Highlights of Thiruchendur Paneer Leaf Vibhuti Prasadam https://tamil.oneindia.com
ஆன்மிகம்

திருச்செந்தூர் பன்னீர் இலை விபூதி பிரசாதத்தின் சிறப்புகள்!

ஆர்.ஜெயலட்சுமி

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வழங்கப்படும் பன்னீர் இலை விபூதி பிரசாதம் தனித்துவமும் மகிமையும் வாய்ந்தது. இது தீராத நோய்களையும் தீர்க்கும் குணமுடையது . சூரபத்மனை போரில் வென்று மயிலாவும் சேவலாகவும் தன்னுடன் வைத்துக் கொண்டவர் முருகப்பெருமான். திருச்செந்தூரில் பன்னீர் இலை விபூதி பிரசாதம் தினமும் காலை விஸ்வரூப தரிசனத்தின்போது சுவாமி பாதத்தில் வைத்து பூஜித்து பக்தர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. பன்னீர் இலையை நேராக வைத்து பார்த்தால் முருகப்பெருமானின் வேல் போன்று காட்சியளிக்கும். திருநீற்றை பன்னீர் இலையில் பத்திரமாக வைத்துக் கொள்வது செல்வத்தை சேமிப்பது போலாகும்.

முருகனுக்கு ஒரு பக்கத்துக்கு ஆறு கரங்கள் என இரு பக்கத்துக்கு மொத்தம் 12 கரங்கள். பன்னீர் மரத்தின் இலையில் 12 நரம்புகள் உள்ளன. பன்னீரு இலை என்பது மருவி பன்னீர் இலையானது. முருகப்பெருமான் தனது பன்னிரு கரங்களால் விசுவாமித்திரரின் காச நோய் நீங்குவதற்காக திருநீறு அளித்ததின் தாத்பரியம் இது என விவரிக்கிறது தல புராணம்.

சூரபத்மனை வதம் செய்து முடித்த பின் போர் காயங்கள் ஆற வேண்டும் என்பதற்காக முருகப்பெருமான் தனது பரிவாரங்களுக்கு பன்னிரு கைகளினால் விபூதி பிரசாதம் வழங்கினார் என்பது தல புராணம். சூர சம்ஹாரம் முடிந்த பின்னர் அசுரர்களை எதிர்த்துப் போரிட்ட முப்பத்து முக்கோடி தேவர்களும் பன்னீர் மரங்களாக உள்ளனர் என்பது ஐதீகம் . பன்னீர் மர இலைகள் வேத மந்திர சக்தி உடையவை என்கிறது புராணம் . பன்னீர் இலையில் பத்திரப்படுத்தப்படும் விபூதியிலும் வேத மந்திர சக்திகள் நிறைந்து விடுகின்றன.

தாடகை என்னும் பெண்ணை ஸ்ரீராமபிரான் மூலமாக வதம் செய்த காரணத்தினால் தனக்கு ஏற்பட்ட குன்மம் முதலான நோய்கள் தீர ஸ்ரீராமபிரான் கனவில் கூறியபடி செந்தில் ஆண்டவர் இலை விபூதியை  தரித்துக் கொண்டு நோய் நீங்க பெற்றார் விசுவாமித்திர மகரிஷி.

திருமணத்தடையால் பாதிக்கப்பட்டவர்கள், குழந்தை இல்லாதவர்கள், தீராத நோயினால் தவிப்பவர்கள் திருச்செந்தூர் செந்தில் ஆண்டவரை மனதார வேண்டிக்கொண்டு உறவினர் மற்றும் நண்பர்கள் மூலமாக பன்னீர் பிரசாதத்தை பெற்று நெற்றியில் வைத்துக்கொண்டால் தீராத நோய்களும் தீரும், தடைகளும் அகலும் என்பது நம்பிக்கை.

350 ஆண்டுகளுக்கு முன்னர் திருவாரூர் ஆதீனத்தைச் சேர்ந்த ஸ்ரீலஸ்ரீ தேசிக மூர்த்தி தம்பிரான் செந்தூர் மேல கோபுரத்தை நிர்மாணித்தார். அச்சமயம் பொருள் பற்றாக்குறை ஏற்பட, கூலியாட்களுக்கு கூலிக்கு பதிலாக இலை விபூதியை கொடுத்து தூண்டுகை விநாயகர் கோயில் தாண்டிச் சென்ற பின் திறந்து பார்க்கும் படி கூறினாராம் . அதன்படி அவர்கள் திறந்து பார்த்தபோது தத்தம் வேலைக்குரிய கூலி அதில் வைக்கப்பட்டிருப்பதை பார்த்து மெய்சிலிர்த்தனர் என்கிறது கோயில் வரலாறு.

‘வலிப்பு, குஷ்டம், ஷயம், நீரிழிவு, குன்மம் முதலிய கொடுமையான வியாதிகளும் பூத பிரேத பிசாசங்கள் பற்றியதால் உண்டாகும் துன்பங்களும் உன்னுடைய இலை விபூதி பிரசாதத்தை பூசி கொண்ட மாத்திரத்தில் மறைந்து விடுமே’ என்கிறது ஆதிசங்கரர் அருளிய சுப்ரமணிய புஜங்கத்தின் ஒரு ஸ்லோகம்.

சென்னையில் அதிகரித்து வரும் காற்று மாசு!

மைக்ரோ கீரைகள் பற்றி தெரியுமா உங்களுக்கு? சாகுபடி முறை இதோ!

Buddha Quotes: புத்தரின் 15 வாழ்வியல் கருத்துக்கள்!

இரவில் தாமதமாக சாப்பிடுபவரா நீங்க? அச்சச்சோ, அது ரொம்ப தப்பாச்சே!

காலம் காலமாக நின்று பேசும் மாமல்லபுரமும் மறக்கப்பட்ட மாமல்லனும்!

SCROLL FOR NEXT