அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு 
ஆன்மிகம்

பழநியில் இன்று தொடங்குகிறது அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு!

ஆர்.ஜெயலட்சுமி

மிழக இந்து சமய அறநிலையத்துறை சார்பில், 'அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு' பழநியில் உள்ள பழநியாண்டவர் கலை - பண்பாட்டு கல்லூரியில் இன்று (சனிக்கிழமை) தொடங்குகிறது. இன்றும் நாளையும் (24.08.2024 - 25.08.2024) இம்மாநாடு நடைபெற உள்ளது. முருகப்பெருமான் அருள்பாலிக்கும் அறுபடை வீடுகளையும் அதன் சிறப்புகளையும் குறித்து இந்தப் பதிவில் காண்போம்.

பழநியில் நடைபெறும் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கண்காட்சியில் முருகனின் ஆயுதமான வேல், சிவலிங்கம், அறுபடை வீடுகளில் உள்ள முருகனின் திருக்காட்சிகள் தத்ரூபமாக பைபர் சிலைகளாக வடிவமைக்கப்பட்டுள்ளன. கல்தூண் மண்டபம் போன்று இந்த அரங்கு அமைக்கப்பட்டுள்ளது. கண்காட்சியில் முருகனின் திருப்பெயர்கள் முருகனின் பெயரிலுள்ள பெண்களுக்கான பெயர்கள் தமிழகம் மட்டுமின்றி, உலக நாடுகளில் உள்ள புகழ்பெற்ற முருகனின் திருக்கோயில்கள் குறித்த விவரங்கள் உள்ளிட்ட அரிய தகவல்கள் வண்ண ஓவியங்களாக இடம் பெற்றுள்ளன.

முருகப்பெருமானுக்கு ஆறு படை வீடுகள் உள்ளன. அதில் முதல் படை வீடு திருப்பரங்குன்றம், இரண்டாம் படை வீடு திருச்செந்தூர், மூன்றாம் படைவீடு பழநி, நான்காம் படைவீடு சுவாமிமலை, ஐந்தாம் படை வீடு திருத்தணி, ஆறாம் படை வீடு பழமுதிர்ச்சோலை. இந்த ஆறு படை வீடுகளுக்கும் தனித்தனி சிறப்புகள் உள்ளன.

முதல் படை வீடு - திருப்பரங்குன்றம்: முருகப்பெருமானின் ஆறு படை வீடுகளில் முதல் படை வீடு திருப்பரங்குன்றம். இங்கு மலை வடிவில் சிவபெருமான் அருள்புரிகிறார். முருகன் சூரபத்மனை போரில் வென்ற பிறகு இந்திரன் தனது மகள் தெய்வானையை முருகனுக்கு மணம் முடித்து வைக்கிறார். அதனால் இங்கு முருகன் தெய்வானையுடன் மணக்கோலத்தில் அமர்ந்த நிலையில் காட்சி தருகிறார். இத்தலத்தில் முருகனை வழிபடுபவர்களுக்கு திருமண வாழ்க்கையில் எந்த பிரச்னையும் வராமல் மகிழ்ச்சியான வாழ்க்கை அமைகிறது.

இரண்டாம் படை வீடு - திருச்செந்தூர்: உலகளவில் பிரசித்தி பெற்றது திருச்செந்தூர். கடலோரத்தில் ரம்மியமாய் அமைந்துள்ளது இந்தத் தலம் திருச்சீரலைவாய் என்றும் சூரபத்மனை அழித்த ஜெயந்தன் என்பதால் ஜெயந்திபுரம் என்றும் அழைக்கப்படுவது உண்டு. கந்த புராணத்தில் முருகன் சூரபத்மனை அழித்த இடம் திருச்செந்தூர் என்று கூறப்படுவதால் இந்த இடம் குரு ஸ்தலமாக விளங்குகிறது. இங்குள்ள நாழி கிணறு மிகப் பிரசித்தி பெற்றது. அதனுடன் முருகப்பெருமானே சிவபெருமானுக்கு பூஜை செய்யும் ஐந்து லிங்கங்களும் இங்கு உள்ளன. இங்கு கந்த சஷ்டி மிகப் பிரபலமான விழா. சூரசம்ஹாரம் திருச்செந்தூரில் காண வேண்டிய ஒன்று. கந்த சஷ்டிக்கு ஆறு நாட்களும் பக்தர்கள் விரதம் இருந்து திருச்செந்தூர் முருகனை வழிபட்டு பேரருள் பெறுகிறார்கள்.

