Aippasi Annabhishekam 
ஆன்மிகம்

இரை தந்த இறைவனுக்கு இரையாலேயே அபிஷேகம்!

ஐப்பசி அன்னாபிஷேகம்

மாலதி சந்திரசேகரன்

பொதுவாக, ஒவ்வொரு மாதத்திலும் வரும் பௌர்ணமி திதியில் ஒவ்வொரு விசேஷம் அமைந்திருக்கும். இந்த ஐப்பசி மாதத்தில் வரும் பௌர்ணமிக்கு எல்லா பௌர்ணமிகளையும் விட அதிகமான சிறப்பு உண்டு. அன்றுதான், எல்லா சிவன் கோயில்களிலும் பிரம்ம ஸ்வரூபமான லிங்க மூர்த்திக்கு அன்னத்தினால் அபிஷேகமும்,  காய், கனி, பக்ஷணங்களினால் அலங்காரமும் சிறப்பாக நடைபெறும்.

இந்த வருடம் ஐப்பசி மாத பௌர்ணமி தினத்தன்று அஸ்வினி, பரணி, கார்த்திகை ஆகிய மூன்று நட்சத்திரங்களும் சேர்ந்து வருகிறது. இப்படி வருவது மிகவும் விசேஷமாகக் கருதப்படுகிறது. சில கோயில்களில் அஸ்வினி நட்சத்திரம் இருக்கும் நேரத்தில் அன்னாபிஷேகம் செய்கிறார்கள். சில கோயில்களில் பௌர்ணமி திதியை வைத்து சிவனுக்கு அன்னாபிஷேகம் செய்கிறார்கள். அஸ்வினி நட்சத்திரமானது நவம்பர் மாதம் 14ம் தேதி அதிகாலை 1.50 மணிக்கு தொடங்கி நவம்பர் 15ம் தேதி நள்ளிரவு 12.10 மணி வரை உள்ளது. பௌர்ணமி திதியானது 15ம் தேதி அதிகாலை 3.50 மணிக்கு தொடங்கி 16ம் தேதி அதிகாலை 3.40 மணி வரை உள்ளது. ஆகையால் அவரவர்கள் வீட்டிற்கு அருகில் இருக்கும் சிவன் கோயில்களில் என்றைக்கு அன்னாபிஷேகம் செய்கிறார்கள் என்பதை தெரிந்துகொள்ள வேண்டும். எதற்கு என்றால் அன்னாபிஷேகத்திற்கு நம்மால் இயன்ற அரிசியைக் கொடுத்தால், எப்பொழுதும் வீட்டில் அன்னக்குறை ஏற்படாது என்று கூறப்படுகிறது.

எதனால் சிவனுக்கு அன்னத்தினால் அபிஷேகம் செய்யப்படுகிறது என்பது தெரியுமா? தக்ஷ பிரஜாபதிக்கு 27 பெண் குழந்தைகள் இருந்தார்கள். அவர்கள் எல்லோரும் மிகவும் ஒற்றுமையாக இருந்து வந்தார்கள். ஒரு நாள் அவர்கள் அனைவரும் தோட்டத்தில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தபொழுது, வானில் முழு நிலா தெரிந்தது. அதைக் கண்ட பெண்கள் நிலவின் அழகை குறித்து வர்ணனை செய்தார்கள். அதைக் கேட்ட அவர்களின் தந்தை தக்ஷன், “சந்திரனையே உங்களுக்கு திருமணம் செய்து வைக்கிறேன் சம்மதமா?” என்று கேட்டார். அனைவரும் ஆவலுடன் அதற்கு ஒப்புக்கொண்டார்கள். அனைவரையும் சந்திர தேவனுக்கே மணம் முடித்து வைத்தார். ஆனால், சந்திரனோ 27 பேர்களில் ரோஹிணியிடம்தான் அதிகமான பற்று வைத்திருந்தான். அதனால் மற்றவர்கள் மிகவும் வருத்தப்பட்டார்கள். தந்தையிடம் தங்கள் குறையை வெளிப்படுத்தினார்கள். இதனால் கோபம் கொண்ட தந்தை தக்ஷன் சந்திரனிடம், “உனக்கு எல்லோரையும் சமமாக நடத்தத் தெரியவில்லை. என் பெண்களை மனம் வருத்தப்படும்படி செய்து விட்டாய். நீ இவ்வளவு அழகாக இருப்பதினால்தானே உனக்கு கர்வம் அதிகமாக இருக்கிறது. உன்னுடைய அழகு குறையட்டும்” என்று சாபம் கொடுத்தார்.

