Thai Amavasai Mahathuvangal 
ஆன்மிகம்

தை அமாவாசை மகத்துவங்கள்!

கே.எஸ்.கிருஷ்ணவேனி

தை அமாவாசை அன்று தவறாமல் நீத்தார்கடன் செய்ய வேண்டும். கடன் என்பதற்கு கடமை என்று பொருள். உலகில் பிறந்த அனைத்து மனிதர்களுக்கும் இந்த கடமை உண்டு. இதனால் கிடைக்கும் நன்மைகள் பல.

சிலருக்கு வாழ்க்கை இன்பமயமாகவும் ஒரு சிலருக்கு துன்பமயமாகவும் இருக்கும். சில நேரங்களில் காரணமே இன்றி தடைகளும், கஷ்டங்களும், சிக்கல்களும் ஏற்படும். காரணத்தை ஆராய்ந்தால் அது பித்ரு தோஷமாக இருக்கும். அப்படிப்பட்ட பித்ரு தோஷத்திலிருந்து விடுபட அமாவாசை தினத்தில் பித்ரு வழிபாடு சிறந்த பலனைத் தரும். அதுவும் உத்தராயண புண்ணிய காலத்தில் வரும் தை அமாவாசை அதிக பலனை தரக்கூடியது.

மாதந்தோறும் வரும் அமாவாசை தினங்களில் செய்ய முடியாதவர்கள் கூட இந்த குறிப்பிட்ட அமாவாசை தினங்களில் நம் முன்னோர்களை நினைவு கூர்ந்து தர்ப்பணம் செய்வது நல்லது. சித்திரை முதல் நாள், ஆடி மாத பிறப்பு, ஐப்பசி, தை மாத பிறப்பு போன்ற மாதப்பிறப்பு தினங்களிலும் அமாவாசை தினங்களிலும் முன்னோரை வழிபடுவது மிகவும் அவசியம். இவை புண்ணிய காலங்கள் என்று நம் முன்னோர்களால் வகுக்கப்பட்டுள்ளது. அதிலும் ஆடி, புரட்டாசி, தை அமாவாசைகள் மிகவும் முக்கியமானவை.

தீராத கடன் தொல்லை, எடுத்த காரியங்களில் தடை, சுப நிகழ்ச்சிகள் நடைபெறாமல் இருப்பது போன்ற தடைகள் ஏற்படும்போது நாம் நம் ஜாதகங்களை ஜோதிடரிடம் காட்டி காரணம் அறிய முற்படுவோம். அப்பொழுது ஜோதிடர்கள் சொல்லும் முக்கியமான குறிப்பு குலதெய்வ வழிபாடும், பித்ரு வழிபாடும்தான். அமாவாசை தினங்களில் பித்ரு வழிபாடு உயர்ந்த பலன்களை தரும்.

உத்தராயண புண்ணிய காலமான தை அமாவாசை அன்று பித்ருக்கள் தங்களின் உலகத்துக்கு புறப்படுகிறார்கள். நம் வீடுகளுக்கு வந்து தங்கி இருந்து கிளம்பும் உறவினர்களை எப்படி நாம் நல்ல முறையில் வழி அனுப்பி வைப்போமோ, அப்படி பித்ருக்களுக்கு தை அமாவாசை நாளில் தர்ப்பணம் முதலிய வழிபாடுகளை செய்து அனுப்பி வைக்க வேண்டும். அவ்வாறு செய்தால் அவர்களின் ஆசீர்வாதம் நமக்கு பூரணமாகக் கிடைக்கும். தை அமாவாசை அன்று அவர்கள் மீண்டும் தங்களின் உலகத்துக்குப் புறப்படுவதாகக் கூறப்படுகிறது.

நாம் இன்று அனுபவிக்கும் நற்பலன்களுக்கு காரணம் நம் முன்னோர்கள் சேர்த்து வைத்துள்ள புண்ணியம்தான். அதை நம் பிள்ளைகளும் பெற்று பயனடைய அதை தொடர வேண்டும். பெற்றோர்கள் செய்யும் நற்செயல்கள் பிள்ளைகளுக்கு கட்டாயம் போய் சேரும். எனவே நீத்தார் கடன் செய்வது என்பது மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரும் செய்ய வேண்டிய கடமை ஆகும்.

இந்த தினத்தில் செய்ய வேண்டியவை:

தை அமாவாசை வழிபாடு செய்வது மூலம் பித்ருக்கள் திருப்தி அடைவதுடன் நற்கதியும் அடைவார்கள். இதன் மூலம் நமக்கு நற்பலன்களும் பெருகும். எள்ளும் நீரும் இறைத்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வதன் மூலம் நம் முன்னோர்களை திருப்திபடுத்த முடியும். காலையில் குளித்து மடியாக சமைத்த உணவை நாம் உண்பதற்கு முன்பாக சிறிதளவு எடுத்து அதில் எள் சேர்த்து காகத்திற்கு வைப்பது, நம்மை விட எளியவர்களுக்கு நம்மால் ஆன உதவிகளை செய்வது, பசித்திருப்பவர்களுக்கு உணவு அளிப்பது, அகத்திக்கீரை, கோதுமை தவிடு போன்றவற்றை பசுக்களுக்குக் கொடுப்பது ஆகியவற்றை இந்நாளில் செய்ய மிகவும் உயர்ந்த பலன்களைப் பெறலாம்.

இன்றைய தினத்தில் செய்யக்கூடாதவை:

அசைவ உணவு சாப்பிடுதல் கூடாது. தர்ப்பணம் செய்யும்போது எள்ளை மற்றவரிடம் இருந்து கடன் வாங்கக் கூடாது. முன்னோர்கள் காரியம் முடியும் வரை வாசலில் கோலமிடுதல் கூடாது. வெங்காயம், பூண்டு, முள்ளங்கி, முட்டைகோஸ் போன்றவற்றை உணவில் சேர்த்தலாகாது. முடி வெட்டுவது, நகம் வெட்டுவது ஆகியவை இந்நாளில் செய்யக்கூடாது. அமாவாசையன்று வாழைக்காய், பிரண்டை, பாகற்காய் போன்ற நாட்டு காய்கறிகள் சமையலில் சேர்ப்பது வழக்கம்.

தர்ப்பணம் எங்கெல்லாம் செய்யலாம்:

நதிகள், கடல், புனித தீர்த்தங்கள், புண்ணிய தலங்கள் போன்ற இடங்களில் தர்ப்பணம் செய்யலாம். ராமேஸ்வரம், திலதர்ப்பணபுரி, திருப்புல்லாணி, திருவெண்காடு, திருவாரூர், பவானி கூடுதுறை போன்ற திருத்தலங்களில் தை அமாவாசை வழிபாடுகள் மிகவும் சிறப்பாக நடைபெறும். இங்கு செல்ல முடியாதவர்கள் அருகில் இருக்கும் நீர் நிலைக்குச் சென்று பித்ரு கடனை செய்யலாம்.

பூச்சிகளின் கூட்டுக்கண்கள் பற்றி தெரியுமா? 

செம்பட்டை முடி கருகருன்னு மாறணுமா? வறண்ட கூந்தல் வளம் பெறணுமா? இதை ட்ரை பண்ணுங்க..!

சிறுகதை: என்னவள்... terms and conditions!

சென்னை அரசு மருத்துவமனையில் ஆன்மீகவாதியின் படம் வந்தக் கதை தெரியுமா?

பச்சை நிற ஏரி, யானைப் பாறை, வெந்நீர் ஊற்று - மிரள வைக்கும் அழகைக் கொண்ட 3 இடங்கள்!

SCROLL FOR NEXT