மூன்றாம் படை வீடு பழநி: முருகப்பெருமானின் மூன்றாம் படைவீடு பழநி. இத்தல முருகர் சிலை மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த சிலையை வடிவமைத்தவர் போகர் எனும் சித்தர். நவ பாஷாணத்தால் இந்த சிலை உருவாக்கப்பட்டுள்ளது. உலகைச் சுற்றி ஞானப் பழத்தை பெறும் போட்டியில் பிள்ளையாருடன் ஏற்பட்ட கோபத்தால் இங்கு இருக்கும் முருகன் தண்டாயுதபாணியாக காட்சி தருகிறார். பழநி பஞ்சாமிர்தம் என்பது தனி சிறப்பானது.

முருகனின் அறுபடை வீடு

நான்காம் படை வீடு - சுவாமி மலை: நான்காம் படை வீடு சுவாமி மலை. தகப்பனுக்கு பாடம் சொன்ன சுவாமி. பிள்ளையின் வாயால் பிரணவ மந்திரத்தின் பொருளைக் கேட்க பிள்ளையை குருவாக ஏற்று சிவபெருமான் சீடனாக அமர்ந்த இடம் இந்த சுவாமிமலை. அதனால் இவர் சிவகுருநாதன் என்று அழைக்கப்படுகிறார். இவரை வணங்கினால் அறிவாற்றல் பெருகும் என்பது ஐதீகம். குழந்தைகள் கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்க இத்தல முருகப்பெருமானை வழிபட்டு வருகிறார்கள் பக்தர்கள்.

ஐந்தாம் படை வீடு - திருத்தணி: முருகப்பெருமானின் ஐந்தாம் படை வீடு திருத்தணி. சூரபத்மனை வதம் செய்த பிறகும் கோபம் தணியாத முருகப்பெருமான் திருத்தணிக்கு சென்று தனது கோபத்தை தணித்துக் கொண்டதாக ஐதீகம். அங்கு கோபத்தை தணிகை செய்ததால் அது திருத்தணியை ஆயிற்று. மேலும், இங்குதான் தமையன் பிள்ளையாரின் உதவியுடன் வேடர் குலத்தில் பிறந்த வள்ளியை திருமணம் செய்தார் என்கிறது வரலாறு.

ஆறாம் படை வீடு - பழமுதிர்ச்சோலை: முருகப்பெருமானின் கடைசி படை வீடு இது. ஆறு படை வீடு அழகர்மலை பழமுதிர்சோலை ஒரு சோலை வனமாகும். ‘சுட்ட பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா?’ என்று அவ்வையிடம் கேட்ட சுட்டி பையன் யார் என்பதை அவ்வை அறிந்து கொண்ட இடம் இதுதான். இதன் மூலம் உலக வாழ்க்கைக்கு கல்வியறிவுடன் இறையருள் என்னும் மெய்யறிவு அவசியம் என்பதை உணர்த்திய இடமும் இதுதான். சிறுவனாய் அவ்வைக்கும் வயோதிகனாய் நக்கீரனுக்கும் காட்சியளித்த இடம் இந்த பழமுதிர்சோலையாகும்.

முருகப்பெருமானின் ஆறு படை வீடுகளையும் தரிசித்து அழகன் முருகனின் அருளைப் பெற்று பெருவாழ்வு வாழ்வோம்.

திப்பு சுல்தானை ஆங்கிலேயரிடமிருந்து காத்த திண்டுக்கல் மலைக்கோட்டை பெருமை தெரியுமா?

இவள் இருட்டில் மட்டுமே வருவாள்! 

புரதம் நிறைந்த சோயா கீமா செய்யலாம் வாங்க! 

மாதச் சம்பளம் வாங்குபவர்கள் செய்யும் 6 நிதித் தவறுகள்! 

ஆரஞ்சு Vs சாத்துக்குடி: எது சிறந்தது?

SCROLL FOR NEXT