Benefits Of Giving Food To Crow Image Credits: Micoope
ஆன்மிகம்

காகத்திற்கு உணவு வைப்பதன் அவசியம் என்னவென்று தெரியுமா?

நான்சி மலர்

காலையில் உணவு அருந்துவதற்கு முன்பு முதலில் காகத்துக்கு வைத்த பிறகே சாப்பிடும் பழக்கம் பலருக்கும் உண்டு. அதற்கான காரணம் என்னவென்று தெரியுமா? காகத்திற்கு ஏன் நாம் உணவளிக்க வேண்டும் என்ற காரணத்தை இந்தப் பதிவில் காணலாம்.

காகம் சனி பகவானின் வாகனம். எமலோகத்தின் வாசலில் காத்திருக்கும் எமனின் தூதுவன் என்று காகம் சொல்லப்படுகிறது. நாம் சாப்பிடுவதற்கு முன்பு ஒரு கைப்பிடி உணவை காகத்திற்கு வைக்க வேண்டும் என்று நம் முன்னோர்கள் கூறி உள்ளனர்.

நமது முன்னோர்களின் ஆன்மா இறந்த பிறகு, தான் வசித்த இடத்திற்கு திரும்பி வரும். அவ்வாறு வரும்போது, காக்கை ரூபத்திலேயே வரும் என்று கூறுவர். அதனாலேயே காக்கைக்கு சாதம் வைப்பது மிகவும் முக்கியம். இதை தினமும் செய்ய முடியவில்லை என்றால் அமாவாசை மற்றும் முக்கிய விசேஷ நாட்களில் முன்னோர்களின் பெயரைச் சொல்லி அவர்களுக்கு எள்ளும், தண்ணீரும் வைத்துப் படைக்க வேண்டும். அப்போதுதான் அவர்கள் மனமும், வயிறும் குளிர்ந்து நமக்கு ஆசி வழங்குவார்கள் என்பது நம்பிக்கை. அவர்களின் ஆசியால்தான் நாம் நிம்மதியாக வாழ முடிகிறது. அதற்கு நன்றி செலுத்தும் பொருட்டுதான் தினசரி காகத்திற்கு உணவளிக்க வேண்டும் என்று கூறுகிறார்கள்.

காகத்திற்கு உணவளிப்பதால் வீட்டில் கணவன், மனைவி பிரச்னைகள் ஏற்படாமல் அமைதியாக வாழலாம். காகம் சனீஸ்வர பகவானின் வாகனம் என்பதால், காகத்திற்கு உணவளிப்பதன் மூலமாக சனீஸ்வரரின் கெடு பலன்களில் இருந்து விடுபடுவதோடு, இறைவனின் பரிபூரண கருணையையும், அருளையும் பெறலாம். ஏழரை சனி நடக்கும்போது காகத்திற்கு எள் கலந்த சாதம் வைப்பதன் மூலம் ஏழரை சனியின் தாக்கம் சற்றே குறையும். காகத்திற்கு உணவளிக்கும்போது அது நமது வீட்டை சுற்றியிருக்கும் பூச்சி, புழுக்களையும், ஏதேனும் இறந்து கிடந்தால் அவற்றையும் அப்புறப்படுத்துகிறது. இதனால் நோய் தொற்றுகள் எதுவும் ஏற்படாமல் பாதுகாக்கிறது.

காகத்திற்கு உணவளிக்கும்போது அது தனது கூட்டத்தையேஅழைத்து வந்து உணவை பகிர்ந்து கொள்கிறது. இதைப் பார்க்கும்போது நாமும் காகத்தைப் போல ஒற்றுமையாக வாழ வேண்டும் என்ற தத்துவத்தை நமக்கு உணர்த்துகிறது. காகத்திற்கு மிக்ஸர், திராட்சை, இனிப்பு, பிஸ்கட் போன்றவற்றை தரலாம். குடும்பத்தில் நல்ல அன்யோன்யம் பிறக்கும்.

காகங்களுக்கு சாதம் வடித்ததும் முதல் சோறு வைப்பது என்பது சிறப்பு. சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது காகம் வந்து கரைந்தால், எச்சில் சாதத்தை எடுத்துச் சென்று வைக்காமல், கையைக் கழுவிக் கொண்டு புதிய சாதத்தை காகத்திற்கு வைப்பது சிறப்பாகும். முன்னோர்களுக்கு திதி, தர்பணம் போன்றவற்றை தர முடியாதவர்கள் தினந்தோறும் காகத்திற்கு உணவு வழங்குவது மிகவும் நன்மையைத் தரும்.

இது தெரிஞ்சா இனி நீங்க பிரட் சாப்பிடவே மாட்டீங்க! 

லடாக் பயண தொடர் 5 - ஐந்து நிமிடங்களுக்கு மேல் இங்கே நிற்க அனுமதி இல்லை... அப்படி நின்றால்...?

முகத்தில் உள்ள ப்ளாக் ஹெட்ஸ் நீங்க இயற்கை வழிமுறை!

சேதமடைந்த மரப்பொருட்கள்... குப்பைகளாக உங்கள் வீட்டில் உள்ளதா? அச்சச்சோ தவறாச்சே...!

குரு நானக் அருளிய அற்புதமான நல் உரைகள்!

SCROLL FOR NEXT