Kizhavikku Payanthukondu Pogum Tirupati Ezhumalaiyaan https://www.way2astro.in
ஆன்மிகம்

கிழவிக்கு பயந்துகொண்டு போகும் திருப்பதி ஏழுமலையான்!

ஆர்.ஜெயலட்சுமி

திருப்பதி அருகில் உள்ள மங்காபுரம் கிராமத்தில் ஒரு மூதாட்டி இருந்தாள். அவளது பெயர் கங்கம்மா. சுண்டல் விற்பது அவளுக்குத் தொழில். அதில் கிடைத்த சொற்ப வருமானத்தில் அவள் தனது வாழ்க்கை நடத்தினாள். அவளது கணவரும் இறந்துவிட்டார். பிள்ளைகளும் இல்லை. ‘ஏன்தான் பிறந்தோமோ’ என்று அடிக்கடி புலம்புவாள். அந்தக் காலத்தில் திருப்பதி காட்டுப்பாதையில் மக்கள் கூட்டம் கூட்டமாக நடந்துதான் திருமலைக்குச் செல்வார்கள்.

அப்படி ஒரு நாள் பக்தர்கள் கூட்டம் அதிகாலைப் பொழுதில் மலையேறிக் கொண்டிருந்தது. அந்தக் கூட்டத்தை மலையடிவாரத்தில் கண்ட அந்த மூதாட்டி மலை ஏறுபவர்களிடம், ‘‘ஐயா நீங்கள் எல்லாரும் மலைக்கு எதற்காக செல்கிறீர்கள்?’’ என்று ஒன்றும் அறியாதவளாய் கேட்டாள். அவளுடைய  அப்பாவித்தனமான கேள்வியை கேட்டதும் பலரும் சிரித்துவிட்டனர். “என்ன பாட்டி இது கேள்வி? திருமலையின் அடிவாரத்தில் இப்படியும் ஒருத்தியிருக்கியே! மேலே பெருமாள் கோயில் இருப்பது திருப்பதிக்காரியான உனக்கே தெரியாதா?” என்று கோபித்துக் கொண்டனர்.

உண்மையில் மலையின் மீது கோயில் இருப்பதை கூட அறியாமல் இருந்தாள் அவள். ஒரு பக்தர் மட்டும் அவள் மீது இரக்கம் கொண்டு, “அம்மா மலை மேலே ஒரு சாமி இருக்கிறார். அவரைப் போய் தரிசித்தால் இனிமேல் இப்படி பிறந்து சுண்டல் விற்கும் நிலை இருக்காது. அவனை ‘கோவிந்தா’ எனச் சொல்லி கும்பிட வேண்டும். அப்படி செய்தால் நீ செய்த பாவங்கள் எல்லாம் தீர்ந்து விடும்” என்று அவளுக்குப் புரியும் வகையில் எளிமையாக எடுத்துச் சொன்னார்.

இதைக் கேட்டாளோ, இல்லையோ சுண்டல் கூடையோடு திருமலைக்கு ஏறினாள். ஏழுமலையப்பனை கண்குளிர கண்டாள். “அப்பனே கோவிந்தா, உன்னை வணங்கினால் இனி பிறக்கவே மாட்டேனாமே. அந்த பக்தர் சொன்னார். எனக்கும் இனி பிறவி வேண்டாமையா” என்று மனம் உருகி சொன்னாள். தரிசிக்க வந்த பக்தர்கள் மலையை விட்டு கிளம்பினார்கள். அவள் மட்டும் அங்கேயே தங்கி விட்டாள். அப்போது ஒரு வயோதிகர் அங்கு வந்தார். “அம்மா சுண்டல் கொடு” என்று கேட்டார். அவளும் கொடுக்க, சாப்பிட்டுவிட்டு நடையைக் கட்டினர். “ஐயா சுண்டலுக்குக் காசு கொடுத்து விட்டுப் போங்க” என்றாள் பாட்டி.

“அம்மா நான் ஒரு கடன்காரன். கல்யாணத்துக்கு கடன் வாங்கிவிட்டு வருமானத்தை எல்லாம் வட்டியாக கட்டிவிட்டு கஷ்டப்படுகிறேன். சுண்டலுக்குக் கூட பணம் இல்லை. நாளை இங்கே வருவேன். அப்போது காசு தருகிறேன்” என்றார் கெஞ்சலாக.

“சரி, நாளை கொண்டு வாங்க” என விட்டுவிட்டாள் மூதாட்டி. தன் முன்னால் வந்து நின்றது உலகத்திற்கே படி அளக்கும் ஏழுமலையான் என்பதை பாமர பெண்ணான கங்கம்மா பாட்டி எப்படி அறிவாள்! மறுநாள் சொன்னபடி அந்த வயோதிகர் வரவில்லை. “இப்படி ஏமாற்றிவிட்டாரே கிழவர்” என அவள் பொறுமிக்கொண்டே இருந்தாள்.

ஒரு கட்டத்தில் அந்த மூதாட்டி இறந்துபோய் விட்டாள். அந்த மூதாட்டிக்கு பணத்துக்கு பதிலாக மேலான வைகுண்டத்தையே கொடுத்துவிட்டார் பரந்தாமன். ஆனாலும், அவர் மானிடப்பிறவி எடுத்து சீனிவாசன் ஆக பூமிக்கு வந்தவர் இல்லையா? பாட்டிக்கு மறுநாள் காசு கொடுப்பதாக வாக்களித்து விட்டுக் கொடுக்கவில்லையே. இதனால் தெற்கு மாட வீதியில் உள்ள அஸ்வசாலையில் இப்போதும் விழாக் காலங்களில் அவர் பவனியாக வரும்போது பாட்டிக்கு பயந்து கொண்டு, மேள தாளம் இல்லாமல் ஒளிந்து கொண்டு செல்வதாக ஐதீகம்.

பூச்சிகளின் கூட்டுக்கண்கள் பற்றி தெரியுமா? 

செம்பட்டை முடி கருகருன்னு மாறணுமா? வறண்ட கூந்தல் வளம் பெறணுமா? இதை ட்ரை பண்ணுங்க..!

சிறுகதை: என்னவள்... terms and conditions!

சென்னை அரசு மருத்துவமனையில் ஆன்மீகவாதியின் படம் வந்தக் கதை தெரியுமா?

பச்சை நிற ஏரி, யானைப் பாறை, வெந்நீர் ஊற்று - மிரள வைக்கும் அழகைக் கொண்ட 3 இடங்கள்!

SCROLL FOR NEXT