Purana Kathai: The thought may be ours; Will belongs to God
Purana Kathai: The thought may be ours; Will belongs to God https://www.proudhindudharma.com
ஆன்மிகம்

புராண கதை: எண்ணம் நமதாக இருக்கலாம்; சித்தம் இறைவனுடையது!

சேலம் சுபா

டவுள் நம்பிக்கை என்பது ஒவ்வொருவரிடத்தும் வேறுபடும். சிலருக்கு பூஜை நியதிகளில் ஆர்வம், சிலருக்கு ஆலயங்கள் செல்வதில் ஈடுபாடு, சிலருக்கோ கையெடுத்து கும்பிட்டாலே கடவுளுக்கு போதும் என்ற எண்ணம். இவர்கள் அனைவருக்கும் கடவுள் பொதுவானவரே. சரி ஒரு பக்தனின் நோக்கம் எப்படி இருக்க வேண்டும் தெரியுமா?

கீதோபதேசம் முடிந்ததும் அர்ஜுனன், “கிருஷ்ணா உனது மேலான அறிவுரை உபதேசங்களை எல்லாம் கேட்டேன். ஆனால், இத்தருணத்தில் நான் எதைச் செய்தால் கீர்த்தியும், மேன்மையும் ஏற்படுமோ, அதைச் சொல்; அப்படியே செய்கிறேன்” என்று முடிவை பகவானிடமே விட்டு விட்டான்.

மகாபாரதத்தில் யுத்தம் தொடர்ந்தபோது, ‘ஜயத்ரதனை சூர்ய அஸ்தமனத்துக்குள் கொன்று விடுகிறேன் அல்லது தீக்குளிப்பேன்’ என்று சபதம் செய்தான் அர்ஜுனன். இதை அறிந்த ஜயத்ரதன்  அன்று காலையிலிருந்து மறைவாகவே இருந்தான். துரியோதனன், கர்ணன் போன்றவர்கள் அவனுக்குப் பாதுகாவலர்களாக இருந்தனர்.

ஜயத்ரதன் இருக்கும் இடம் தெரியாததால் அர்ஜுனனால்  ஜயத்ரதனை நெருங்கவே முடியவில்லை. மாலை நேரம் நெருங்கிவிட்டது.  அர்ஜுனன் என்ன செய்வது என்று அறியாமல், “என்ன கிருஷ்ணா, சூரியன் அஸ்தமிக்கும் நேரமாகிறதே… ஜயத்ரதனை எப்படிக் கொல்வது?” என்று கேட்டான்.

ஆபத்பாந்தவனான கிருஷ்ணர் தனது சக்ராயுதத்தால் சூரியனை மறைத்தார். இருள் சூழ ஆரம்பித்தது. இதைப் பார்த்த ஜயத்ரதன் மகிழ்ந்தான்.  “சூரியன் அஸ்தமித்து விட்டான். இனி, அர்ஜுனன் கதி அவ்வளவுதான். தீக்குளித்து விடுவான்’ என்ற எண்ணத்தில் மறைவிடத்தை விட்டு வெளியே வந்தான்.

உடனே கிருஷ்ணர், “அர்ஜுனா… அதோ ஜயத்ரதன். ஒரே அம்பால் அவன் தலையைக் கொய்து, தலை கீழே விழாமல் அருகில் சமந்த பஞ்சகத்தில் உள்ள விருத்தட்சரன் என்பவருடைய மடியில் போய் விழும்படி தள்ளு' என்றார்.

ஜயத்ரதனுடைய தந்தைதான் விருத்தட்சரன். அவரது கடுமையான தவத்துக்குப் பரிசாக அவரது வாரிசாக ஜனித்தவனே ஜயத்ரதன். அந்த ப்பிள்ளை பிறந்ததும் ஒரு அசரீரி, “உன் புத்திரன் எல்லாராலும் கொண்டாடப்பட்டு, மகாவீரனாக இருப்பான். மிக்க கோபமும், பராக்கிரமும் உள்ள ஒரு வீரனால் இவன் தலை அறுபட்டு மாள்வான்’ என்றது.

இதைக் கேட்ட விருத்தட்சரன் துணுக்குற்று பிள்ளைப் பாசத்தால் “தனது தவ வலிமையால், யுத்தக் களத்தில் எவன் எனது பிள்ளையின் தலையை கீழே தள்ளுகிறானோ, அவனது தலை நூறு சுக்கல்களாக சிதறிப் போகட்டும்’ என்று சாபம் விட்டார்.

இந்த விபரத்தை அர்ஜுனனிடம்  கூறிய கிருஷ்ணர், “உன்னால் அறுபட்டு இந்தத் தலை கீழே விழுந்தால் உனது தலை நூறு சுக்கல்களாக வெடித்து விடும். அதனால், அருகிலுள்ள அவனது தகப்பனார் விருத்தட்சரனுடைய மடியில் அந்தத் தலையைத் தள்ளு" என்ற ஆலோசனையை தந்தார்.

அர்ஜுனனும் அப்படியே செய்தான். அந்த சமயம், பூமியில் அமர்ந்து கண்களை மூடி சந்தியோபாசனம் செய்து கொண்டிந்த விருத்தட்சரன் மடியில் தலை விழுந்ததை கவனிக்காமல் அர்க்யம் கொடுப்பதற்காக எழுந்தபோது, அவரது மடியில் கனமாக ஏதோ இருப்பதைக் கண்டு என்னவென்று பார்க்காமலேயே அதை கீழே தள்ளினார். அது பூமியில் விழுந்தது. தனது பிள்ளையின் தலையை எவன் பூமியில் தள்ளுகிறானோ, அவன் தலை நூறு சுக்கல்களாகும் என்று இவர் சொல்லியிருந்தபடி அவரது தலை சுக்குநூறாக வெடித்து சிதறியது.

இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், நம்முடைய எண்ணம் எப்படியெல்லாமோ இருக்கும்; ஆனால் இறைவனின் சித்தம் வேறு விதமாக இருக்கும். மனிதனை ஏமாற்றலாம். ஆனால், தெய்வத்தை ஏமாற்ற முடியாது.

விருத்தட்சரன், ஜயத்ரதன் போல என்னதான் தந்திரமான சூழ்ச்சி செய்தாலும், சாமர்த்தியமாக நடந்து கொண்டாலும், என்ன நடக்க வேண்டுமென்பதையும், அதை எப்படி நடத்தி வைக்க வேண்டுமென்று தீர்மானித்து  நடத்தி வைப்பது பகவான் ஒருவன்தான். அதனால், எல்லா பொறுப்புகளையும் அவனிடம் ஒப்புவித்துவிட்டு, ‘பகவானே… எல்லாம் உன் சித்தம். எது நல்லதோ, அதைச் செய்!’ என்று சொல்லி அவன் பாதம் பற்றினால் போதும். காப்பாற்ற வேண்டியது அவனது கடமையாகிவிடும்.

வெள்ளிமலை முருகன் கோயில் வரலாற்று சிறப்புகளும் மகிமைகளும்!

நாளை என்பதே இல்லாத நரசிம்ம பெருமாள்!

கொன்றை பூவின் ஆரோக்கிய மகத்துவம் தெரியுமா?

உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?

Remote Work: தொழில்நுட்பமும், தொலைதூர வேலைகளும்! இதுதான் எதிர்காலமா? 

SCROLL FOR NEXT