Murugan Deivanai Thirukalyanam tomorrow in Tiruchendur 
ஆன்மிகம்

சூரசம்ஹாரம் செய்து தேவர் குறை தீர்த்த வேலவனுக்கு நாளை திருக்கல்யாணம்!

மாலதி சந்திரசேகரன்

முருகப்பெருமானுக்கு பிரதானமாக ஆறு படை வீடுகள் உண்டு என்பது எல்லோருமே அறிந்த விஷயம்தான். அந்த ஆறு படை வீடுகளைத்தான் ‘அறுபடை வீடு’ என்று  கூறுகிறோம்.

அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோயில் திருப்பரங்குன்றம், இந்திரனின் மகளான தெய்வானையை மணந்த இடம். இது ஒரு குகைக் கோயில்.

அருள்மிகு திருச்சீரலைவாய் முருகன் கோயில், செந்தில்நாதன் கோயில், திருச்செந்தூர். சூரபத்மனை அழித்த இடம். உத்ஸவர் ஜயந்திநாதர் மற்றும் சண்முகர் என்றும் போற்றப்படுகிறார்.

திரு ஆவினன்குடி முருகன் கோயில், பழனி. ஞானப்பழத்தை இழந்து ஆண்டி கோலம் கொண்டு நின்று தலம். இது ஒரு மலைக்கோயில்.

திருவேரகம் முருகன் கோயில், சுவாமிமலை. தந்தைக்கு பிரணவ மந்திரத்தை உபதேசித்த தலம். இங்கு மயில் வாகனத்திற்கு பதிலாக இந்திரன் கொடுத்த ஐராவதம் என்னும் யானையை முருகப்பெருமான் வாகனமாகக் கொண்டுள்ளார்.

குன்றுதோராடல் முருகன் கோயில், திருத்தணி. வள்ளியை மணம் புரிந்த தலம். போரிட்ட பிறகு முருகப்பெருமான் இளைப்பாறிய இடம். இங்கு தணிகாசலமாக முருகப்பெருமான் அருள்பாலிக்கிறார்.

சோலைமலை முருகன் கோயில், பழமுதிர்ச்சோலை. வள்ளி, தெய்வானை இருவருடனும் அருள்பாலிக்கும் ஒரே தலம். சோலை மலை கோயில் என்று அழைக்கப்படும் இத்தலத்தில் இவர் ‘குறிஞ்சி நிலக் கிழவன்’ என்று போற்றப்படுகிறார்.

நீல மயில் மீது ஏறி ஞாலத்தை வலம் வந்த முருகப்பெருமானுக்கு ஏன் இந்த ஆறு தலங்களும் சிறப்பாகக் கூறப்படுகின்றன என்பதைப் பார்ப்போம்.

முருகப்பெருமான் தனது தாய் உமா தேவியிடம் இருந்து சக்திவேலை பெற்றுக்கொண்டு சூரபத்மனை சம்ஹாரம் செய்வதற்காக நெடுந்தூரம் பயணம் செய்ய வேண்டிய நிர்பபந்தம் இருந்தது. அதற்காக பெரிய சைனியத்தையே தன்னுடன் அழைத்துக் கொண்டு அவர் ஒவ்வொரு ஊராகப் பயணித்தார். பெரிய சைனியத்தைக் கூட்டிச் செல்லும்பொழுது அவர்கள் தங்கி  இளைப்பாற இடம்  வேண்டுமல்லவா? நெடுந்தூரப் பயணத்திற்கு நடுநடுவே அவர்கள் தங்கி இளைப்பாறிய இடங்கள்தான் அறுபடை வீடு என்று கூறப்படும் இந்த ஆறு தலங்கள்.

திருச்செந்தூரில் சூரசம்ஹாரம் நிகழ்வுக்குப் பிறகு, அடுத்த நாள் தெய்வானை கல்யாண வைபவம் சிறப்பாக நடக்கத்தொடங்கும். தெய்வானையானவள், அன்று காலை முதல் தபசு மண்டபத்தில் முருகனை மணக்க வேண்டி தவக்கோலத்தில் இருப்பாள். அன்று மாலை, குமரவிடங்கர் (உத்ஸவர்) என்கிற பெயரில் முருகப்பெருமான் தெய்வானையை நிச்சயதார்த்தம் செய்துகொள்வார். நடு இரவில் இருவரும் திருக்கல்யாண மண்டபத்திற்கு எழுந்தருளுவார்கள். அங்கு அவர்களுக்கு சிறப்பான முறையில் திருமணம் நடந்தேறும். மூன்று நாட்கள் கல்யாணத் தம்பதியினர் திரு ஊஞ்சலில் மக்களுக்கு தரிசனம் கொடுத்து அருள்பாலிப்பார்கள். ஸ்ரீ வள்ளி தேவசேனாபதியை வணங்கி வாழ்வில் சகல சுபிக்ஷங்களையும் பெறுவோம்.

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

உடல் எடை குறைக்க விரும்புவோர் பின்பற்ற வேண்டிய லோ கிளைசெமிக் டயட்!

தொழிலதிபர் ஜாக் மாவின் 10 ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்!

இவர்களைத் தெரியும்; இந்தத் தகவல்கள் தெரியுமா?

SCROLL FOR NEXT