ஆன்மிகம்

பசுஞ்சாண சாம்பலே பிரசாதமாகும் திருவேற்காடு கருமாரியம்மன் ஆலயம்!

எம்.கோதண்டபாணி

சென்னை புறநகர் பகுதியான திருவேற்காட்டில் அமைந்துள்ளது ஸ்ரீ தேவி கருமாரியம்மன் திருக்கோயில். இக்கோயில் தங்க விமானத்தின் கீழ் அமைந்த கருவறையில் ஸ்ரீ கருமாரி அம்மன் சுயம்பு வடிவில் சாந்த சொரூபத்துடன் காட்சி தருகிறாள். மூலவர் அம்பிகைக்குப் பின்புறம் அன்னை கருமாரி அம்மன். திருவுருவச் சிலை வடிவில் நான்கு திருக்கரங்களோடு அருள்பாலிக்கிறாள். அன்னை கருமாரி சிரசின் பின்புறம் அக்னி ஜுவாலை ஒளி வீச, நான்கு திருக்கரங்களில் கத்தி, கபாலம், டமருகம், சூலம் விளங்க அருட்காட்சி தருகிறாள்.

இந்தக் கோயிலில் அம்மனுக்கு தினமும் மாலை பிரதோஷ வேளையில் குங்கும அர்ச்சனை விசேஷமாக நடைபெறுகிறது. கருவறையில் கருமாரியம்மன் அருகில் அணையாத விளக்கு ஒன்று உள்ளது. இதை, ‘பதி விளக்கு’ என்று அழைக்கின்றனர். இந்த விளக்கைச் சுற்றி விநாயகர், முருகன், எதிரெதிரே சூரியன் மற்றும் சந்திரன் ஆகியோர் வீற்றிருப்பது விசேஷம். மேலும், இங்கு மயில், நாகம் மற்றும் சிம்ம வாகனங்களும் உள்ளன. இவற்றில் சிம்மத்தின் மீது அம்பிகை அமர்ந்திருக்கிறாள். இந்தப் பதி விளக்கு கருவறையில் எப்போதும் எரிந்துகொண்டே இருக்கிறது. அம்பிகையின் மறு ரூபமாக விளங்கும் இந்தப் பதி விளக்கையும் அம்பிகையோடு சேர்த்து பக்தர்கள் தரிசித்தால், குடும்பத்தில் எதற்கும் குறைவில்லை எனும் நிலை ஏற்பட்டு சகல சௌபாக்கியங்களோடு குலம் விளங்க வாழலாம் என்பது ஐதீகம்.

ஆடி மாத திருவிழா இந்தக் கோயிலில் மிகவும் பிரசித்தம். பெரும்பாலான கோயில்களில் திருவிழாக்கள் அதிகபட்சமாக 15 நாட்கள் வரை மட்டுமே நடைபெறும். ஆனால், திருவேற்காடு ஸ்ரீ கருமாரி அம்மன் கோயிலில் ஆடி மாத திருவிழா 12 வாரங்கள் நடைபெறும். ஆடி மாதத்தின் முதல் வாரத்தில் தொடங்கும் இந்த விழா, புரட்டாசி மாதம் வரையில் தொடரும். இதில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் அம்பிகை108 குட அபிஷேகம் நடைபெற்று வீதியுலா காண்கிறாள். ஒன்பதாம் ஞாயிற்றுக்கிழமை அம்மன் புஷ்ப பல்லக்கில் புறப்பாடாவது விசேஷம்.

பெரும்பாலான அம்மன் கோயில்களில் திருவிழாவின்போது காப்பு கட்டித்தான் விழா நடத்துவார்கள். ஆனால், திருவேற்காடு ஸ்ரீ கருமாரி அம்மன் கோயிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியே அனைத்து திருவிழாக்களும் நடத்தப்படுவது விசேஷம். அதேபோல், அம்மன் கோயில்களில் பக்தர்களுக்கு குங்குமமே பிரசாதமாக வழங்கப்படும். ஆனால், இந்தக் கோயிலில் பசுஞ்சாணத்தால் ஆன சாம்பலையே பக்தர்களுக்குப் பிரசாதமாகத் தருகின்றனர்.

இத தெரிஞ்சுகிட்டா உங்க வீட்டு டைல்ஸ் கறையை இருக்கும் இடம் தெரியாமல் நீக்கிவிடலாம்! 

உணவுச் சேர்மானங்களின் குணநலன்கள் என்னவென்று தெரியுமா?

வெளியே செல்லும்போது கருப்புப் பூனை குறுக்கே போய்விட்டதா? போச்சு! 

இந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறும் அந்த நபர் யார்?

நவகிரகங்கள் நல்கும் நன்மைகளும்; வித்தியாசமான கோல நவகிரகங்களும்!

SCROLL FOR NEXT