரவேலுடன் முருகன் இங்கு காணப்படுகிறார்.
சுவாமிமலை இயற்கையான மலை அன்று. ஏராளமான கருங்கற்களைக் கொண்டு கட்டப்பட்ட ஒரு மாடக்கோயில்தான் சுவாமிமலை. இங்கு மூன்றாவது பிராகாரம் மலையடிவாரத்தில் உள்ளது. இரண்டாம் பிராகாரம் கட்டுமலையின் நடுப்பாகத்திலும் முதல் பிராகாரம் கட்டுமலையின் உச்சியில் சுவாமிநாத பெருமானை சுற்றியும் அமைந்துள்ளது. தெற்கு நோக்கிய ராஜகோபுரம் ஐந்து நிலைகளை உடையது.
இங்குள்ள முருகப்பெருமானான சுவாமிநாதனை தரிசிக்க நாம் அறுபது படிகள் மேலே ஏறிச் செல்ல வேண்டும். அறுபது தமிழ் வருடங்களின் பெயர்களைத் தாங்கி நிற்கும் அறுபது படிகளும் இரண்டு பகுதிகளாக அமைந்துள்ளன. இந்தக் கோயிலில் அமைந்துள்ள அறுபது படிகளும் தமிழ் வருடங்களின் தேவதைகள் சுவாமியை பிரார்த்தனை செய்து படிகளாக உள்ளதாக ஐதீகம். தமிழ் வருடப் பிறப்பான புத்தாண்டு அன்று இந்தப் படிகளுக்கு வஸ்திரம் சாத்தி, தேங்காய் பழம் வைத்து பூஜை நடத்தப்படுகிறது. இதற்கு, ‘திருப்படி பூஜை’ என்று பெயர். இந்தத் தலத்தில் இது மிகவும் விசேஷமான ஒன்றாகும்.
திருமணப் பேறு, குழந்தை பாக்கியம், குடும்ப ஐஸ்வர்யம், தீர்க்க ஆயுள், உத்தியோக உயர்வு என பலவற்றுக்காகவும் பக்தர்கள் இத்தல முருகப்பெருமானை வேண்டிக் கொண்டால் உடனே அதற்குரிய பலன்களைத் தந்தருளுகிறார். கும்பகோணத்தில் இருந்து 8 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்திருக்கிறது சுவாமிமலை திருக்கோயில்.