சிரத்தையோடு முன்னோர்களுக்கு திதி கொடுக்கும் நாளைத்தான் சிராத்தம் என்கிறோம். தர்ம சாஸ்திரத்தில் சிராத்தத்தை பற்றி கூறும்போது, ‘தம் முன்னோர்களுக்கு திதி கொடுப்பதை காட்டிலும் மனிதனுக்கு நன்மையை கொடுக்கக்கூடியது வேறு ஒன்றும் இல்லை’ என்று குறிப்பிடுகிறது. நம் தந்தை மற்றும் தந்தை வழி முன்னோர்களுக்கு எப்படி திதி கொடுக்கிறோமோ, அதேபோல் தாய் மற்றும் தாய் வழி முன்னோர்களுக்கு திதி கொடுப்பதற்கு என்றே ஒரு தலம் உள்ளது.
அதுதான் குஜராத் மாநிலம், சித்பூர் என்ற ஊரில் உள்ள ‘மாத்ரு கயா’ ஆகும். இது ராஜஸ்தான் மாநிலம் அம்பாஜியிலிருந்து 85 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. கங்கை மற்றும் சரஸ்வதி நதிகள் இங்கு சங்கமிப்பதாக தல வரலாறு கூறுகிறது. இங்குள்ள அற்புதமான பிந்து சரோவர் என்ற திருக்குளம் அழகிய வேலைப்பாடுகளுடன் படிகளோடு அமைந்துள்ளது. இந்த குளத்தின் கரையில்தான் தேவஹூதி தபஸ் செய்ததாகவும், குளத்தைச் சுற்றி கபிலர், தேவஹூதி, கருடனுடன் கூடிய பிந்துமாதவர் ஆகியோரின் சன்னிதிகள் உள்ளன. இங்கு பெரியதொரு கோசாலையும் அமைந்துள்ளது.
ரிக் வேதத்தில் இவ்வூர், 'தாசு' என்ற பெயரால் குறிப்பிடப்பட்டுள்ளது. மகா தபஸ்வியான ஸ்ரீ கபிலதேவர் தனது தாயார் மோட்சமடைய இங்கு வந்து சிராத்தம் செய்ததாகவும், தந்தை சொல்படி தாயாரின் தலையை கொய்ததால் பெரும் துயரமுற்ற பரசுராமர் தனது தாயாருக்கு இங்கு வந்து பிண்டம் வைத்து மோட்சம் அடையச் செய்ததாகவும் தல வரலாறு கூறுகிறது. இதை பின்பற்றி தாயாருக்கு மட்டும் மாத்ரு கயா என்று அழைக்கப்படும் சித்பூரில் திதி கொடுப்பதை அனைவரும் பின்பற்றி வருகிறார்கள். அன்னைக்கு இணையாக யாரையும் ஒப்பிட முடியாது என்பதற்காக இவ்வூரில் தாயாருக்கு மட்டுமே 24 பிண்டங்கள் சமர்ப்பிக்கப்படுகிறது.
வாரணாசிக்கு அருகே இருக்கும் கயாவை, ‘பித்ரு கயா’ என்றும், சித்பூரை ‘மாத்ரு கயா’ என்றும் அழைக்கிறார்கள். புண்ணிய பூமியான மாத்ரு கயாவில் கண்டர்ம மகரிஷியும் அவரது மனைவி தேவஹூதியும் வாழ்ந்து வந்தார்கள். அவர்களுக்கு ஏழு மகள்கள். அவர்களை சப்தரிஷி என அழைக்கப்படும் வசிஷ்டர், கௌதமர், ஜமதக்னி, பரத்வாஜர், காசியபர், விசுவாமித்திரர் மற்றும் அத்ரி மகரிஷிகளுக்கு திருமணம் செய்து வைத்தார்.
தங்களுக்கு ஒரு மகன் வேண்டுமென நெடுங்காலம் அவர் தவமிருக்க, மகாவிஷ்ணுவே அவருக்கு மகனாகப் பிறந்தாராம். அவர்தான் கபிலர். பல இடங்களுக்குச் சென்று நற்காரியங்களை செய்து போதித்த கபிலர், தனது தாய் மோட்சம் பெற வேண்டி, அவரது மோட்சத்திற்கான வழியை தேடிப் புறப்பட்டார். அதன்படியே இங்கு இருக்கும் பிந்து சரோவரில் மோட்சம் அடைந்தார் கபிலரின் தாய். இந்த இடம்தான், ‘மாத்ரு கயா’ என அழைக்கப்படுகிறது. இங்கு தாயாருக்கு சிராத்தம் செய்வது மிகவும் புனிதமாகப் போற்றப்படுகிறது.