Kottai Mariamman is the fortress of Dindigul! 
ஆன்மிகம்

திண்டுக்கல்லின் அரணாக விளங்கும் கோட்டை மாரியம்மன்!

நான்சி மலர்

‘திண்டுக்கல்’ என்ற பெயர் வரக் காரணம், இந்த ஊரில் அமைந்திருக்கும் மலை திண்டு போல பெரிய கல் மலை என்பதால் திண்டுக்கல் என்ற பெயர் பெற்றது. இக்கோவில் 300 ஆண்டுகள் பழமையானது என்று சொல்லப்படுகிறது. பாண்டியர்களுடைய வடக்கு எல்லையாக இருந்ததுதான் திண்டுக்கல். திண்டுக்கல்லுக்கு அரணாக இருந்து காக்கும் கோட்டை மாரியம்மனைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.

கோட்டை மாரியம்மன் பாண்டியர்களின் வடக்கு எல்லைக் காவல் தெய்வமான ஸ்ரீ ராஜராஜேஸ்வரி என்ற பெயரில் இருந்தாள் என்று சொல்லப்படுகிறது. பாண்டிய மன்னனான முதலாம் சடையவர்மன் குலசேகர பாண்டியன் காலத்தில் இங்கு திருவிழாக்கள் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.

பாண்டியர்களின் வீழ்ச்சிக்குப் பிறகு அந்நியர்களின் படையெடுப்பால் கோவில் சிதைந்து போனது. திப்பு சுல்தானின் ஆட்சிக்காலத்தில் அவருடைய படை வீரர்கள் மலைக்கோட்டைக்கு கிழக்குப்பக்கத்தில் இருக்கும் மைதானத்தில் மாரியம்மனுக்கு பலிபீடம் அமைத்து மூலஸ்தான விக்ரகம் வைத்து வழிபடத் தொடங்கினர். இதுவே அவர்களுக்கு காவல் தெய்வமாக மாறியது. இப்படி காவல் தெய்வமாக அருள்பாலிக்கத் தொடங்கிய மாரியம்மன் இன்று திண்டுக்கல் மாநகருக்கே காவல் தெய்வமாகி கோட்டை மாரியம்மன் பக்தர்களுக்கு கேட்கும் வரங்களை வாரி வழங்கிக்கொண்டிருக்கிறாள்.

திண்டுக்கல் மக்களின் இஷ்டதெய்வமாக கோட்டை மாரியம்மன் இருக்கிறாள். எந்த மதபாகுபாடும் இல்லாமல் அனைத்து மதத்தினரும் இந்த மாரியம்மனை வணங்குகின்றனர். கோவில் கருவறையில் அமர்ந்த வண்ணம் மாரியம்மன் எட்டுக் கைகளுடன் காட்சியளிக்கிறாள். இதில் வலது கைகளில் பாம்பு, சூலாயுதம், மணி, கபாலம் உள்ளது. அம்மனின் இடது கைகளில் வில், கிண்ணம், பாம்பு ஆகியவை காணப்படுகிறது.

இக்கோயிலில் ஆண்டுதோறும் மாசி மாதத்தில் 20 நாட்கள் அம்மனுக்கு விழா சிறப்பாக நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அம்மனின் சிலை அடிப்பகுதி பூமியில் ஆழமாக புதைந்திருப்பது சிறப்பாகும். வேறு எந்த அம்மன் கோவிலிலும் இல்லாத சிறப்பாக அம்மன் பெருமாளின் தசாவதாரக்கோலத்தில் காட்சியளிப்பார் என்பது தனிச்சிறப்பாகும்.

அம்மனிடம் வேண்டுதலுக்கு நேர்த்திக்கடனாக மாவிளக்கு போடுதல், பூக்குழி இறங்குதல், தீச்சட்டி எடுத்தல், பால்குடம் எடுத்தல் போன்றவற்றை பக்தர்கள் நிறைவேற்றுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இத்தகைய சக்தி வாய்ந்த கோட்டை மாரியம்மனை ஒருமுறை சென்று தரிசித்துவிட்டு வருவது சிறப்பாகும்.

திப்பு சுல்தானை ஆங்கிலேயரிடமிருந்து காத்த திண்டுக்கல் மலைக்கோட்டை பெருமை தெரியுமா?

இவள் இருட்டில் மட்டுமே வருவாள்! 

புரதம் நிறைந்த சோயா கீமா செய்யலாம் வாங்க! 

மாதச் சம்பளம் வாங்குபவர்கள் செய்யும் 6 நிதித் தவறுகள்! 

ஆரஞ்சு Vs சாத்துக்குடி: எது சிறந்தது?

SCROLL FOR NEXT