Mahalaya patcham Annadhanam 
ஆன்மிகம்

மஹாளய பட்ச தர்ப்பணமும்; அன்னதானமும்!

மாலதி சந்திரசேகரன்

ர்ணன் மகாபாரதப் போரில் மரணித்த பிறகு, ஒரு க்ஷத்ரியனுக்கு உரிய மரியாதைகளோடு எமன் அவரை அழைத்துக் கொண்டார். எமன் கர்ணனிடம், "கர்ணா, வாழ்நாளில் நீ நிறைய புண்ணியங்களை செய்ததால் மேலுலகில் சொர்கத்தை நன்றாக அனுபவித்துக்கொள்" என்றார். அதன்படியாக கர்ணன் மகிழ்வுடன் சொர்கத்தை அனுபவிக்கிறார்.

அப்படியான சில காலம் கழித்து அவருக்கு பசிக்கிறது. தன்னுடன் உள்ளவர்களிடம், “உணவு பரிமாறும் இடம் எங்கே?” என்று கேட்கிறார். சொர்க்கவாசிகள் திகைப்படைந்து அவரிடம், "இங்கிருப்பவர்களுக்கு பசியே எடுக்காது. எனவே, உணவு உண்ணும் தேவையே இருக்காது" என்கிறார்கள்.

இதனை தேவர்களின் குருவான பிரகஸ்பதி கவனித்து விட்டு, ஆழ்ந்த தியானத்தில் இதற்கான விடையைக் கண்டுபிடிக்கிறார். பிறகு கர்ணனிடம் வந்து தேவர்கள் குருவான பிரஹஸ்பதி, கர்ணனின் ஆட்காட்டி விரலை சுவைக்கச் சொல்கிறார். கர்ணன் ஆட்காட்டி விரலைச் சுவைத்தவுடன் பசி தீர்ந்து விடுகிறது.

கர்ணன் மிகவும் வியப்படைந்து, “இதற்கான காரணம் என்ன?” என வினவுகிறார். அதற்கு குரு விளக்குகிறார், "கர்ணா பிறப்பால் நீ ஒரு வள்ளல். நீ யார் எதைக் கேட்டாலும் உடனே கொடுத்து விட்டாய். ஆனால், நீ அன்னதானம் மட்டும் செய்யவில்லை. அதனால்தான் நீ இங்கே பசியை உணர்ந்தாய்" என்றார்.

அதைக்கேட்ட கர்ணன், “ஆட்காட்டி விரலை சுவைத்தவுடன் பசி தீர்ந்து விட்டதே ஏன்?” எனக் கேட்கிறார்.

அதற்கு குரு, "கர்ணா, ஒரு சமயம் ஏழை பிராமணர் ஒருவர் உனது வீட்டிற்கு வந்து உணவு கேட்டார். நீ பொதுவாக அன்னதானம் செய்யும் வழக்கம் இல்லாததால் அதை மறுத்துவிட்டாய். ஆனால், உனது ஆட்காட்டி விரலால் அன்னதானம் நடக்கும் இடத்தை அந்த ஏழை பிராமணர்க்கு சுட்டிக் காட்டினாய். அவரும் அங்கே சென்று சாப்பிட்டு தனது பசியை ஆற்றிக்கொண்டார்.

அந்தப் புண்ணியம் உனது ஆட்காட்டி விரலில் இருந்ததால் நீ ஆட்காட்டி விரலை சுவைத்தவுடன் பசி தீர்ந்து விட்டது" என்றார். (அழும் குழந்தை வாயில் விரல் போட்டுக்கொள்ளும் பழக்கமும் இதிலிருந்துதான் வந்ததாம்).

கர்ணன் கண்களில் நீர் திரண்டு விட்டது. உடனே எமதர்மனிடம் சென்று முறையிடுகிறார். "நான் ஒரு பட்சம் (பதினைந்து நாட்கள்) மனித உடலுடன் பூலோகம் செல்ல அனுமதி வேண்டும். நான் போய் அன்னதானம் செய்து விட்டு வருகிறேன்" என்கிறார். எமதர்மராஜனும் அதற்கு அனுமதிக்கிறார்.

