சியாமளன் எனும் ஸ்ரீராம பக்தன், தனது குருவிடம் மிகுந்த பக்தி கொண்டிருந்தான். ஒரு நாள் சியாமளன் தனது குருவிடம், “குருவே, ஸ்ரீராமபிரான் என்னைப் போன்ற எளியவர்களுக்கு தரிசனம் தருவாரா?” என்று கேட்டான். அதற்கு குரு, “ஸ்ரீராமபிரான் ஏழைப் பங்காளன். பக்தியுடன் யார் அழைத்தாலும் கண்டிப்பாக நேரில் வந்து தரிசனம் தருவார்” என்று கூறினார்!
அதைக் கேட்ட சியாமளன் ஒரு நாள், தன்னிடம் இருந்த கோதுமை மாவில் ஏழு ரொட்டிகள் தயாரித்து அதை ஸ்ரீராமர் படத்துக்கு முன்பு வைத்து, ‘ஸ்ரீராம... ஜெயராமா...’ என்று கண்களை மூடி சொல்லிக் கொண்டிருந்தான். அப்போது திடீரென்று, வாயிற்கதவு தட்டும் ஓசை கேட்டது. ஓடிச் சென்று கதவைத் திறந்தான் சியாமளன். ஸ்ரீராமபிரான் தனது மனைவி சீதை மற்றும் தம்பி லட்சுமணனுடன் வந்திருந்தார். வீட்டினுள் அவர்களை அழைத்து, அன்புடன் தான் தயாரித்து வைத்திருந்த ரொட்டிகளை அவர்களுக்குக் கொடுத்தான் சியாமளன்! ஸ்ரீராமர், சீதை, லட்சுமணன் ஆகிய மூவரும் மிகவும் விருப்பமுடன் அந்த ரொட்டிகளை உண்டு விட்டுச் சென்றனர். அவனுக்கு மிகுந்தது ஒரே ஒரு ரொட்டிதான். அவனது பசிக்கு அது போதாவிட்டாலும், மனம் நிறைந்திருந்தது!
மறுநாள், தனது குருவிடம் நடந்ததைத் சொல்லி இன்று கொஞ்சம் அதிகமாக கோதுமை மாவை வாங்கி வந்தான். அதில் நிறைய ரொட்டிகள் தயாரித்து, நெய் மணக்க அவற்றை ஸ்ரீராமர் படத்துக்கு முன்பு வைத்தான். ‘இன்று நிறைய ரொட்டிகள் உள்ளன. ஸ்ரீராமபிரான் வந்து உண்டாலும், எனக்கும் நிறைய மீதி இருக்கும்’ என்று எண்ணி மனம் உருக ஸ்ரீராம ஜபம் செய்தான்.
நேற்று போலவே இன்றும் அவனது வீட்டின் வாயிலில் ஸ்ரீராமர், சீதை, லட்சுமணனுடன் இன்னும் சிலரும் வந்திருந்தனர். அவர்களை வரவேற்ற சியாமளன், “இவர்களெல்லாம் யார்?” எனக் கேட்டான். அதற்கு ஸ்ரீராமர், “இவர்கள் எனது தம்பி பரதன், சத்ருக்னன் மற்றும் எனது பக்தன் ஆஞ்சனேயன்” என அவர்களை அறிமுகப்படுத்தினார். அனைவரும் அமர்ந்து ரொட்டிகளை விரும்பிச் சாப்பிட, நேற்று போலவே இன்றும் இவனுக்கு ஒரே ஒரு ரொட்டிதான் மிஞ்சியது. இருந்தாலும் பசியைப் பொறுத்துக் கொண்டான்!
மறுநாள் அவன் தனது குருவிடம் சென்று, இன்னும் கொஞ்சம் அதிகமான கோதுமை மாவைப் பெற்றுக்கொண்டு வந்தான். ‘சரி... இன்று ஸ்ரீராமன் வந்த பிறகு அதற்கேற்றபடி ரொட்டிகளைத் தயாரிக்கலாம்’ என்ற எண்ணத்தில் ஸ்ரீராம ஜபம் செய்தான். ஆனால் இன்று, ஸ்ரீராமபிரான் இன்னும் நான்கு பேர்களுடன் வந்து விட்டார். திகைப்படைந்த சியாமளனிடம், “குழந்தாய், இன்று நீ அமைதியாக அமர்ந்துகொள்” என்று சொல்லி, ஸ்ரீராமர், சீதை மற்றவர்கள் சேர்ந்து அருமையான ரொட்டிகளைத் தயாரிக்க ஆரம்பித்தனர். தனது கண்களையே நம்ப முடியாமல் அதைப் பார்த்துக் கொண்டிருந்த சியாமளனை அருகில் அழைத்த ஸ்ரீராமர், “எப்போதும் எனக்கே முதலில் ரொட்டிகளை அளிக்கிறாய். இன்று நீதான் முதலில் உண்ண வேண்டும்” என்று சொல்லி, நெய்யும் வெண்ணையும் சர்க்கரையும் தொட்டு ராமபிரான் அவனுக்கு ஊட்டினார்!
‘அதிகமாக கோதுமை மாவு வாங்கிச் சென்ற சீடன் என்ன செய்கிறான் என்பதைப் பார்க்கலாம்’ என்று வந்த அவனது குரு, சியாமளன் கண்ணீர் மல்க ரொட்டிகளைச் சாப்பிடுவதைக் கண்டார். குருவின் கண்களுக்கு ஸ்ரீராமரும் மற்றவர்களும் புலப்படவில்லை. பின்பு, ஸ்ரீராமபிரானிடம் மிகவும் கெஞ்சி கேட்டுக்கொண்ட சியாமளனின் விருப்பத்துக்கு இணங்க ஸ்ரீராமர், சீதை, தனது சகோதரர்கள், ஆஞ்சனேயர் சகிதமாக குருவுக்குக் தரிசனம் தந்தார். அதை அறிந்த மற்ற சீடர்களும் சியாமளனின் இல்லத்துக்கு ஓடி வந்து, ஸ்ரீராம தரிசனம் பெற்றனர்!
ஸ்ரீராமர், “குழந்தாய்... உனது தூய பவித்திரமான பக்திக்குக் கட்டுப்பட்டுதான் நான் குடும்பத்துடன் வந்தேன். நீ மிகவும் உயர்ந்த நிலையடைந்து, உன்னதமாக வாழ்வாய்” என ஆசிர்வதித்துவிட்டு மறைந்தார்!
அங்குமிங்கும் சிந்தியிருந்த ரொட்டித் துண்டுகள், சர்க்கரையை பார்த்தபடி ஆனந்தக் கண்ணீர் விட்டனர் அனைவரும். ஸ்ரீராமரின் அருளால் சியாமளன் மிகவும் உன்னத நிலையை அடைந்தான்!