முருகப்பெருமான் 
ஆன்மிகம்

செவ்வாய் தோஷம் தீர்க்கும் சிறப்புமிகு ஆடி கிருத்திகை விரதம்!

மாலதி சந்திரசேகரன்

பொதுவாக கிழமைகளில், செவ்வாய்க்கிழமை முருகனுக்கு மிகவும் உகந்த நாளாகக் கருதப்படுகிறது. திதிகளில் சஷ்டி திதி முக்கிய திதியாகக் அனுசரிக்கப்படுகிறது. நட்சத்திரத்தில் கிருத்திகை நட்சத்திரம் முருகனுக்கான நட்சத்திரமாகவே திகழ்கிறது.

மாதம்தோறும்தான் கிருத்திகை நட்சத்திரம் வருகிறது. இதில் ஆடி மாதம் வரும் கிருத்திகை நட்சத்திரம் மட்டும் ஏன் அத்தனை விசேஷமாகக் கருதப்படுகிறது? வருடத்தில் மூன்று கார்த்திகை தினங்கள் அதீத முக்கியத்துவம் வாய்ந்தவை. அவை உத்திராயண துவக்கத்தில், அதாவது தை மாதத்தில் வரும் தை கிருத்திகை, கார்த்திகை மாதத்தில் வரும் பெரிய கிருத்திகை மற்றும் தட்சிணாயன துவக்கமான ஆடி மாதத்தில் வரும் ஆடி கிருத்திகை.

உலக மக்கள் அனைவருமே தங்கள் பிரார்த்தனைகளையும் நேர்த்திக்கடன்களையும் செலுத்தும் முக்கிய நாளாக ஆடிக் கிருத்திகை நாளை கொண்டாடுகிறார்கள்.  ஆடி கிருத்திகையில் விரதம் இருந்து முருகனை வழிபட்டு வந்தால் நாம் கோரிய வரங்கள் அனைத்தும் அவனால் நமக்கு அளிக்கப்படும் என்பது முருக பக்தர்களின் நம்பிக்கை.

சூரனை வதைப்பதற்காக ஈசனின் நெற்றிக்கண்ணில் இருந்து தோன்றிய ஆறுமுகனை வளர்க்கும் பொறுப்பை ஆறு கார்த்திகை பெண்கள் ஏற்றுக் கொண்டார்கள் அல்லவா? அந்தக் கார்த்திகை பெண்கள் குமரனை சீராட்டி பாலூட்டி வளர்த்து வந்தார்கள். அன்னை உமையவள், அனைவரையும் ஒன்றாக சேர்த்தணைத்து ஒன்றாக்கினாள். ஆங்கே ஒரு முருகன் ஆறுமுகத்துடன் தோன்றினான். அப்பொழுது அங்கு பிரசன்னமான சிவபெருமான், 'இந்த ஆறு கார்த்திகைப் பெண்களும் இந்த பாலகனை வளர்த்ததால், இவன் இனி கார்த்திகேயன் என்று அழைக்கப்படுவான். இந்தக் கார்த்திகை பெண்களுக்கு உண்டான நட்சத்திரம் அமையும் தினத்தில் பக்தர்கள் விரதம் இருந்து முருகனை வழிபட்டால் அவர்களுக்கு அவன் அருளால் எல்லா குறைகளும் நீங்கிவிடும். நல்வாழ்வும், முக்தியும் கிடைக்கும்'  என்று ஆசிகள் கூறி, அப்பெண்களுக்கு நட்சத்திரப் பதவியையும் அளித்தார். இப்படித்தான் கிருத்திகை விரதம் உண்டானது. ஆடி மாதம் என்பது முருகனின் தாயான சக்திக்கு உகந்த மாதமாகும்.

எல்லா முருக தலங்களிலும் ஆடி கிருத்திகை நாளில் பல்வேறு சிறப்பு வழிபாடுகளும், அபிஷேக ஆராதனைகளும், திருவீதி உலாவும், உத்ஸவங்களும் சிறப்பாக நடைபெறும். பக்தர்கள், கந்தனுக்கு பிரியமான  பால் காவடி, பன்னீர் காவடி  புஷ்பக் காவடி, மச்சக் காவடி,  சேவல் காவடி, தீர்த்தக் காவடி என்று பலவித காவடியை எடுத்தும், அலகு குத்தியும் தங்கள் நேர்த்திக்கடன்களை செலுத்துவார்கள்.

முருகப்பெருமான், செவ்வாயின் அம்சமாகக் கருதப்படுவதால் ஆடி கிருத்திகை நாளன்று முருகனை மனம் உருக பிரார்த்தித்து விரதம் இருந்தால் செவ்வாய் கிரகத்தால் ஏற்படும் திருமணத்தடை, செவ்வாய் தோஷத்தினால் தடை ஆகியவை விலகும். சிலர் ஆடி மாதத்தில் இருந்து அதாவது ஆடி கிருத்திகையில் இருந்து விரதத்தைத் தொடங்கி ஆறு மாதங்கள் மேற்கொண்டு தை மாதக் கிருத்திகையில் விரதத்தை முடிப்பார்கள்.

விரதம் மேற்கொள்பவர்கள், கார்த்திகை நட்சத்திரத்தின் முதல் நாளான பரணி அன்று இரவே ஆகாரம் உண்ணாமல் உபவாசம் இருக்க வேண்டும். மறுநாள் கார்த்திகையன்று, நெய் தீபம் ஏற்றி முருகனை செவ்வரளிப் பூக்களால் அர்ச்சனை செய்து, முருகனுக்கு உண்டான பதிகங்களைப் பாடி, சர்க்கரை பொங்கல் நெய்வேத்தியம் செய்ய வேண்டும். கார்த்திகையன்று பகல் முழுவதும் உபவாசம் இருந்து மாலை நேரத்தில் விளக்கேற்றிய பிறகு பிரசாதத்தையே ஆகாரமாக உட்கொள்ளலாம். உபவாசம் இருக்க முடியாதவர்கள், பால், பழம், உப்பு சேர்க்காமல் கஞ்சி போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம்.

கருணையே வடிவான கந்தப் பெருமான் தனது ஜன்ம நட்சத்திரமான விசாகத்தன்று விரதம்  இருப்பதைக் காட்டிலும் தன்னை வளர்த்த தாயார்களின் அதாவது கார்த்திகை பெண்களைக் குறிக்கும் கிருத்திகை நன்னாளில் விரதம் மேற்கொள்வதையே விரும்புகிறான். இத்தினத்தில் முருகப்பெருமானை விசேஷ பூஜைகளாலும், விரதங்களாலும் திருப்தி செய்து எல்லா நற்பலன்களையும் பெறுவோம்.  வேலும் மயிலும் துணை. வேலுண்டு வினையில்லை. மயிலுண்டு பயமில்லை.

உளவியல் விஞ்ஞானிகளுக்கு ஆன்மிகத்தின் அதிசயத்தை உணர்த்திய ஸ்ரீ சத்ய சாயி பாபா!

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

உடல் எடை குறைக்க விரும்புவோர் பின்பற்ற வேண்டிய லோ கிளைசெமிக் டயட்!

தொழிலதிபர் ஜாக் மாவின் 10 ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்!

SCROLL FOR NEXT