மனிதர்கள் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்றே நினைக்கிறார்கள். ஆனால், நாம் வாழும் சூழலில் மகிழ்ச்சி என்பது என்றும் நிரந்தரமாகக் கிடைக்குமா? என்பது கேள்வியே. ஆன்மிகத்தின் வழி செல்பவர்களுக்கு மகிழ்ச்சி என்பது என்றும் நிரந்தரம் என்பதை பல ஞானிகளும் மகான்களும் சொல்லிச் சென்றுள்ளனர். அந்த வகையில் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க நம்மாழ்வார் திருவாய் மொழியின் மூன்றாம் பத்து பத்தாம் திருமொழியின் எட்டாவது பாசுரத்தில் காட்டி இருக்கும் வழியை இந்தப் பதிவில் காண்போம்.
‘அல்லல்இல் இன்பம் அளவுஇறந்து எங்கும் அழகுஅமர் சூழ்ஒளியன்
அல்லி மலர்மகள் போக மயக்குகள் ஆகியும் நிற்கும் அம்மான்
எல்லைஇல் ஞானத்தன் ஞானம்அஃ தேகொண்டு எல்லாக்கரு மங்களும்செய்
எல்லைஇல் மாயனைக் கண்ணனைத் தாள்பற்றி யான்ஓர்துக் கம்இலனே.’
எவ்வளவு அழகான கருத்தாழம் கொண்ட பாசுரம்.
திருமாலின் திருவடிகளை பற்றிக்கொண்டால் துக்கமே இல்லாத ஆனந்தம் உண்டாகும் என்பதே இப்பாடலின் சாரம் ஆகும். இந்த வரிகளில் பொதிந்துள்ள அற்புதமான பொருளைக் காண்போம்.
‘துன்பம் இல்லாத, இன்பத்திற்கு அளவு இல்லாமல் எல்லா இடங்களிலும் பொருந்திய அழகும், எல்லா இடங்களிலும் சூழ்ந்த ஒளியும் உடையவனும்,
அக இதழ்களையுடைய தாமரைப்பூவில் வீற்றிருக்கின்ற பெரிய பிராட்டியின் சேர்க்கையால் உண்டான ஆனந்தங்களை உடையவனாய் நிற்கின்ற தலைவனும்,
முடிவு இல்லாத ஞானத்தை உடையவனும், அந்த ஞானத்தினால் படைத்தல் முதலான எல்லாக் காரியங்களையும் செய்கின்ற, எல்லை இல்லாத ஆச்சரியமான குணங்களையும் செயல்களையும் உடையவனும்,
கண்ணபிரானாய் வந்து அவதரித்தவனும் ஆன எம்பெருமானுடைய திருவடிகளைப் பற்றி, யான் ஒரு துக்கமும் இல்லாமல் மகிழ்வாக உள்ளேன்’ என்பதாகும்.
இறைவனின் ஆனந்தம், அழகு, சிருங்காரம், அனைத்தும் அறியும் தன்மை, சக்தி லீலைகள், எளிமை உள்ளிட்ட குணங்களை நாம் சிந்திக்க சிந்திக்க நமது துக்கமெல்லாம் நீங்கிவிடும் என்று இப்பாடலின் மூலம் உணர்த்துகிறார் நம்மாழ்வார்.
இப்படி நமது துக்கங்களை எல்லாம் போக்கி மகிழ்விக்கவல்ல எண்ணற்ற மேன்மைகளைத் தன்னகத்தே கொண்டுள்ள கருணைக்கடலான எம்பெருமானை வழிபட்டால் கவலைகள் எல்லாம் மறந்து எந்நேரமும் மகிழ்ச்சியாக வாழ்வது உறுதி.