ஸ்ரீ கிருஷ்ணரின் அழகுக்கு மேலும் அழகு சேர்ப்பது அவர் தலையில் அணிந்திக்கும் மயிலிறகுதான். ஆனால், கிருஷ்ணரிடம் அந்த மயில் இறகு வந்த கதையை நீங்கள் அறிவீர்களா? அது குறிந்து இந்தப் பதிவில் காண்போம்.
பகவான் கிருஷ்ணரை தரிசிக்கும்போது நிச்சயமாக அவரது கையில் இருக்கும் புல்லாங்குழலையும், சிரசை அலங்கரிக்கும் மயிலிறகையும் கவனிக்கத் தவற மாட்டோம். தனது அழகாலும், புல்லாங்குழல் இசையாலும் மக்கள் மனதை மயக்கும் கிருஷ்ணர் தமது சிரசை அலங்கரிக்க ஏன் குறிப்பாக மயிலிறகை தேர்வு செய்தார் என்பது தெரியுமா?
திரேதா யுகத்தில் ஒரு சமயம் ஸ்ரீராமரும், சீதா தேவியும் காட்டில் இருந்தபொழுது அவர்களுக்கு மிகவும் தண்ணீர் தாகம் ஏற்பட்டது. அப்போது சீதை ராமரிடம், “எனக்குத் தண்ணீர் வேண்டும். எப்படியாவது தண்ணீர் எங்கே உள்ளது என்று கண்டுப்பிடியுங்கள்?” என்று கேட்டாள்.
இதைக் கேட்ட ராமர் இயற்கை கடவுளான பூமித்தாயிடம் தண்ணீர் வேண்டி பிரார்த்தனை செய்தார். அப்போது அங்கே வந்த மயில் ஒன்று, “தண்ணீர் எங்கே இருக்கிறது என்று எனக்குத் தெரியும். என்னைப் பின்தொடர்ந்து வாருங்கள்” என்று ராமரிடமும், சீதையிடமும் கூறியது.
ஸ்ரீராமரும், சீதா தேவியும் வழித்தவறி சென்றுவிடாமல் இருக்க, மயில் தனது இறகை ஒவ்வொன்றாகப் பிய்த்து அது செல்லும் பாதையில் போட்டுக்கொண்டே சென்றது. எனவே, அதை சரியாக பின்தொடர்ந்து ராமரும், சீதா தேவியும் வந்துக்கொண்டிருந்தனர். ஒருவழியாக தண்ணீர் குளத்தைக் கண்ட ராமனும், சீதையும் ஆனந்தமாகத் தண்ணீரை அருந்திவிட்டு அங்கிருந்து திரும்ப வரும்பொழுது, வழிகாட்டிய மயில் தனது இறகுகளைப் பிய்த்துப் போட்டதால் இறந்து கிடந்தது.
இதைக் கண்டு மனம் வருந்திய ராமபிரான், “என்னுடைய அடுத்தப் பிறவியிலும் உன்னை நான் மறக்க மாட்டேன்” என்று கூறினார். இதனால்தான் பகவான் கிருஷ்ணராக அவதரித்தபோது முன் அவதாரத்தில் வழிகாட்டிய மயிலின் தியாகத்தின் நினைவாக தனது சிரசில் மயிலிறகை சூடிக்கொண்டதாக ஐதீகம்.
ஸ்ரீகிருஷ்ணரின் அன்பிற்கினிய ராதாவே தனது அன்பின் அடையாளமாக கிருஷ்ணருக்கு மயிலிறகை வழங்கியதாகவும் சொல்லப்படுகிறது. எப்படியிருந்தாலும், ஸ்ரீகிருஷ்ணர் மயிலிறகு சூடியிருப்பது அவருக்கு மேலும் அழகைக் கூட்டுகிறது என்பதே நிதர்சனமான உண்மையாகும்.