Ratha Sapthamiyum Arkka Bathramum https://www.indiamart.com
ஆன்மிகம்

ரத சப்தமியும் அர்க்க பத்ரமும்!

ரத சப்தமி (16.02.2024)

மும்பை மீனலதா

ழு குதிரைகள் பூட்டிய ரதத்தில் கம்பீரமாக அமர்ந்திருக்கும் சூரிய பகவான் தேரோட்டி அருணனிடம், வடகிழக்கு திசை நோக்கி ரதத்தைத் திருப்ப ஆணையிடுகிறார். இத்தகைய பயணத் தொடக்கமே ரத சப்தமியென அழைக்கப்படுகிறது. மேலும், இந்நன்னாள் வசந்த காலத்தின் ஆரம்பமும், சூரியனாரின் பிறந்த தினமுமாகும். உத்தராயண புண்ணிய காலம் தொடங்கும் நாள்.

சூரிய பகவானின் தேரிலுள்ள ஏழு குதிரைகள் ஏழு வர்ணங்களுடைய வானவில்லையும், வாரத்தின் ஏழு நாட்களையும் குறிப்பதோடு, ரதத்தின் 12 சக்கரங்கள் 12 ராசிகளைக் குறிக்கின்றன.

சூரிய பகவான் தனது சொந்த வீடான சிம்ம ராசியிலிருந்து புறப்பட்டு, ஒவ்வொரு ராசியாக சென்று திரும்பி வருவதற்கு ஒரு வருட காலம் ஆகிறது. சூரியனாரிடமிருந்து ஆற்றலையும், ஒளியையும் பெருகின்ற நாளே, ரத சப்தமி விழாவாக கொண்டாடப்படுகிறது.

வெய்யிலின் தாக்கம் ரத சப்தமியிலிருந்து படிப்படியாக உயர்ந்தாலும், தெலுங்கு வருடப் பிறப்பு, உகாதி, விஷு, சித்திரை வருடப்பிறப்பு போன்ற பல பண்டிகைகள் ஒவ்வொன்றாக வந்து மக்களை மகிழ்விக்கும்.

தை மாதப் பிறப்பன்று பொங்கலிட்டு சூரியனாரை கும்பிடுவதைப் போல ரத சப்தமி தினத்தன்றும் பொங்கல் வைத்து கும்பிடுவது சூரியனுக்கு மறு பொங்கல் படைத்தலெனக் கூறப்படுகிறது.

ரத சப்தமியன்று தலையில் 7 அல்லது 9 அர்க்க பத்ரங்களைத் (எருக்கம் இலைகள்) தலையில் வைத்துக் குளிப்பதன் மூலம் ஆற்றல் மேம்படுமென நம்புகின்றனர் அநேகர்.

தந்தையில்லா ஆண்கள், கணவரை இழந்த பெண்கள் எருக்க இலையில் எள் - அட்சதை வைத்தும், ஏனையோர்கள் அட்சதையுடன் மஞ்சள் தூள் வைத்துக் கிழக்கு நோக்கி அமர்ந்து ஸ்நானம் செய்தல் உகந்ததாகும். சூரியனை வணங்குகையில் கூறும் காயத்ரி மந்திரம் அதிக சக்தியை அளிப்பதாகும்.

அர்க்யம் செய்கையில் கூறும் மந்திரம்:

‘வையாக்ரபாதி கோத்ராய ஸாங்க்ருதி ப்ரவரராய சl

கங்காபுத்ராய பீஷ்மாய ஆஜன்ம ப்ரஹ்மசாரிணேll

பீஷ்மாய நம: இதம் அர்க்யம்l’

‘அபுத்ராய ஜலம் தத்மி நமோ பீஷ்மாய வர்மணேl

பீஷ்ம ஸாந்தநவோ வீர: ஸத்யவாதி ஜிதேந்த் ரிய:l

ஆபிரத்பிர் அவாப்நோது புத்ர பௌத்ரோசிதம் க்ரியாம்ll

பீஷ்மாய நம : இதம் அர்க்யம்ll’

‘வஸூநாம் அவதாராய ஸந்தநோர் ஆத்மஜாயசl

அர்க்யம் ததாமி பீஷ்மாய ஆபால ப்ரஹ்மசாரிணேll

பீஷ்மாய நம: இதம் அர்க்யம்l’

அநேந அர்க்ய ப்ரதாநேந பீஷ்ம ப்ரியதாம்ll

இதமர்க்யம் / இத மர்க்யம்/ இதமர்க்யம்

மூன்று முறைகள் இதமர்க்யம் கூறி நீரைவிட்டு தர்ப்பணம் செய்தால் நல்லது நடக்கும்.

அர்க்க பத்ரமாகிய எருக்க இலையின் சக்தியை பீஷ்ம பிதாமகர் வழியே அறியலாம். எவ்வாறு?

தான் விரும்பிய நேரத்தில் மரணம் வர வேண்டுமென்ற நோக்கத்துடன் இருக்கும் பீஷ்மர் போர்க்களத்தில் அம்பு படுக்கையில் இருக்கையில் உத்தராயணம் ஆரம்பமாகி விடுகிறது. அச்சமயம் அங்கே வந்த வியாச மகரிஷியிடம் தனது மன வருத்தத்தைக் கூற, “பீஷ்மரே! தங்கள் கண்முன்னே தீமை, அநீதி போன்றவை நடக்கையில், கண்டு கொள்ளாமலும், கேட்காமலும் இருந்துவீட்டீர்கள். இறைவனிடம் மனதார மன்னிப்பு கேட்டால் பலன் நிச்சயம்” என பதிலளித்து, பீஷ்மரது உடல் முழுவதும் அர்க்க பத்ரங்களை அடுக்கி வைக்கிறார்.

சூரியனின் முழு சக்தியையும் கொண்டவைகளான இவை பாவங்களையும் நீக்குமெனக் கூறிச் செல்கிறார். பீஷ்மரின் விருப்பப்படியே சப்தமிக்கு மறுநாள் அஷ்டமியன்று அவரது உயிர் பிரிந்து மோட்சமடைகிறர். இது ‘பீஷ்மாஷ்டமி’ என அழைக்கப்படுகிறது.

சப்தமி, அஷ்டமி தினங்களில் அதிகாலையில் நீராடி, நதிகளில் அர்க்யம் அளிக்கலாம். முன்னோர்களுக்கான தர்ப்பணம் செய்தால், இப்பிறவியில் செய்த பாவங்கள் நீங்கி சுபிட்சம் ஏற்படுமென புராணங்களில் கூறப்பட்டுள்ளது.

கார்த்திகை மாதத்தில் வீட்டு வாசலில் இரண்டு விளக்கு ஏற்றுவது ஏன் தெரியுமா?

இளம் வயதினரைத் தாக்கும் புற்று நோய்கள் என்னென்ன தெரியுமா? 

கென்யாவில் 'தேனீ வேலி' - யானைகளையும் மனிதர்களையும் காக்கும் நல்முயற்சி!

விண்வெளியில் நீண்ட நாட்கள் ஆரோக்கியமாக இருக்க முடியுமா?

தொற்று நோய்களைப் புரிந்துகொள்வது எப்படி?

SCROLL FOR NEXT