இந்திய இதிகாசமான மகாபாரதத்தைப் படித்த ஞாபகம் இருந்தால் , இரண்டு பெரும் கதாபாத்திரங்கள் உங்கள் நினைவுக்கு வரும். ஒன்று பஞ்சபாண்டவர்கள், மற்றொன்று கெளரவர்கள். அந்தக் காவியத்தில் மிகவும் வெறுக்கப்படும் பாத்திரங்களில் ஒருவராக இருந்தாலும், துரியோதனன் ஒரு புத்திசாலித்தனமான, கனிவான மற்றும் தைரியமான மனிதராகவும் கருதப்பட்டார். 100 சகோதரர்களில் மூத்தவரான கௌரவர் துரியோதனன் இதிகாசத்தில் பிரதான வில்லனாக இருப்பவர். அப்படிப்பட்ட ஒருவருக்கு இந்தியாவில் ஒரே ஒரு இடத்தில் மட்டும் கோயில் உள்ளது என்பது ஆச்சரியமானதுதானே.
இந்தியாவில் துரியோதனனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரே கோயில் கேரளாவின் கொல்லம் மாவட்டத்தில் உள்ள பொருவாழி கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலம், கொல்லம் மாவட்டம், குன்னத்தூர் வட்டம், பொருவழி எனும் கிராமத்தில், எடக்காடு எனுமிடத்தில் அமைந்திருக்கிறது இந்த மலைக்கோயில். ஹவுஸ்போட் தயாரிப்பில் புகழ் பெற்ற கிராமமான ஆலும்கடவுவிலிருந்து சுமார் 27 கி.மீ. தொலைவில் இக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் கெத்துக்காட்சி திருவிழா பிரசித்தி பெற்றது.
பாண்டவர்கள் வனவாசத்தில் இருந்தபோது அவர்களைத் தேடி துரியோதனன் சென்றதாக புராணங்கள் கூறுகின்றன. கேரளாவின் தென்பகுதி காடுகளில் தேடியபோது, இந்த இடத்தை அடைந்தார். அவர் மிகவும் தாகமாக இருந்ததால் ஒரு குடிசை வீட்டில் சிறிது தண்ணீர் கேட்டார். தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த ஒரு மூதாட்டி, துரியோதனன் குடிக்க தண்ணீர் இல்லாததால் ‘கள்' எனும் போதை தரும் பானத்தை அவருக்கு வழங்கினார்.
அவனுடைய அரச உடையைப் பார்த்த மூதாட்டி, அவன் ஏதோ ஒரு அரசன் என்று எண்ணி, குரவ சாதியைச் சேர்ந்த தீண்டத்தகாத பெண் ஒருவர் பரிமாறும் தண்ணீரை இவ்வளவு மரியாதைக்குரிய ஒருவன் குடித்ததைக் கண்டு மனம் மகிழ்ந்தாள். ஆனால், துரியோதனன் சாதி அமைப்பை ஒருபோதும் நம்பாதவன். உண்மையில், அவளுடைய விருந்தோம்பல் அவரை மிகவும் கவர்ந்தது. நன்றி தெரிவிக்கும் வகையில், அங்குள்ள ஒரு மலையில் அமர்ந்து, அந்த கிராமத்தில் வாழும் மக்கள் நலம் பெற சிவபெருமானிடம் பிரார்த்தனை செய்தார். அது மட்டுமின்றி, அந்த கிராம மக்களுக்கு அவர் கட்டுப்பாட்டில் இருந்த குறுநில மன்னனிடம் சொல்லி விவசாய நிலத்தையும் கொடுத்தார்.
பின்னர் அவர் தியானம் செய்த அதே இடத்தில் பொருவழி பெருவிருத்தி மலைநாடா கோயிலை கிராம மக்கள் கட்டினர். சுவாரஸ்யமாக, கோயில் நிலத்தை துரியோதனன் பெயரில் பத்திரப்பதிவு செய்தனர். இதனால் கோயில் நிர்வாகம் துரியோதனன் பெயரில் ஒவ்வொரு ஆண்டும் சொத்து வரி செலுத்துகிறது. இது கிராம மக்களின் அன்பையும் மரியாதையையும் காட்டுகிறது. தனிச்சிறப்பாக, இது நில வரி முறை நிறுவப்பட்டதிலிருந்து தொடரும் வழக்கம். அதேபோல், இன்று வரை கோயிலின் பூசாரிகள் குரவ சமூகத்தில் இருந்து வருகிறார்கள்.
மிகவும் சுவாரஸ்யமாக, இந்தக் கோயிலில் மற்ற இந்து கோயில்கள் போல் சிலைகள் இல்லை. நீங்கள் உள்ளே சென்றால், பக்தர்கள் பிரார்த்தனை மற்றும் தியானம் செய்யும் மண்டபம் அல்லது அல்தாரா என்று அழைக்கப்படும் உயரமான மேடையைக் காணலாம் . பக்தர்கள் கல் மண்டபத்தில் நின்று பிரார்த்தனை செய்யலாம். பக்தர்கள் சங்கல்பம் எனப்படும் ஒரு செயல்முறையின் மூலம் தங்கள் பக்தியை தெரிவிக்கிறார்கள். 24 மணி நேரமும் திறந்திருக்கும் இந்தக் கோயிலுக்கு அனைத்து ஜாதி, மத பக்தர்களும் வருகின்றனர். அதன் பழக்க வழக்கங்களில் தனித்துவமானது. கோயில் தாந்த்ரீக மரபுகளைப் பின்பற்றுவதில்லை. சமஸ்கிருத மந்திரங்கள் எதுவும் இல்லை. சிலைகளுக்குப் பதிலாக, பார்வையாளர்கள் துரியோதனனின் விருப்பமான ஆயுதம், அவரது இருப்பைக் மனதில் நினைத்து வணங்குகிறார்கள். இங்கு தனித்துவமான சடங்குகளில் ஒன்று மதுபானம் காணிக்கை வழங்குவதாகும். இது வேறு எங்கும் இல்லாதது.
கோயிலில் நடைபெறும் முக்கியமான விழா நாட்களில், இந்தப் பகுதி முழுவதும் மலர்களால் அலங்கரிக்கப்படுகிறது. இக்கோயிலுக்கு வரும் பக்தர்கள் துரியோதனனையே தங்களது குல தெய்வமாக நினைத்து வணங்கி வருகின்றனர்.
வருடாந்த உத்ஸவ விழா சிறப்பம்சங்களாக நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகள் மற்றும் காளை உருவம், குதிரை வேலா (குதிரை உருவம்) மற்றும் அலங்கரிக்கப்பட்ட கோயில் வண்டியுடன் வண்ணமயமான கெத்துக்காட்சி ஊர்வலம். நடைபெறும் இந்த உருவங்களில் மிகப்பெரியது 70 முதல் 80 அடி உயரம் கொண்டது. இந்த உருவங்களை தோள்களில் சுமக்கப்படுகின்றன அல்லது தேர்களில் வைக்கப்படுகின்றன. இந்த கோயிலின் முக்கிய சடங்கு பிரசாதம் கள், தென்னையில் இருந்து பிரித்தெடுக்கப்படும் மதுபானமாகும். கோயிலை சுற்றியுள்ள ஊர்களையும் ஈர்க்கும் வருடாந்திர திருவிழா மார்ச் மாதம் நடத்தப்படும் ஒரு நாள் விழா ஆகும்.