மூலவர் ஈசன் 
ஆன்மிகம்

தோஷ நிவர்த்தி பெருமானாக அருளும் ஸ்ரீ அபயவரதேஸ்வரர்!

பழங்காமூர் மோ.கணேஷ்

திநாயகனான ஆடல்வல்லப்பெருமான், ஆதிரை நட்சத்திரத்தன்று தனது அரூப வடிவத்தை விடுத்து, சக மனித வடிவிலே அர்ச்சாரூபியாய் வெளிப்பட்டு அருளினார். அவ்வடிவமே நடராஜப் பெருமானது திவ்யத் திருவடிவமாகும். அத்தினமே, ‘ஆருத்ரா’ எனப்படும் திருவாதிரை தினமாகும். நட்சத்திரங்களின் வரிசையில் அதி உன்னதமாகத் திகழும் திருவாதிரை நட்சத்திரத்துக்குரிய தலமாக விளங்குகிறது அதிராமபட்டிணம். திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தோர், தம் வாழ்நாளில் விசேஷமாக வழிபட வேண்டிய திருத்தலமிது.

அம்பிகை சுந்தரநாயகி

சிவனுக்கு உரிய நித்யப் பிரதோஷ நேரத்திலும், திருவாதிரை நட்சத்திர நாளிலும், ஈசன் அபய கரத்துடன் பெருங்கருணை கொண்டு ஆருத்ரா நட்சத்திர மண்டலத்தை உலா வருவார். எனவே, அசுரர்கள் இம்மண்டலத்தில் நுழைய அஞ்சுவர். தேவர்கள், அசுரர்களால் துன்புறுத்தப்படும்போது அசுரர்களால் அண்ட முடியாத இப்புனிதமான திருவாதிரை நட்சத்திர மண்டலத்தில் தஞ்சம் புகுவர். வருடத்தில் ஒரு முறையே இந்த நட்சத்திரம் பூலோகத்தை அடையும். அந்நாளே மார்கழி திருவாதிரை, ஆருத்ரா தரிசன நாளாக மலர்கின்றது.

ரத்தினம் போல் ஜொலிக்கும் இந்த நட்சத்திரத்தின் அதிதேவதையாக ருத்ரன் (சிவன்), வெள்ளை நிறத்தில் சூலம், கத்தி மற்றும் அபய, வரத ஹஸ்தத்துடன் ரிஷப வாகனத்தில் அருள்பாலிக்கின்றார். இந்த நட்சத்திரத்துக்குரிய மரமாக செங்காலி மரம் திகழ்கிறது. திருவாதிரை நட்சத்திரத்துக்குரிய விசேஷமான இத்தலத்திலே எத்தகைய பாவங்களை புரிந்தவர்களும், பக்திபூர்வமாக திருந்திட விழைவோருக்கு அபய வரதராக ஸ்வாமி இங்கு அருள்மழை பொழிகின்றார்.

கோயில் கோபுரம்

சோழவள நாட்டின் காவிரித் தென்கரையில், சுந்தரரால் வைப்புத்தலமாக பாடப்பட்ட பெருமையுடைய இத்தலம், அதிவீரராமன் என்னும் பாண்டிய மன்னனால் அமைக்கப்பெற்றதால், ‘அதிராமபட்டிணம்’ என்று பின்னர் அழைக்கலாயிற்று. இம்மன்னன் இப்பகுதியை ஆட்சி செய்ததோடு, இச்சிறப்பு மிகுந்த சிவாலயத்திலும் திருப்பணிகள் பல செய்துள்ளான். இச்செய்தியை கல்வெட்டின் வாயிலாக நாம் அறியப்பெறலாம். பைரவ மகரிஷி மற்றும் ரைவத மகரிஷி ஆகியோர் இத்தல பெருமானை பூஜித்து, வரங்கள் பல பெற்றுள்ளனர். இன்றும் இவ்விரு மகரிஷிகளும் ஸ்தூல - சூக்ஷ்ம வடிவில் இப்பதி ஈசனாரை வணங்குவதாக நம்பப்படுகின்றது.

நடராஜர்

நகரின் மையமாக ஆலயம் எழிலுற அமையப்பெற்றுள்ளது. முகப்பில் மூன்றுநிலை ராஜகோபுரம் வரவேற்கிறது. உள்ளே கிழக்கு நோக்கிய சுவாமி சன்னிதி. கருவறையுள் கருணையே வடிவாக அருள்பாலிக்கின்றார் ஸ்ரீ அபயவரதேஸ்வரர். நாடி வருவோருக்கு அபயமளிப்பதோடு அல்லாமல், வரங்களையும் வாரி வழங்குபவர் இந்த ஈசன். தெற்கு நோக்கி அம்பிகை ஸ்ரீ சுந்தரநாயகி எளிய நகை சிந்தி, சுந்தரமாய் எழுந்து, எளியோர்க்கு எளியவளாய் அருட்பிரவாகிக்கின்றாள். ஏனைய கோஷ்ட மூர்த்தங்கள் முறையே ஆலயத்தை அழகு செய்கின்றன.

துர்கை

அரசுக்குச் சொந்தமான இவ்வாலயத்தில் தினமும் இரண்டு கால பூஜைகள் நடைபெறுகின்றன. இத்தல வழிபாடு ராகு - கேது தோஷம், களத்திர தோஷம், மாங்கல்ய தோஷம் போன்றவற்றை போக்கவல்ல அதியற்புதப் பதியாகும். இத்தல துர்கை மற்றும் பைரவரை வழிபட, வாழ்வில் மேன்மைகள் கூடி, மகிழ்ச்சி உண்டாகும். இங்கு வழிபட்டு, முன்ஜன்ம சாப - பாபங்களை களைந்திடலாம். தீராத நோயால் அவதிப்படுபவர்கள், எமபயம் உள்ளவர்கள், ஆயுள் விருத்தி வேண்டுபவர்கள் இத்தலத்தில் ஆயுஷ்ய ஹோமம் மற்றும் மிருத்யுஞ்சய ஹோமம் ஆகியன செய்து பலனடைகின்றனர்.

திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், திருவாதிரை தினம் மற்றும் திங்கட்கிழமைகளில் பாதாம் பருப்பு, பரங்கி, பூசணி, விளாம்பழம், சீரகம், சோளம், சீதாப்பழம், பலாப்பழம் போன்றவற்றை ஸ்வாமிக்கு நிவேதனம் செய்து, தானம் செய்தால் சிறந்த பலனையும், முயற்சிக்கும் காரியத்தில் வெற்றியும் பெற்றிடலாம்.

அமைவிடம்: தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டையில் இருந்து 12 கி.மீ. தொலைவில் உள்ளது அதிராமப்பட்டிணம். முத்துப்பேட்டை மற்றும் பட்டுக்கோட்டையிலிருந்து இங்கு வர அதிக பேருந்து வசதிகள் உள்ளன.

தாவரங்களுக்கும் உயிர் உண்டு என்பதை நிரூபித்த முதல் இந்திய விஞ்ஞானி!

உளவியல் விஞ்ஞானிகளுக்கு ஆன்மிகத்தின் அதிசயத்தை உணர்த்திய ஸ்ரீ சத்ய சாயி பாபா!

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

உடல் எடை குறைக்க விரும்புவோர் பின்பற்ற வேண்டிய லோ கிளைசெமிக் டயட்!

SCROLL FOR NEXT