‘கங்கைக்கு நிகரான நதியும் இல்லை; காசிக்கு நிகரான பதியும் இல்லை’ என்பது ஆன்மிக மொழி. நமது நாட்டில் புனிதமான ஏழு நகரங்களில் காசி முதன்மையானது. இது நதிகளில் மிகச் சிறந்ததாகக் கருதப்படும் கங்கைக்கரையில் அமைந்துள்ளது. ‘கா’ என்றால் தேஜஸ் அதாவது ஒளி. ‘சி’ என்பது திருமகளைக் குறிக்கும். திருமகள் மிகவும் பொலிவுடன் வாழும் தலமே காசி என்று அழைக்கப்படுகிறது.
வருணா மற்றும் அசி என்ற இரண்டு நதிகள் இந்நகரைச் சூழ்ந்து அமைந்துள்ள காரணத்தினால் இத்தலத்திற்கு வாரணாசி என்ற பெயரும் உண்டு. வருணா மற்றும் அசி என்ற இரண்டு ஆறுகள் வடக்கிலிருந்தும் தெற்கிலிருந்தும் பாய்ந்து பின்னர் கங்கை நதியில் கலக்கின்றன. சமஸ்கிருத மொழியில் காசி என்றால் ஒளி பொருந்திய நகரம் என்று பொருள். மேலும், சுதர்ஷனா, ரம்யா, பிரம்மவர்தா என பலவிதமான பெயர்களிலும் காசி அழைக்கப்பட்டு வந்துள்ளது. புனிதமான காசி நகரமானது அவிமுக்தம், ஆனந்தகானம், உருத்திரவாசம், மாமசானம், கௌரிமுகம் என பலவிதமான பெயர்களால் அழைக்கப்படுகிறது.
காசி மாநகரில் சில விநோதமான விஷயங்கள் உண்டு. காசி நகரில் கருடன் பறப்பதில்லை. பல்லி சத்தமிடுவதில்லை. மாடு முட்டுவதில்லை. பூக்கள் மணப்பதில்லை. பிணங்கள் நாறுவதில்லை.
காசியில் பல்லிகள் சத்தமிடாததும் கருடன் பறக்காததும் காலபைரவரின் சாபத்தின் விளைவாக நடப்பதாகக் கூறப்படுகிறது. இதுபற்றிய புராணக் கதை ஒன்றும் நிலவி வருகிறது.
இராமபிரானுக்கு ராவணனை வதம் செய்த பிறகு பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட, ராமேஸ்வரத்தில் தோஷ நிவர்த்தி செய்ய சுயம்பு லிங்கம் தேவைப்பட்டது. இராமபிரான் அனுமனை அழைத்து காசியிலிருந்து ஒரு லிங்கத்தைக் கொண்டு வரும்படி கூறினார். உடனே அனுமனும் காசிக்கு விரைந்து சென்றார். ஆனால், காசியில் எங்கு நோக்கினாலும் லிங்கங்கள் தென்பட்டன. இதில் சுயம்பு லிங்கத்தை எப்படிக் கண்டுபிடித்துக் கொண்டுபோவது என்று புரியாமல் தவித்து நின்ற வேளையில் ஒரு கருடன் பறந்து வந்து ஒரு லிங்கத்தின் மேல் வட்டமிட்டபடி இருந்தது. இதைக் கண்ட அனுமனுக்கு கருடன் அந்த லிங்கத்தை குறிப்பால் உணர்த்துவதாகத் தோன்ற, அந்த சமயத்தில் பல்லி சத்தமிட்டது. பல்லியும் இதை ஆமோதிப்பதாகக் கருதி, அனுமன் அந்த லிங்கத்தை சுயம்பு லிங்கம் என நினைத்து அதை எடுத்துக் கொண்டு ராமேஸ்வரத்திற்குப் புறப்பட ஆயத்தமானார். சுயம்பு லிங்கத்தை எடுத்துக் கொண்டு செல்லும்போது காலபைரவர் அனுமன் முன்பு தோன்றி, அவரைத் தடுத்து நிறுத்தினார். காசி ஸ்தலம் முழுவதும் காலபைரவரின் கட்டுப்பாட்டில் இருந்தது. அவருடைய அனுமதியின்றி அங்கிருந்து எவரும் எதையும் எடுத்துச் செல்ல இயலாது. எனவே, அனுமன் மீது காலபைரவர் கடும் கோபம் கொண்டார்.
அனுமனை தடுத்து நிறுத்திய காலபைரவர், ‘லிங்கத்தை எடுத்துச் செல்ல அனுமதி இல்லை’ என்று தெரிவிக்க, அனுமன் ‘நான் லிங்கத்தை எடுத்துச் செல்வேன்’ எனக் கூற, இருவருக்கும் வாக்குவாதம் தோன்றி இறுதியில் இருவருக்கும் போர் மூண்டது. இதை அறிந்த தேவர்கள் இருவரையும் வணங்கி போரை நிறுத்திக்கொள்ளுமாறு வேண்டி நின்றார்கள். ‘இந்த சுயம்பு லிங்கத்தை அனுமன் உலக நன்மைக்காகவே ராமேஸ்வரத்திற்குக் கொண்டு செல்கிறார். இதைக் கொண்டு வரச் சொன்னது இராமபிரான் எனவும் கூற கோபம் தணிந்த காலபைரவர் லிங்கத்தைக் கொண்டு செல்ல அனுமனுக்கு அனுமதி அளித்தார். ஆயினும் இதற்குக் காரணமான கருடனுக்கும் பல்லிக்கும் சாபமிட்டார். கருடனை நோக்கி, ‘இனி காசி மாநகரில் நீ எங்கும் பறக்கக் கூடாது’ எனவும் பல்லியிடம் ‘இனி நீ காசி மாநகரில் சத்தமிடக் கூடாது’ எனவும் சாபமிட்டார். அன்றிலிருந்து காசியின் மீது கருடன் பறப்பதில்லை. பல்லி சத்தமிடுவதில்லை. இந்த சாபம் இன்றளவும் தொடர்கிறது.