திருமால் கோயில் கொண்டிருக்கும் திவ்ய தேசங்கள் அனைத்துமே சிறப்பு வாய்ந்தவையே. சில குறிப்பிட்ட திவ்ய தேசத்தின் திருமால் நமக்குள் அதிசயத்தையும் ஆனந்தத்தையும் இன்னும் அதிக அளவில் வழங்குபவராக இருந்து நமக்கு சேவை சாதித்துக் கொண்டிருக்கிறார். அப்படிப்பட்ட ஒரு அதிசயமான திருத்தலம்தான், தென்திருப்பேரை திருத்தலம் ஆகும். தாமிரபரணி ஆற்றின் தென்கரையில் ஆழ்வார்திருநகரிக்கு 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள திவ்ய தேசம்தான் தென் திருப்பேரை. நவதிருப்பதிகளுள் ஏழாவதாக விளங்கும் திருக்கோயில் இது.
இக்கோயிலில் கொலுவீற்றிருக்கும் பெருமாளின் திருநாமம் முதற்கொண்டு, இக்கோயில் விமானத்தின் பெயர் மற்றும் கருடன் சன்னிதி என்று எல்லாமே தன்னகத்தே ஒரு சிறப்பான நிகழ்வை உள்ளடக்கியதாகவே இருக்கிறது. முதலில், பெருமாளின் திருநாமத்தை எடுத்துக்கொள்வோம். இங்கே கோயில் கொண்டுள்ள பெருமாள், தம் இரு காதுகளிலும் மீன் வடிவிலான மகர குண்டலங்களை அணிந்துக் கொண்டு அழகாகக் காட்சி கொடுக்கிறார். அந்த அழகான மகர குண்டலங்களை காதுகளில் அணிந்து கொண்டிருப்பதாலேயே அவரது திருப்பெயர், மகர நெடுங்குழைகாதர் என்றானது.
திருமால் தனது காதுகளில் ஏன் மீன் வடிவிலான மகர குண்டலங்களை அணிந்திருக்கிறார் தெரியுமா? ஒரு சமயம் வைகுண்டத்தில், திருமால் பூதேவியோடு ஆனந்தமாக உரையாடிக் கொண்டிருந்த தருணத்தில், அங்கே துர்வாச முனிவர் வந்தாராம். துர்வாச முனிவர் வந்திருப்பதை கவனிக்காமல், தம் கணவரோடு பேசிக்கொண்டிருந்த பூதேவியின் மீது அதீத கோபம் கொண்ட துர்வாச முனிவர், “உனது அழகினால்தானே இத்தனை அகம்பாவம் உனக்கு. இந்த அழகு இன்று முதல் உன்னை விட்டு நீங்கட்டும்” என்று சபித்து விட, நடுங்கிப்போன பூதேவி, முனிவரிடம் தான் செய்த தவறுக்கு மனம் வருந்தி சாப விமோசனம் கேட்க அதற்கு முனிவரோ, “பூலோகத்தில் தாமிரபரணி ஆற்றின் கரையில் உள்ள பத்ரி வனம் சென்று அங்கே தவம் செய்து தாமிரபரணி ஆற்றில் நீராடு. அப்போது, நீ இழந்த அழகை தானாக பெறுவாய்” என்று கூறினாராம்.
அதன்படியே பூதேவியும் பூவுலகிற்கு வந்து தென்திருப்பேரை எனும் இந்த இடத்தை கண்டு, திருமாலை நோக்கி கடும் தவம் செய்து கொண்டிருந்தாள். பங்குனி மாதம் பெளர்ணமி தினத்தன்று, பூதேவி தாமிரபரணி ஆற்றில் மூழ்கியபோது அவளது திருக்கைகளில் மீன் வடிவம் கொண்ட இரண்டு மகர குண்டலங்கள் கிடைக்க பெற்றாள். அந்த குண்டலங்களை அவள் கையில் ஏந்தியதுமே பெருமாள் அவள் முன் காட்சி தர, அந்த குண்டலங்களை பூதேவி பெருமாளுக்கே உகந்தளித்தாள். அன்று முதல் இன்று வரை பெருமாள் அந்த குண்டலங்களை அணிந்து கொண்டு, ‘மகர நெடுங்குழைக்காதராகவே’ காட்சி அளிக்கிறார். பூதேவி நீராடிய அந்தத் தீர்த்தம், ‘மத்ஸ்ய தீர்த்தம்’ என்ற பெயரோடு சிறப்புப் பெற்று விளங்குகிறது.
பத்ர விமானம்: சுக்ராச்சாரியாரின் மகனான பத்ரன் ஒரு முறை துர்வாச முனிவரின் சாபத்திற்கு ஆளாக நேர்ந்தது. சாபத்திற்கு விமோசனம் தேடி எங்கெங்கோ அலைந்த பத்ரன், இத்திருத்தலத்திற்கு வர நேர்ந்தது. இக்கோயிலில் எழுந்தருளியிருந்த பெருமாளின் அழகில் தன்னைத் தொலைத்த பத்ரன், இப்பெருமாளுக்கு விமானம் அமைத்து அவரையே வழிபட ஆரம்பித்தான். அவனது பக்தியில் மனம் குளிர்ந்த பெருமாள், பரமபதத்தில் தாம் இருக்கும் திருக்கோலத்தோடு அவனுக்குக் காட்சி அளித்து, அவனது சாபத்திற்கு விமோசனத்தை கொடுத்தருளினார். பத்ரன் உருவாக்கிய விமானம் என்பதால், இத்திருக்கோயிலின் விமானம், ‘பத்ர விமானம்’ என்றே அழைக்கப்படுகிறது.
விலகி நிற்கும் கருடன்: வேறு எந்தத் திருக்கோயிலிலும் இல்லாத சிறப்பாக இங்கே பெருமாளுக்கு எதிரே இருக்கும் சன்னிதியில், கருடாழ்வார் சற்றே விலகி காட்சி தருவதை நாம் பார்க்கலாம். இதற்கும் ஒரு சிறப்பான காரணம் இருக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு இக்கோயிலின் எதிரே இருந்த இடத்தில், சில குழந்தைகள் வேதங்களை ஓதிக்கொண்டே விளையாடிக்கொண்டிருப்பதை பார்த்த பெருமாள், கருடனிடம், ‘தான் அந்தக் குழந்தைகளை பார்க்க வேண்டும்’ என்று கூறி அவரை சற்றே விலகி இருக்கும்படி கூற, அதன்படியே சற்று விலகி நின்று விட்டாராம் கருடாழ்வார்.
இப்படிப் பல சிறப்புகள் வாய்ந்த இத்திருக்கோயிலில் இப்போது பிரம்மோத்ஸவம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. பங்குனி மாதம் பெளர்ணமி தினத்தில்தானே பூதேவிக்கு மகர குண்டலங்கள் கிடைத்தன? அதனால் ஒவ்வொரு வருடமும் அந்த தினத்திலிருந்தே தொடங்கி பத்து நாட்கள் பிரம்மோத்ஸவம் வெகு சிறப்பாக நடைபெறுகிறது இங்கே. குறிப்பாக, கருட சேவையும், திருத்தேர் வைபவமும் வெகு சிறப்பாக நடைபெறும். இவ்வருடம் கருட சேவை, இன்று மார்ச் 29ம் தேதியும், ஏப்ரல் மாதம் 2ம் தேதி திருத்தேரோட்டமும் நடைபெற உள்ளது.