உபநிடதங்கள் மற்றும் புராணங்கள் குறிப்பிடும் முழு முதற்கடவுளாக கணபதி விளங்குகிறார். வேதங்களும் கணபதியின் பெருமையை பேசுகின்றன.
எதற்கும் தொடக்கம் என்பதே அவன்தான். எந்த ஒரு செயலுக்கும் பிள்ளையார் சுழி போடாமல் எதையும் தொடங்குவதில்லை நாம். எந்த ஒரு மங்கல காரியத்தைத் துவங்கினாலும் அதற்கு முன்பு விநாயகரைத் தொழுதால் அந்தக் காரியம் சிறப்புற நிறைவேறும் என்பது நியதி.
கணபதியை வழிபட உகந்த கிழமைகள் திங்கள் மற்றும் வெள்ளி ஆகும். இத்தினத்தில் அவருக்குப் பிடித்த எருக்கம் பூ மற்றும் அருகம்புல் மாலை சாத்தி மோதகம் மற்றும் பழங்களை நைவேத்தியம் செய்து வழிபட வேண்டும். விநாயகர் கோயிலுக்குச் செல்கையில் மஞ்சள் நிற ஆடை அணிந்து வணங்கினால் அவர் மனம் குளிரும் என்பது ஐதீகம்.
அஷ்டம சனி மற்றும் ஏழரைச் சனி காலங்களில் உகந்த கிழமைகளில் கோயிலில் விநாயகருக்கு அர்ச்சனை செய்து வழிபட்டால் சனி பகவானின் பாதிப்பு வெகுவாகக் குறையும் என்பது நிஜம்.
நமக்கு ஏற்படும் அத்தனை துன்பங்களிலிருந்தும் நம்மை விநாயகர் கண்டிப்பாகக் காப்பாற்றி கரை சேர்ப்பார் என்பது பலரும் அனுபவத்தில் கண்ட உண்மை.
திருமணத் தடை நீங்குதல், குழந்தை முதல் பெரியவர் வரை உண்டான நோய்களை நீக்குதல், நல்ல வேலை கிடைத்தல், பதவி உயர்வு போன்ற அற்புதங்களை நிகழ்த்துபவராக கணபதி விளங்குகிறார்.
குளக்கரை, மரத்தடி என எங்கு தம்மை நிலைநிறுத்தி உளமாற வழிபட்டாலும் வேண்டியதை வேண்டியபடி பக்தர்களின் நியாயமான ஆசைகளை நிறைவேற்றித் தருபவர் விநாயகப்பெருமான். பல பிள்ளையார் கோயில்களில் தரப்படும் அன்னதானம் ஏழைகள் பலரின் பசியாற்றுகின்றன. சில வேற்று மதத்து நண்பர்களும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வருடா வருடம் சில விநாயகர் கோயில்களுக்கு காணிக்கை தந்து மகிழ்வதைக் காணலாம்.
ஒரு பக்கம் தீய சக்திகள் பல்கிப் பெருகி மக்களை ஆட்டுவித்தாலும் மறுபக்கம் அவற்றிலிருந்து இறைவன் காப்பதும் அருள்புரிவதும் தொடர்கதைதான். நாளுக்கு நாள் தீமைகள் பெருகுவது போல் பக்தியும் பெருகிக்கொண்டேதான் செல்கிறது. அதற்கு புதிது புதிதாக ஆங்காங்கே உருவாகும் பிள்ளையார் கோயில்களே சாட்சி.
ஆரம்பம் கணபதி, அருள்வதும் கணபதி, காப்பதும் கணபதி! எனவே, பிள்ளையாரைப் போற்றிப்பாடி தொழுது நலம் பல பெற்று வாழ இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்!