திருமணங்களின்போது மணமக்களை வாழ்த்துவதற்காகத் தரப்படும் அட்சதையை பெரும்பாலோர் கெட்டிமேள சப்தம் ஒலித்ததும் இருக்கும் இடத்தில் இருந்தே மேடையை நோக்கி வீசுவதைத்தான் வழக்கமாகக் கொண்டுள்ளனர். காரணம், நேரமின்மை, கூடும் கூட்டம் போன்ற நெருக்கடிகள். இது முற்றிலும் தவறான செயல்.
அப்படி என்ன விசேஷம் இருக்கிறது இந்த அட்சதைக்கு? இறை பூஜைகளிலும் திருமணங்களிலும், சுப நிகழ்வுகளிலும் இதற்கென ஏன் ஒரு தனி இடம் அளிக்கப்பட்டிருக்கிறது? இதன் தாத்பரியம் என்ன என்பதையெல்லாம் தெரிந்து கொண்டால் நிச்சயம் அட்சதைக்கு உரிய மரியாதையைத் தருவோம்.
‘சதம்’ என்ற வார்த்தைக்கு குத்துவது அல்லது இடிப்பது என்ற பொருளும் உண்டு. அ(ட்)சதம் என்றால் இடிக்கப்படாதது என்று பொருள். உலக்கையால் இடிக்கப்படாத முனை முறியாத அரிசியே அட்சதை எனப்படுகிறது. முனை முறிந்த அரிசியை கொண்டு அட்சதை தயாரிப்பது உசிதமல்ல என்பது பெரியோர்களின் கருத்தாகும். இப்படி முனை முறியாத அரிசியோடு மஞ்சளை இணைப்பது ஏன்?
பூமிக்கு மேல் விளையும் பொருள் அரிசி, பூமிக்குக் கீழ் விளையும் பொருள் மஞ்சள். இவை இரண்டையும் இணைக்கப் பயன்படுத்துவது தூய பசு நெய். எதற்கு இப்படி செய்கிறார்கள் தெரியுமா? சந்திரனின் அம்சம் கொண்ட அரிசி, குருவின் அம்சம் கொண்ட மஞ்சள், மகாலட்சுமியின் அருள் கொண்ட நெய் இவை யாவும் ஒன்று சேரும்போது அங்கே நல்ல நேர்மறை அதிர்வு உண்டாகி அந்த இடமே வளமாகும் என்பது நம்பிக்கை. வெள்ளை அரிசியோடு மஞ்சள் நிறம் சேர்ந்து நெய்யின் மினுமினுப்போடு விளங்கும் இந்த அட்சதை பெரியோர்களின் ஆசிகளை சுமந்து வரும் வரமாகவே உணரப்படுகிறது. மேலும், அரிசியை உடலாகவும், மஞ்சளை ஆன்மாவாகவும் நெய்யை தெய்வ சக்தியாகவும் ஆன்றோர்கள் குறிப்பிடுகிறார்கள். இப்படி உடல், ஆன்மா மற்றும் தெய்வ சக்தியோடு இணைந்து வாழ்த்துகிறோம் என்ற பொருளிலேயே அட்சதை தூவப்படுகிறது என்கிறார்கள் விஷயம் தெரிந்தவர்கள்.
திருமணங்களில் மணமக்களை வாழ்த்துவதற்கு மலர்களை விட, அட்சதைக்கே முக்கியத்துவம் வழங்கப்படுவதன் காரணம் இதுதான். பூமிக்கு மேலேயும், பூமிக்கு அடியிலும் விளைகின்ற அரிசியும் மஞ்சளையும் போன்ற மணமக்கள் இருவேறு மாண்பினர். வெவ்வேறு குணநலன்கள் கொண்டவர்கள். ஒருமித்து வாழ விழைபவர்கள். அரிசியும் மஞ்சளுமான மணமக்களை இணைக்கும் பசு நெய்யாக பாசமிகு உற்றார், உறவினர்கள் உள்ளனர். இதுவே இதன் தத்துவம்.
ஆகவே, உற்றார் உறவினர்கள் பெரியோர்கள் நண்பர்கள் என அனைவரும் மணமக்களை வாழ்த்தும்போது மணமேடைக்கு அருகே வந்து ஒருவர் பின் ஒருவராக மணமக்கள் தலையில் அட்சதை தூவி வாழ்த்துவதே சாஸ்திர ரீதியாக சிறந்தது என்பார்கள் பெரியோர்கள். அட்சதையைப் போல முழுமையாக எல்லா நிகழ்வுகளும் திருமணம் கண்டவர்களின் வாழ்விலும் நடைபெற வேண்டும் என்பதே அட்சதை தூவி ஆசிர்வதிப்பதன் குறியீடு. இப்படி சிறப்புமிக்க அட்சதையை இறைவன் திருவடிகளில் வைத்து வணங்கிய பின்னர் மணமக்களை ஆசீர்வதித்து அவர்கள் சிரசில் தூவுவதே அவர்களுக்கு நன்மையான பலன்களைக் கொடுக்கும் என்கிறார்கள்.
இதேபோன்று, புதிதாகத் தொழில் துவங்கும்போதும் சந்திரன் சக்தி அதிகம் அமைந்த அரிசியும், குரு பகவானின் சக்தி அதிகம் அமைந்த மஞ்சளும், மகாலட்சுமி பரிபூரண சக்தி கொண்ட நெய்யினால் சேர்த்து பெரியோர்களால் அட்சதையாகத் தூவப்பட்டு ஆசி வழங்கப்படும்போது அந்தப் புதிதாகத் தொடங்கப்பட்ட தொழில் வாழையடி வாழையாக அவர்களுக்கு அதிர்ஷ்டத்துடன் கூடிய நன்மையை விளைவிக்கும் என்பது சாஸ்திர ரீதியான உண்மையாகும்.
ஆகவே, சந்திரன், குரு, மகாலட்சுமி என மூன்று இறை சக்திகள் நிறைந்த அட்சதை அரிசியை இனி கையில் வாங்கினால் அதற்கான மரியாதையைத் தந்து ஆசிகளை வழங்குவோம்.