சீர்காழிக்கு அருகில் உள்ளது ஓசை கொடுத்த நாயகி சமேத சப்தபுரீஸ்வரர் திருக்கோயில். திருஞானசம்பந்தர் பிறந்து வளர்ந்த திருத்தலம் இது. அன்னை சக்தியிடம் ஞானபால் உண்டு பதிகம் பாடத் தொடங்கிய சுமார் மூன்று வயதுடைய சம்பந்தர் தனது முதல் தல யாத்திரையாக சென்றது இத்தலத்திற்குத்தான். தனது சின்னஞ்சிறு கைகளால் தட்டி தாளம் போட்டுக்கொண்டு இத்தலத்தின் இறைவனை துதித்துப் பதிகம் பாடினார்.
குழந்தையின் கைகள் வலிக்குமே என்று சம்பந்தருக்காக இரக்கப்பட்ட இத்தலத்து இறைவன் சம்பந்தருக்கு இரண்டு பொற்றாளம் கொடுத்து அருளியதாக வரலாறு. இறைவி அதற்கு தெய்வீக ஓசையை தந்தருளினாள். ஆதலின் இத்தலத்து அம்பிகைக்கு ஓசை கொடுத்த நாயகி என்ற பெயர். சம்பந்தருக்கு பொற்றாளம் தந்த இறைவனை சுந்தரர் தனது பதிகத்தில் குறிப்பிட்டுப் பாடி உள்ளார்.
பிற்காலத்தில் இப்பகுதியில் தனது ஊமை மகன் பேசும் ஆற்றலைப் பெற வேண்டும் என்று பிரார்த்தித்துக் கொண்ட தாய் ஒருத்தி அவ்வாறே இறையருளால் தனது மகன் பேசும் வல்லமை பெற, மகிழ்ந்து கோயிலுக்கு தனது காணிக்கையாக செய்து தந்துள்ள பொற்றாளம் கோயிலில் உள்ளது. சீர்காழியில் திருமுலை பால் உத்ஸவம் நடைபெறும்போது இங்கு தாளம் வழங்கும் ஐதீக விழா நடைபெறுகிறது.
கிழக்கு நோக்கி அமைந்துள்ள இந்த ஆலயத்தில் கோபுரம் இல்லை. முகப்பு வாயிலுக்கு எதிரே திருக்குளம் ஆனந்த தீர்த்தம் உள்ளது. திருக்குளமானது சூரிய பகவானால் உண்டாக்கப்பட்டதாக நம்பிக்கை நிலவுகிறது.
இரண்டாவது நுழைவாயில் வழியாக உட்புகுந்த உடனே நேர் எதிரே பலிபீடம், நந்தி இவற்றை கடந்தால் இறைவன் சன்னிதி உள்ளது. இந்திரன் மற்றும் சூரியன் இத்தலத்தில் இறைவன் சப்தபுரீஸ்வரரை வணங்கி வழிபட்டுள்ளனர். அடுத்து மகாலட்சுமி சன்னிதி உள்ளது. இத்தலத்தில் உள்ள மகாலட்சுமி மிகவும் சக்தி வாய்ந்தவள். மகாலட்சுமி இத்தல சிவபெருமானை தவம் செய்து அதன் பயனாக மகாவிஷ்ணுவை திருமணம் செய்து கொண்டாள். திருமகள் திருமணம் செய்து கொண்ட தலமாதலால் திருக்கோலக்கா என்று இத்தலம் பெயர் பெற்றது.
திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் பெண்கள் இங்கு தொடர்ந்து ஆறு வாரங்கள் மகாலட்சுமிக்கு அர்ச்சனை செய்தால் தடைப்பட்ட திருமணம் விரைவில் நடைபெறும் என்பது ஐதீகம். இறைவி ஓசை கொடுத்த நாயகியின் சன்னிதி தனிச் சன்னிதியாக இறைவன் சன்னதிக்கு இடப்புறம் அமைந்துள்ளது.
வெளிப்பிராகாரத்தின் வடக்கு சுற்றில் உள்ள வாயில் வழியாக இறைவனின் சன்னிதியை அடையலாம். கோயிலின் தென்கிழக்கில் தல விருட்சம் கொன்றை மரம் ஒரே வேரில் மூன்று மரமாக வளர்ந்துள்ளது. சரியாக பேச்சு வராத பலரும் இக்கோயிலுக்கு வந்து வழிபட்டு தெளிவாக பேசும் திறனை பெறுகின்றனர். அம்பிகைக்கு தேன் அபிஷேகம் செய்து அந்தத் தேனை குழந்தைகளின் நாவில் தடவினால் நல்ல பேச்சு வரும் என்பது நம்பிக்கை.
செவித்திறன் குறைந்தவர்களும் இங்கு வந்து வழிபட்டு நல்ல பலனைப் பெற்று இருக்கிறார்கள். திக்கித் திணறி பேசும் பல குழந்தைகளின் குறையை தீர்த்து அருள் செய்த நாயகி நன்றாக பேசும் திறனையும் இசை நயத்துடன் பாடும் திறமையையும் வேண்டுபவர்கள் இந்த தலத்துக்கு வந்து அருள்மிகு சப்தபுரீஸ்வரர் அருள்மிகு ஓசை கொடுத்த நாயகியை வழிபட்டு பேசும் திறனும் நன்றாக பாடும் திறனும் பெறலாம் என்பது தொன்று தொட்டு இருந்து வரும் பக்தர்களின் நம்பிக்கையாகும்.