நவாச்சுனை சிவலிங்கம் 
ஆன்மிகம்

நவாச்சுனையில் வீற்றிருக்கும் சிவபெருமான்!

எம்.கோதண்டபாணி

ழங்காலத்தில் ஆதிகுடிகள் வாழ்ந்த இடம் சித்தன்னவாசல் மலைப்பகுதி. இம்மலைப் பாறையைச் சுற்றிலும் கிடைத்த இறந்தவர்களின் உடல்களை அப்படியே வைத்து அடக்கம் செய்யப் பயன்படுத்திய முதுமக்கள் தாழிகளை திருக்கோகர்ணம் அருங்காட்சியகத்தில் காணலாம். கிழக்கு நோக்கியுள்ள சித்தன்னவாசல் பாறைப் பிளவுகளில் செயற்கையான கல் படுக்கைகளை உருவாக்கி, அங்கு சமயச் சான்றோர்கள் சிலர் மறைந்து வாழ்ந்திருக்கிறார்கள். இப்படி பதினேழு கல் படுக்கைகளை இன்றும் இங்கு காணலாம். கி.மு. மூன்று மற்றும் நான்காம் நூற்றாண்டு கல்வெட்டுகள் இங்கு காணப்படுகின்றன.

சித்தன்னவாசல் மலை

அயல் மனிதர்கள் யாராலும் எளிதில் கண்டறிய இயலாத அந்தப் பாறைப் பிளவுகளை அவர்கள் மறைந்து வாழப் பயன்படுத்தி இருக்கிறார்கள். இப்போது அது, ‘ஏழடி பட்டம்’ என்று அழைக்கப்படுகிறது. மலையடிவாரத்தின் மேற்குப் பக்கம் ஒரு சிறிய குகைக் கோயிலையும் அவர்கள் உருவாக்கி இருக்கிறார்கள். இதில் ஜைன தீர்த்தங்கரர்களின் திருமேனிகள் இடம் பெற்றிருப்பதோடு, தூண்களிலும் முன்மண்டப விதானப் பகுதிகளிலும் அற்புதமான வண்ணச் சித்திரங்களையும் உருவாக்கி இருக்கிறார்கள்.

நவாச்சுனை

இந்தக் கலைச் செல்வங்கள் ஒருபுறம் இருக்க, இதே மலைப்பாறையின் ஏழடிப் பட்டத்துக்கு வடக்குப் பாறையின் கீழ்ப்பகுதியில் ஒரு சுனை உள்ளது. இதன் அருகில் ஒரு நாவல் மரம் இருக்கிறது. அதனால் இதை, ‘நாவல் சுனை’ என்று வழங்கி, தற்போது அது ‘நவாச்சுனை’ ஆகிவிட்டது. அந்த சுனைக்குள் சிவபெருமான் லிங்கத் திருமேனியராக எழுந்தருளியிருப்பது மிகவும் விசேஷம். அந்த நாவல் சுனை வற்றினாலோ அல்லது நீரை இறைத்து வெளியேற்றினாலோதான் அந்த சிவலிங்கத்தை தரிசிக்க முடியும். இதை, ‘ஜம்புநாதர் குகை’ என்று வழங்குகிறார்கள். ‘ஜம்பு’ என்றால் நாவல் மரம்.

நவாச்சுனை

காஞ்சி மகாபெரியவர் இந்த ஜம்பு லிங்கத்தை தரிசனம் செய்ய எண்ணி, ராமச்சந்திரபுரம், ‘தர்மபூஷணம்’ திவான் பகதூர் தீ.நா.முத்தையா செட்டியாரிடம் கூற, அவர் பல நாட்கள் பலரது துணையோடு அந்த சுனை நீரை இறைத்து, காஞ்சி மகாபெரியவருடன் பொதுமக்களும் அந்த நவாச்சுனை சிவலிங்கத்தை தரிசிக்கச் செய்தார். நீர் இறைத்த சில நாட்களுக்குத்தான் ஜம்பு லிங்கத்தை தரிசிக்க முடியும். அதன் பிறகு மீண்டும் சுனையில் நீர் சுரந்து தண்ணீருக்குள் லிங்கம் மூழ்கிவிடும். திருவானைக்காவல் ஜம்புநாதரைப் போல, இந்தத் தலமும் நாவல் விருட்சம் கொண்ட அப்பு லிங்கத் தலமாக விளங்குகிறது. லிங்கம் எப்போதும் சுனை நீருக்குள் மூழ்கி இருப்பதால் பரிசுத்தமாகவும், புண்ணியம் செய்தவருக்கே தரிசனம் அளிப்பதாகவும் அமைந்திருப்பது விசேஷம்.

முதியோர்கள் தங்களைத் தயார்படுத்திக் கொள்ளவேண்டிய 15 விஷயங்கள்!

Tesla Pi Phone: சார்ஜும் போட வேண்டாம், இன்டர்நெட்டும் இலவசம்! 

திருமணம் செய்ய விரும்பும் நபரை வெளிப்படுத்திய ராஷ்மிகா மந்தனா!

மிளகாயை விரும்பி ஏற்கும் பிரத்யங்கிரா தேவி!

குழந்தைகளின் உடலில் கால்சியம் சத்தை அதிகரிக்க உதவும் 5 வகை பானங்கள்!

SCROLL FOR NEXT