Sri Chakrathazhwar 
ஆன்மிகம்

மகாவிஷ்ணு கையில் சுழலும் சுதர்சன சக்கரத்தின் பெருமைகள்!

கே.எஸ்.கிருஷ்ணவேனி

க்கரத்தாழ்வார் அறுங்கோண சக்கரத்தின் நடுவில் மூன்று கண்களுடன் தலையில் அக்னி கிரீடம் தாங்கி பதினாறு கரங்களிலும் ஆயுதங்கள் ஏந்தி காட்சியளிப்பவர். இவரை வழிபட, நவகிரகங்களால் ஏற்படும் இடையூறுகள் நீங்கும். இவரை தரிசிக்க சகல தோஷங்களும் நீங்குவதுடன் நிம்மதியான வாழ்வையும் பெறலாம்.

காக்கும் கடவுளான மகாவிஷ்ணுவின் கையில் சுழலும் சுதர்சன சக்கரம் மாபெரும் சக்தியையும், ஒளிரும் தன்மையையும் கொண்டது. இந்த சுதர்சன சக்கரத்திற்கு செய்யப்படும் ஹோம வழிபாடு ‘மகா சுதர்சன ஹோமம்’ எனப்படும். இவரை வணங்கிட சித்திரை நட்சத்திர தினங்கள் சிறப்பானவை. மேலும், புதன்கிழமை மற்றும் சனிக்கிழமைகளில் இவரை வழிபடுவதும் சிறப்பு. ஆண்டுதோறும் ஆனி மாதம் தசமி திதியில் சித்திரை நட்சத்திரத்தில் ஸ்ரீ சக்கரத்தாழ்வார் அவதார திருநாள் சுதர்சன ஜயந்தி உத்ஸவமாகக் கொண்டாடப்படுகிறது.

பதினாறு திருக்கரங்களைக் கொண்டும், சில இடங்களில் 32 கைகள் கொண்டவராகவும் காணப்படும் இவருக்கு சுதர்சனர், திருவாழியாழ்வான், சக்கரராஜன், திகிரி, நேமி என்று பல பெயர்கள் உண்டு. சக்கரத்தாழ்வாரின் ஆயுதங்கள் பதினாறு. அதில் வலக்கையில் உள்ள ஆயுதங்கள் சக்கரம், மால், குந்தம், தண்டம், அங்குசம், சதாமுகாக்னி, மிஸ்கிரிசம், வேல் ஆகியவையும் இடக்கையில் உள்ள ஆயுதங்கள் சங்கு, வாள், பாசம், கலப்பை, வஜ்ராயுதம், கதை, உலக்கை, திரிசூலம் ஆகியன.

பெருமாள் கோயில்களில் சக்கரத்தாழ்வாருக்கென்று தனிச் சன்னிதி உண்டு. இவர் திருமாலுக்கு இணையானவர் என்று வேதாந்த தேசிகர் போற்றுகிறார். சக்கரத்தாழ்வாரையும் இவருக்கு பின்புறம் உள்ள நரசிம்மரையும் வணங்கிட நான்கு வேதங்களையும், பஞ்சபூதங்களையும், அஷ்ட லட்சுமிகளையும் வணங்கிய பலன் உண்டு. 16 வகையான பேரருளும் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

அனைத்து வைணவ திருத்தலங்களிலும், குறிப்பாக ஸ்ரீரங்கம், திருமோகூர், திருக்கோவிலூர், திருவல்லிக்கேணி, காஞ்சிபுரம் போன்ற வைணவ தலங்களில் சக்கரத்தாழ்வார் வெகு விமர்சையாகக் கொண்டாடப்படுகிறார். சுதர்சனர் என்ற சொல்லுக்கு நல்வழி காட்டுப்பவர், காண்பதற்கு இனியவர் என்று பொருள். பெரியாழ்வார் ‘வடிவார் ஜோதி வலத்துறையும் சுடர் ஆழியும் பல்லாண்டு’ என்று வாழ்த்தி பாடியுள்ளார்.

காசிமா நகரில் கண்ணனைப் போன்று சங்கு, சக்கரம் தரித்து நானே உண்மையான வாசுதேவன் என்று ‘பௌண்டரக வாசுதேவன்’ என்ற வலிமை மிக்க மன்னன் கூறி வந்ததுடன் கண்ணனையும் மிரட்டி போருக்கு அழைக்க, கருடன் மேல் ஏறிச் சென்ற கண்ணன் ஆழியினால் (சக்கரத்தால்) அவனை வென்றான் என்று சிறப்பாக பெருமாளின் கையில் உள்ள சுதர்சன சக்கரத்தைப் பற்றிக் கூறப்படுகிறது.

கஜேந்திர மோட்ச வைபவத்தில் மகாவிஷ்ணு சக்கரத்தைக் கொண்டே கஜேந்திரனை கவ்வி பிடித்திருந்த முதலையை அழித்து யானையை காப்பாற்றுகிறார் மகாவிஷ்ணு. சக்கரத்தாழ்வாரை வழிபட தைரியம், வீரம் உண்டாகும். கடன், தீராத நோய்கள் தீருவதுடன் மன பயத்தையும் போக்கும். இவரை சனிக்கிழமைகளில் துளசி மாலை சாத்தி, துளசியால் அர்ச்சனை செய்து, வலம் வந்து வழிபட அனைத்து வேண்டுதல்கள் நிறைவேறும். பல ஆலயங்களில் சக்கரத்தாழ்வார் தனிச் சன்னிதி கொண்டு இருந்தாலும் மூலவராக உள்ள ஒரே திருத்தலம் கும்பகோணம் சக்கரபாணி திருக்கோயிலாகும்.

ஐந்து நிலை கோபுரங்களை கொண்ட கந்தகோட்டம் கந்தசாமி கோவில்!

குழு பயணம் அல்லது தனிப் பயணம் எது சிறந்தது!

இந்தக் கோவிலுள் ஊர்ந்துதான் வலம் வரவேண்டும்!

இதையெல்லாம் தெரிந்திருந்தால் நீங்கள் குக்கிங் எக்ஸ்பர்ட்தான்!

அழகிலும் ஆரோக்கியத்திலும் சந்தனத்தின் பயன்கள்!

SCROLL FOR NEXT