கர்ணனும் பூலோகம் வந்து யாரும் அவனை அடையாளம் கண்டுகொள்ளாத இடத்தில் அன்னதானம் செய்கிறார். கர்ணன் மிகவும் நல்ல நோக்கத்துக்காக அதை மகிழ்வுடன் செய்கிறார். பதினைந்து நாட்கள் முடிந்தவுடன் எமன் மீண்டும் மனித உடலைத் துறந்து விட்டு கர்ணனை சொர்கத்திற்கு வரச் சொல்கிறார். கர்ணனும் அதன்படியே மகிழ்வுடன் செல்கிறார்.

எமன் மேலும் சொல்கிறார், "மனிதர்கள் பூலோகத்தில் உள்ள சுகங்களை அனுபவிக்கவே மீண்டும் மீண்டும் பூலோகம் வர வேண்டும் என்று கேட்பார்கள். ஆனால், நீங்கள் எதற்காக மனித உடலுடன் பூலோகம் வந்தீர்களோ அதை முழுமையாக முடித்து விட்டு உங்கள் வார்த்தைகளை காப்பாற்றி விட்டீர்கள். அதனால் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன். ஆகவே, நீங்கள் இப்போது ஒரு வரம் கேட்கலாம்" என்கிறார்.

கர்ணன், "எமதர்மராஜரே, மனிதர்கள் தங்கள் முன்னோர்களுக்கு பல காரணங்களால் திதி உணவு அளிக்க மறந்து விடுகிறார்கள். அதனால் இப்போது நான் அன்னதானம் செய்த இந்த பட்சத்தில் முன்னோர்களுக்காக மனிதர்கள் செய்யும் திதி மற்றும் அன்னதானம் அவர்களின் சந்ததி உறவுகள் என கர்மங்கள் செய்ய வழி இல்லாத முன்னோர்களுக்கும் கூட சென்று அடைய வேண்டும். கர்ம வினைகளால் பூமிக்கும் சொர்கத்துக்கும் இடையில் தவிக்கும் முன்னோர்களையும் இந்த பலன் சென்றடைய வேண்டும்" எனக் கேட்கிறார்.

இதனை எமன் மகிழ்வுடன் ஒப்புக்கொள்கிறார். "கர்ணனே யார் இந்த பட்சத்தில் தர்ப்பணம் செய்கிறார்களோ, மற்றவர்களுக்கு உணவு அளிக்கிறார்களோ அவர்கள் பாக்கியம் பெற்றவர்கள்" என்கிறார்.

உலகுக்கே சூரியன் சொந்தம் என்பதால் அவரது புத்திரனான கர்ணனும் நமக்குச் சொந்தமாகிறான். அவன் பூமியில் வந்து தர்மம் செய்யும் மஹாளய பட்ச காலத்தில், நாம் எல்லோருமே முன்னோர்களை வரவேற்று தர்ப்பணம் செய்வோம், அன்னதானம் செய்வோம் என அதனைக் கடைபிடிக்கின்றனர். மஹாளய பட்ச காலத்தில், இவ்வாறு செய்வதன் மூலம் முன்னோரின் ஆசி நமக்கு பூரணமாகக் கிடைக்கும் என்பது ஐதீகம்.

திப்பு சுல்தானை ஆங்கிலேயரிடமிருந்து காத்த திண்டுக்கல் மலைக்கோட்டை பெருமை தெரியுமா?

இவள் இருட்டில் மட்டுமே வருவாள்! 

புரதம் நிறைந்த சோயா கீமா செய்யலாம் வாங்க! 

மாதச் சம்பளம் வாங்குபவர்கள் செய்யும் 6 நிதித் தவறுகள்! 

ஆரஞ்சு Vs சாத்துக்குடி: எது சிறந்தது?

SCROLL FOR NEXT