Thirumalai Tirupati 
ஆன்மிகம்

ஏழுமலையான் குடியிருக்கும் ஏழு மலைகள்!

சேலம் சுபா

திருமலை திருப்பதிக்குச் செல்பவர்கள் ஏழுமலைகளைக் கடந்தே பெருமாளை தரிசிக்க வேண்டும். சிவந்த நிறத்தில் அடுக்கி வைத்த கற்கோட்டை போல சீராக காட்சி தரும் இந்த மலைகளின் அழகு அனைவரையும் பரவசப்படுத்தும். மேலும், இங்குள்ள எண்ணற்ற மூலிகைளின் மணம் நம்மை மயக்கி மனதை அமைதிப்படுத்தும்.

இந்த ஏழு மலைகளை மையமாக்கி பெருமாள் குடிகொண்டதால் இவருக்கு 'மலையப்பர்', 'மலை குனிய நின்றான்' என்ற சிறப்புப் பெயர்களும் உண்டு. இவை தவிர, சீனிவாசன், கோவிந்தன், வேங்கடாஜலபதி என்று பல பெயர்கள் கொண்ட திருமலைநாதன்,  ஏழுமலையான்  என்றும் அழைக்கப்படுவதிலேயே இந்த மலைகளின் சிறப்பை நாம் அறியலாம். ஆன்மிக நிகழ்வுகளால் தனித்தனி பெருமை பெற்ற அந்த ஏழு மலைகளைப் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.

வேங்கட மலை: ‘வேம்’ என்றால் பாவம், ‘கட’ என்றால் நாசமடைதல், அதாவது பாவங்களைப் போக்கும் மலை என்பதால் இந்த மலைக்கு வேங்கடமலை என்று பெயர். இந்த மலையில் நமது பாதங்கள் பட்டதும் நமது தீவினைகள் எரிந்து சாம்பலாகிவிடும். இம்மலையில் மகாவிஷ்ணு வேங்கடாஜலபதியாகக் காட்சி தருகிறார்.

சேஷ மலை: பெருமாளின் அவதாரத்திற்கு உதவும் பொருட்டு  அவர் பள்ளிகொண்ட ஆதிசேஷனும் மலையாக வந்தார். இந்த மலையின் அழகு நம் மனதை கொள்ளை கொள்ளும். அவதாரத்துக்காக வந்து பெருமாளைத் தாங்கும் ஆதிசேஷன் பெயரால் ‘சேஷமலை’ என்று இந்த கலியுகத்தில் இது அழைக்கப்படுகிறது.

வேத மலை: இந்து தர்மத்தின் அடிப்படையான வேதங்கள் அனைத்தும் இங்கு வந்து மலை வடிவில் தங்கி வேங்கடாசலபதியை வணங்கி ஆராதித்தன. எனவே, இது ‘வேதமலை’ என்று அழைக்கப்படுகிறது.

கருட மலை: இந்த மலைக்கு சுவாமியை வணங்க வந்த கருடாழ்வார் வைகுண்டத்தில் இருந்து  ஏழுமலையானை சுமந்து வந்தார். அதனால் இந்த மலை கருட மலை எனவும் பெயர் பெற்றது.

விருஷப மலை: விருஷபன் (ரிஷபாசுரன்) என்ற அரக்கன் இங்கு வந்து நரசிம்மரை நினைத்து கடும் தவமிருந்தான். அந்தத் தவத்தில் மகிழ்ந்து நரசிம்ம அவதாரமாகவே பெருமாள் தோன்றி காட்சி அளித்தார். அப்போது, ‘நான் உங்களுடன் சண்டையிட வேண்டும்’ என ரிஷபாசுரன் வரமாகக் கேட்டான். பக்தனின் வேண்டுதலுக்கு இசைந்த நரசிம்மருடன் சண்டையிட்டு மோட்சம் பெற்றான் என்பதால் இந்த மலைக்கு ‘விருஷப மலை’ என்று பெயர். தற்போது ரிஷபாத்ரி என்ற பெயரில் இது அழைக்கப்படுகிறது.

அஞ்சன மலை: ஆஞ்சனேயரின் தாய் அஞ்சனை தனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் பொருட்டு ஆதிவராகரை வேண்டி தவம் இருந்தார். அதன் பலனாக  ஆஞ்சனேயரை பெற்றார். இவரது பெயரால்  இந்த  மலை, ‘அஞ்சன மலை’ எனப்படுகிறது.

ஆனந்த மலை: ஆதிசேஷனுக்கும், வாயு பகவானுக்குமிடையே ஒருமுறை கடும் போட்டி ஏற்பட்டபோது, மகாவிஷ்ணுவே நடுவராக இருந்தார். இருவரும் பலத்தில் சமமானவர்கள் என்று தீர்ப்பும் அளித்தார். இதனால் வாயுவும் ஆதிசேஷனும் ஆனந்தம் அடைந்தனர். இதன் காரணமாக இந்த மலைக்கு ‘ஆனந்த மலை’ என்று பெயர் வந்தது.

திருமலை திருப்பதி செல்பவர்கள் சிறப்பு பெற்ற இந்த ஏழு மலைகளையும் வணங்கி பெருமாளை வழிபட்டால் நிச்சயம் வாழ்வில் நல்ல திருப்பம் ஏற்படும்.

தவறுகளை ஒப்புக்கொள்வது உங்களை அடுத்த உயரத்துக்கு எடுத்துச்செல்லும்!

தாவரங்களுக்கும் உயிர் உண்டு என்பதை நிரூபித்த முதல் இந்திய விஞ்ஞானி!

உளவியல் விஞ்ஞானிகளுக்கு ஆன்மிகத்தின் அதிசயத்தை உணர்த்திய ஸ்ரீ சத்ய சாயி பாபா!

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

SCROLL FOR NEXT