அன்றிலிருந்து சந்திரனின் கலைகள் படிப்படியாக குறைய ஆரம்பித்துவிட்டது. இதனால் மனம் வருந்திய சந்திரன்,  தக்ஷனிடம் மன்னிப்பு கேட்டான். சாபத்தை திரும்பப் பெற முடியாது என்பதனால் தக்ஷன், பிரம்மனை குறித்து வழிபடச் சொன்னார். பிரம்மனும்  சிவபெருமானை அணுகுமாறு கூறினார்.

சிவபெருமானைக் குறித்து தவமிருந்த சந்திரனுக்கு, சிவபெருமான் காட்சி கொடுத்து,  “கொடுத்த சாபத்தை  நீக்க முடியாது. ஆனால், உனது கலைகள் மறைந்தால் மீண்டும் படிப்படியாக அவை வளரும்படி நான் உனக்கு அனுக்கிரகம் செய்கிறேன்” என்று கூறி மூன்றாம் கலையை தனது  சிரசில் சூடிக்கொண்டார். அதனால்தான் மூன்றாம் பிறையைப் பார்த்தால் சிவனுடைய கடாட்சம் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது. சந்திரனுடைய கலைகள் தேய்ந்து மீண்டும் படிப்படியாக வளர்ந்து பூரண பொலிவுடன் திகழ்ந்த நாளே ஐப்பசி பௌர்ணமி நாளாக அனுசரிக்கப்படுகிறது. நவக்கிரகங்களில் சந்திரனுக்கு உகந்த தானியம் அரிசி என்பதால் அந்த அரிசியை சமைத்து பகவானுக்கு அன்னாபிஷேகம் செய்கிறார்கள்.

மேலும், பிரம்மனின் ஒரு சிரசைக் கொய்ததினால் சிவபெருமானுக்கு பிரம்மஹத்தி தோஷம் உண்டானது. பிரம்மனின் கபாலமும் அவர் கையில் ஒட்டிக்கொண்டது. அந்த கபாலத்தோடு அவர் பிக்ஷை ஏந்தி வந்தார். அந்தக் கபாலம் நிறைந்த பின்தான் அது அவரது கையில் இருந்து விடுபடும் என்பதால் காசி அன்னை அன்னபூரணி அன்னத்தை இட்டு அந்த கபாலத்தை நிறப்பினாள். அந்தக் கபாலமும் சிவனின் கையில் இருந்து விடுபட்டது. இது நிகழ்ந்ததும் ஒரு ஐப்பசி பௌர்ணமி அன்றுதான். அதனால்தான் அன்னத்திற்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.

அன்னாபிஷேகத்தை கண்ணாறக் காண்பவர்கள் நிச்சயம் மோக்ஷத்தை அடைவார்கள் என்று நம்பப்படுகிறது. அன்னாபிஷேகம் செய்த பிரசாதத்தை உண்பவர்களுக்கு குழந்தை பாக்கியம் நிச்சயம் கிட்டும். மணமாகாமல் இருந்தால் மண வாழ்க்கை நல்லபடியாக அமையும். விவசாயம் செய்பவர்களுக்கு நல்ல விளைச்சல் உண்டாகும். ஊர் செழிப்பாக இருக்கும். குடும்பத்தில் எந்த மனக் குறையும் ஏற்படாது என்று நம்பப்படுகிறது.

வீட்டில் சிவலிங்கம் வைத்திருப்பவர்கள், லிங்கம் மூடும்படியாக பச்சரிசி அன்னத்தினால் அபிஷேகம் செய்யலாம். ஆனால், ஒன்றரை மணி நேரத்திற்கு மேல் அதை அப்படியே விட்டு வைக்கக் கூடாது.  போர்த்தி இருக்கும் அந்த அன்னத்தை நம் உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

ஓம் நமசிவாய வாழ்க...
ஓம் நாதன் தாள் வாழ்க...

வாழ்க்கை என்பது கொடுக்கல் வாங்கல் மட்டுமல்ல…

புடவைக் கட்டும் பொழுது பெண்கள் செய்யக்கூடாத 9 தவறுகள்!

நிமிர்ந்த நடைக்கு ஆதாரமான முதுகெலும்பை பராமரிக்க 10 எளிய வழிகள்!

புதுமைக்கொரு எடுத்துக்காட்டு; துணிச்சலுக்கு ஓர் அடையாளம் - HBD பார்த்திபன் Sir!

நிக்ரஹம் செய்யத் தெரியாதவள்!

SCROLL FOR NEXT