நாம் எல்லோருமே பரமபதம் என்கிற ஒரு விளையாட்டை விளையாடி இருப்போம். அதில் ஏணிகளும் பாம்புகளும் நிறைந்திருக்கும். புண்ணியம் செய்தவர்கள் ஏணியில் ஏறி வைகுண்டத்தை அடையலாம் என்றும் பாவம் செய்தவர்கள் பாம்பினால் கீழே தள்ளப்படுவார்கள் என்றும் பொருள்பட இந்த விளையாட்டு அமைந்திருக்கும். இது உண்மையிலேயே மகாபாரதத்தில் வரும் ஒரு கதையை தழுவியதாகும்.
சந்திர வம்சத்தை சேர்ந்தவன் நகுஷன் என்கிற அரசன். அவன், இந்திர பதவியை அடைய வேண்டும் என்பதற்காக நூறு அஸ்வமேத யாகங்களைச் செய்தவன். ஒரு சமயம் தேவேந்திரன், விருத்திராசுரன் என்னும் ஒரு அசுரனைக் கொன்றதால் ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷத்தைப் போக்கிக் கொள்வதற்காக தேவலோகத்தை விட்டு அகன்று, தவத்தில் ஈடுபட்டிருந்த சமயத்தில், தேவலோகம் இந்திர பதவிக்கு தகுதியான ஒருவர் இல்லாமல் இருந்தது. அப்பொழுது தேவர்கள் நகுஷனை இந்திர பதவியில் அமர்த்தினார்கள்.
இந்திர பதவியை அடைந்த அவனுக்கு இந்திராணியையும் அடைய வேண்டும் என்கிற ஆசை உண்டானது. அதை இந்திராணியிடம் தெரிவித்தான். என்ன செய்வது என்று புரியாமல் அவள், இதை தேவ குருவான பிரகஸ்பதியிடம் தெரிவித்தாள்.
அதற்கு தேவகுரு, “நீ அவனை மணந்து கொள்வதாகக் கூறி விடு” என்றார்.
“குருவே என்ன சொல்கிறீர்கள்? நான் அவனை மணப்பதா?”
“இல்லை சசி தேவி. நீ நடிக்கப்போகிறாய். சப்த ரிஷிகளும் தாங்கி வர பல்லக்கில் ஏறி என்னைக் காண வந்தால் நான் இதற்கு ஒப்புக்கொள்கிறேன் என்று கூறிப்பார்” என்றார்.
குரு கூறுவதிலும் ஏதோ பின்னணி இருக்கிறது என்கிற திடமான நம்பிக்கையுடன் நகுஷனிடம் இந்திராணி, குரு கூறியதைப் போல் கூறினாள். அதனால் மிகவும் சந்தோஷமடைந்த நகுஷன், “இந்திர பதவியில் இருக்கும் என்னால் இது கூட செய்ய முடியாதா?” என்று கூறி விட்டு சப்த ரிஷிகளையும் கூப்பிட்டு தன்னை ஒரு பல்லக்கில் தூக்கிக் கொண்டு போகும்படி கட்டளை இட்டான். சப்த ரிஷிகளில் அகத்தியரும் அடங்குவார்.
சப்த ரிஷிகளும் நகுஷனை பல்லக்கில் ஏற்றிக்கொண்டு, இந்திராணியை சந்திக்க புறப்பட்டார்கள். இந்திராணியை காணும் ஆர்வக்கோளாறில், 'சர்ப்ப சர்ப்ப' (சீக்கிரம் சீக்கிரம்) என்று கூறினான் நகுஷன். உருவில் சிறியவராக இருந்த அகத்தியரால் மற்றவர்களின் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் இருந்தது. அதனால் அவரைப் பிடித்து கீழே தள்ளினான் நகுஷன். அவனது செய்கையால் மிகவும் கோபமுற்ற அகத்தியர், “முனிவர்களை இழிவாக நடத்தி, ‘சர்ப்ப சர்ப்ப’ என்று கூறியதால் நீ, சர்ப்பமாகவே (பாம்பு) போவாய்” என்று சபித்து விட்டார். தனது தவறை உணர்ந்த நகுஷன், அவர் கொடுத்த சாபத்திற்கு விமோசனம் கேட்க, “த்வாபர யுகத்தில், பஞ்சபாண்டவர்களில், யுதிஷ்டிரர் கேட்கும் கேள்விகளுக்கு நீ சரியான பதிலைச் சொன்னால் உனக்கு விமோசனம் ஏற்படும். மீண்டும் இந்திரலோகம் திரும்புவாய்” என்று கூறினார்.
பூமியில் ஒரு பெரிய பாம்பாக விழுந்த நகுஷன், ஒரு கானகத்தில் குகையில் வசித்து வந்தான். த்வாபர யுகமும் வந்தது. வனவாசத்தில் இருந்த பஞ்சபாண்டவர்களில், தன்னுடன் மூவர் இருக்க பீமனை மட்டும் காணவில்லையே என்று அவனைத் தேடும் பணியில் யுதிஷ்டிரர் ஈடுபட்டிருந்தார். அப்பொழுது ஒரு மலை குகையில் பீமனின் குரல் கேட்டது. அதை நெருங்கியபொழுது பாம்பாக இருந்த நகுஷன், ஆயிரம் யானை பலம் கொண்ட பீமனைச் சுற்றி வளைத்து இறுகப் பற்றி இருந்தான். மிகுந்த பலசாலியான தன்னையே விழுங்கத் தயாராக இருக்கும் அந்தப் பாம்பை யார் என்று பீமன் விசாரிக்க, தனக்கு நேர்ந்த சாபத்தை நகுஷன் கூறினான். அச்சமயம் யுதிஷ்டிரர் அங்கு வர, நடந்த விபரங்களை பீமன் அவரிடம் கூறினான்.
யுதிஷ்டிரர், நகுஷனிடம் ஜீவாத்மா பரமாத்மா சம்பந்தப்பட்ட பலவிதமான கேள்விகளைக் கேட்டார். அனைத்திற்கும் சரியான பதிலை நகுஷன் கூறி விட அவனுக்கு சாப விமோசனம் கிடைத்தது. பீமனை விடுவித்து, யுதிஷ்டிரருக்கு நன்றியைத் தெரிவித்துவிட்டு, தான் நிம்மதியாக இந்திரலோகத்திற்கு ஏகினான்.
இதனால்தான் பரமபத விளையாட்டில் வைகுண்டம் அடைவதற்கு முன்னால் மிகப்பெரிய பாம்பு ஒன்று விழுங்குமே அதை நகுஷன் என்று கூறுகிறார்கள்.