Palanimalai Murugan 
ஆன்மிகம்

சூரசம்ஹாரத்துக்கு மலையிலிருந்து இறங்கி வரும் முருகப்பெருமான் திருத்தலம்!

கோவீ.ராஜேந்திரன்

ழநி அருள்மிகு தண்டாயுதபானி சுவாமி திருக்கோயில், முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடு. இது, மதுரையில் இருந்து 115 கி.மீ. மேற்கே உள்ள பழநியில் அமைந்துள்ளது. இங்குள்ள முருகப்பெருமான் சிலை சித்தர் போகரால் உருவாக்கப்பட்டது. முருகனது கோயில் குன்றின் உச்சியில் அமைந்துள்ளது. இதனை கோயிலாக எடுத்துக் கட்டியவர் சேரமன்னன் சேரமான் பெருமான் என்பவர். தமிழகக் கோயில்களில் பொதுவாக, மூலவர் சிலை கிழக்கு பார்த்தே அமைந்திருக்கும். ஆனால், இங்கு வடக்கு பார்த்து அமைந்துள்ளது. இதற்கு காரணம் சேர மன்னர்கள் வடக்கு திசையில் ஆதிக்கம் செலுத்தியதே என்கிறார்கள்.

கோயில் வரலாறு கூறுவது, தனது பெற்றோரிடம் ஞானப்பழம் கிடைக்காமல் ஏமாற்றம் அடைந்த குமரன் அனைத்தையும் துறந்து பழநி மலையில் குடியேறினார். அன்றிலிருந்து அவரது நின்ற இடம் ‘பழம் நீ’ (பழநி) என அழைக்கப்படுகிறது. பழனி மலை அங்கே வருவதற்கு உதவியவர் இடும்பன். அவர் பெரிய தராசின் மூலம் பழநி மலையையும் இடும்ப மலையையும் தூக்கிக்கொண்டு வந்து வைத்தார் என்று புராணங்கள் கூறுகின்றன. இதன் அடிப்படையில் தோன்றியதுதான் காவடி எடுத்தல் வழக்கம்.

முருகன் கோயில்களில் காவடி எடுப்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். அந்த காவடியின் அஸ்திவாரமே பழனிதான். இந்த கோயிலில்தான் தமிழகத்தில் முதன் முதலாக பக்தர்கள் வேண்டுதல்கள் நிமித்தம் அலகு குத்துதல், காவடி எடுக்கும் பழக்கம் ஏற்பட்டது. அதன் பின்னரே தமிழகத்தின் மற்ற கோயில்களில் பக்தர்கள் மத்தியில் நேர்த்திக்கடன்செலுத்தம் பழக்கம் ஏற்பட்டது.

புராணங்களில் இப்படியான பெயர்க் காரணங்கள் வழங்கப்பட்டாலும் ‘பழனம்’ என்ற பழந்தமிழ்ச் சொல்லில் அடிப்படையில் உருவான பெயரே பழநி என்றும் கூறப்படுகிறது. ‘பழனம்’ என்ற சொல் விளைச்சலைத் தருகின்ற நிலத்தைக் குறிக்கும். அப்படிப்பட்ட நல்ல விளைச்சல் நிலம் நிறைந்த பகுதி என்பதால் பழநி என்ற பெயர் உருவானது.

இங்குள்ள முருகனின் சிலை நவபாஷாணத்தால் வடிவமைக்கப்பட்டது. நவபாஷாணம் எனப்படுவது ஒன்பது வகையான நச்சுப்பொருட்கள் சேர்ந்தது. இந்த நவபாஷாண சிலை மீன்களைப் போன்று செதில்களைக் கொண்டதாக கூறப்படுகிறது. தற்பொழுது இந்தச் சிலை சிறிது பழுதுபட்டுள்ளது. இரவில் இந்த சிலையின் மீது முழுவதுமாக சந்தனம் பூசப்பட்டு (சந்தனக்காப்பு) காலையில் விசுவரூப தரிசனம் செய்யும் அனைத்து பக்தர்களுக்கும் சிறு சிறு வில்லை பிரசாதமாக வழங்கப்படுகிறது. இது மிகச்சிறந்த மருந்தாகக் கருதப்படுகிறது.

ஒவ்வொரு முருகன் கோயிலிலும் சரவணப் பொய்கைதான் புண்ணிய தீர்த்தமாக கருதப்படும். அது முருகன் கோயில் அருகிலேயே இருக்கும். ஆனால், பழநியில் சரவணப்பொய்கை எங்கே இருக்கிறது தெரியுமா? பழநி மலை அடிவாரத்தில் உள்ள திருஆவினங்குடி கோயிலில் நீருற்று தடாகமாக சரவணப்பொய்கை உள்ளது. பழநி மலை மீது உள்ள முருகனை தரிசிக்க 690 படிகள் ஏற வேண்டும். குடும்பத்தோடு படி ஏறி முருகனை வணங்கி வந்தால் குடும்பம் செழிக்கும் என்பது ஐதீகம்.

முருகப்பெருமானின் இந்த படை வீட்டில் அவர் அபிஷேகப் பிரியராக, சிவனின் அம்சமாக விளங்குகிறார். மற்ற திருத்தலங்களைப் போல் அல்லாமல் இங்கு இரவு பூஜை முடியும் வரை சன்னிதி சாற்றப்படுவதில்லை. அதிகாலை முதல் இரவுப் பூஜை முடியும் வரை பன்னீர், சந்தனம், பால், பஞ்சாமிர்தம், திருநீறு ஆகியவற்றால் அபிஷேகங்கள் நடந்துகொண்டே இருக்கின்றன.

முருகப்பெருமான் அசுரர்களைக் கொன்ற புராணக் கதையை மையமாகக் கொண்டு இங்கு கந்த சஷ்டி திருவிழா நடைபெறுகிறது. இந்த நாளில் மட்டுமே இறைவன் மலையிலிருந்து இறங்கி வருகிறார். மேலும், அவர் அசுரர்களை வதம் செய்து விட்டு, மீண்டும் மேலே செல்கிறார்.

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

உடல் எடை குறைக்க விரும்புவோர் பின்பற்ற வேண்டிய லோ கிளைசெமிக் டயட்!

தொழிலதிபர் ஜாக் மாவின் 10 ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்!

இவர்களைத் தெரியும்; இந்தத் தகவல்கள் தெரியுமா?

SCROLL FOR NEXT