Purana Kathai: Tumbai flower is auspicious for Lord Shiva
Purana Kathai: Tumbai flower is auspicious for Lord Shiva https://www.youtube.com/
ஆன்மிகம்

புராணக் கதை: தும்பை மலர் ஈசனுக்கு மிக உகந்த மலரான வரலாறு தெரியுமா?

கே.எஸ்.கிருஷ்ணவேனி

சிவபெருமானுக்கு மிகவும் உகந்த மலர்கள் கொன்றையும் தும்பையும்தான். அதிலும் தும்பை பூ ஈசனுக்கு மிகவும் விருப்பமான பூ. வெள்ளை நிறத்தில் மிகவும் சிறியதாக இருக்கும் இந்தப் பூ சிவ பூஜைக்கு மிகவும் உகந்தது. இது மிகவும் மருத்துவ குணம் வாய்ந்ததும் கூட. சிவபெருமான் ஏன் தும்பைப் பூவுக்கு தனது திருமுடியில் இடம் கொடுத்தார் என்கிற புராணக் கதையும் உண்டு.

முன்பு ஒரு காலத்தில் தும்பை என்ற பெண் ஒருத்தி வாழ்ந்து வந்தாள். சிவ பக்தையான தும்பை ஈசனை குறித்து தவம் செய்து வந்தாள். அவளது தவத்தை மெச்சிய ஈசன், அவள் முன் தோன்றி, ‘உனக்கு என்ன வரம் வேண்டும் கேள்’ எனக் கேட்க, எல்லோருமே ஈசனின் திருவடி நிழலில்தான் இருக்க ஆசைப்படுவார்கள். ஆனால், ஈசனை நேரில் தரிசித்ததால் ஏற்பட்ட பதற்றத்தில், ‘ஐயனே எனது திருமுடியின் மீது உனது திருவடி இருக்க வேண்டும்’ என்று கேட்பதற்கு பதில், ‘உனது திருமுடியின் மீது எனது திருவடிகள் இருக்க வேண்டும்’ என்று வரம் கேட்டு விட்டாள்‌ தும்பை.

ஈசனும், ‘அப்படியே ஆகட்டும்’ என்று அருள்புரிய, அப்போதுதான் ஈசனிடம் தான் கேட்ட வரம் தவறாகி விட்டது எனப் புரிந்து, ‘கடவுளே, தங்களை நேரில் தரிசித்த பதற்றத்தில் தவறாகக் கேட்டுவிட்டேன். என்னை மன்னித்தருளுங்கள்’ என வேண்ட, கருணைக்கடலான ஈசன், ‘தும்பையே உனது பக்தியின் பெருமையை விவரிக்க முடியாது. நீ அடுத்த ஜன்மத்தில் பூவாகப் பிறந்து எனது திருமுடியை அலங்கரிப்பாய்’ என அருள் புரிந்தார்.

அன்று முதல் ஐந்து விரல்களைப் போன்ற இதழ்களைக் கொண்ட தும்பை பூ இறைவனுக்கு மிகவும் பிரியமானதாகிவிட்டது. எங்கும் கிடைக்கும் தும்பைப் பூவை கொஞ்சம் பறித்து அருகில் உள்ள சிவன் கோயிலில் கொடுத்து உலக நன்மைக்காக பிரார்த்தனை செய்வோம்.

மென்மையான பூக்களான தும்பைக்கு மன்னர்கள் காலத்தில் சிறப்பான இடம் இருந்தது. மன்னன் தும்பைப் பூ மாலை அணிந்துவிட்டாலே போருக்குத் தயாராகி விட்டான் என்று பொருளாகும். சங்க இலக்கியங்களில் தும்பைப் பூ சூடி போருக்குச் சென்ற மன்னர்களை பற்றிய குறிப்புகள் இருக்கின்றன. ராவணன் போருக்குப் புறப்பட்டபோது தும்பைப் பூ மாலை அணிந்து சென்றதாக கம்ப ராமாயணத்தில் எழுதியுள்ளார். ராவணனுக்கு எதிராக போர் கோலம் பூண்ட ஸ்ரீராமன் துளசி மாலை அணிந்து, அத்துடன் தும்பை பூ மாலையும் சூட்டிக்கொண்டான் என்கிறார் கம்பர்.

செல்வ செழிப்பு தரும் சில எளிய வாஸ்து குறிப்புகள்!

நேரம் எனும் நில்லாப் பயணி!

ஸ்வஸ்திக் வடிவ கிணறு பற்றி தெரியுமா உங்களுக்கு?

சாணக்ய நீதி வலியுறுத்தும் 5 முக்கிய விஷயங்கள்!

World Family Doctor Day: கொண்டாடப்பட வேண்டிய ஹீரோக்கள்! 

SCROLL FOR NEXT