ஸ்ரீ மகாவிஷ்ணு 
ஆன்மிகம்

பிரம்மன் வழிபட்ட திருநெல்லி மகாவிஷ்ணு ஆலயம்!

கே.சூரியோதயன்

கேரள மாநிலம், வயநாடு மாவட்டத்தில் அமைந்துள்ளது திருநெல்லி மகாவிஷ்ணு கோயில் . படைப்புக் கடவுளான பிரம்மா, ஒருசமயம் பூலோகத்தை வலம் வந்து கொண்டிருந்தார். அப்போது ஓரிடத்தில் காடுகள் அதிகமிருந்த மலைப்பகுதியில் தனியாக ஒரே ஒரு நெல்லிமரம் இருப்பதைக் கண்டார். நெல்லிமரத்தின் அழகில் மயங்கிய அவர், அதனைக் காண அருகே சென்றார். அந்த நெல்லி மரத்தின் கீழ் மகாவிஷ்ணு அமர்ந்திருப்பது போல் அவருக்குத் தெரிந்தது. அதைக் கண்டு மகிழ்ந்த பிரம்மா, மகாவிஷ்ணு சிலை ஒன்றை அவ்விடத்தில் நிறுவி வழிபடத் தொடங்கினார். அதன் பிறகு, பிரம்மன் தினமும் அருகிலிருந்த நீர்வீழ்ச்சி ஒன்றில் குளித்து, அங்கே மலர்ந்திருக்கும் மலர்களைப் பறித்து வந்து, மகாவிஷ்ணுவை வழிபட்டு வந்தார்.

அவரது வழிபாட்டில் மகிழ்ந்த மகாவிஷ்ணு, ஒருநாள் அவர் முன்பு தோன்றினார். அப்போது பிரம்மா மகாவிஷ்ணுவிடம், “ஸ்வாமி! இங்கு வந்து வழிபடும் பக்தர்களின் பாவங்களை நீக்கி, அவர்களுக்கு நற்பலன்களைத் தந்தருள வேண்டும்” என்று வேண்டினார். அவரது வேண்டுதலை ஏற்ற மகாவிஷ்ணு, “இங்கிருக்கும் நீர்வீழ்ச்சியில் நீராடி, என்னை வந்து வழிபடும் பக்தர்கள் செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கி, அவர்கள் வாழ்வு வளம் பெறும்” என்று கூறி மறைந்தார். இப்படித் தோன்றியதுதான் திருநெல்லி மகாவிஷ்ணு கோயில்.

ஆலயம்

ஒரு காலத்தில் அடர்ந்த காடாக இருந்த இப்பகுதியில் தவமிருக்க முனிவர்கள் சிலர் வந்தனர். அந்த இடத்தில் அவர்களுக்கு உண்ண உணவும், அருந்த நீரும் கிடைக்காமல் அவதிப்பட்டனர். அவர்கள் தங்களுக்கு உணவும், நீரும் கிடைக்க உதவும்படி மகாவிஷ்ணுவிடம் வேண்டினர். அவர்களுக்கு உதவ எண்ணம் கொண்ட மகாவிஷ்ணு, அந்த அடர்ந்த காட்டுப் பகுதியில் ஓரிடத்தில் நெல்லிமரமும், அதனருகில் நீர்நிலை இருப்பதையும் காண்பித்து உதவினார். அவர்கள் அந்த நெல்லிக்கனிகளைச் சாப்பிட்டு, நீர்நிலையில் இருந்த நீரைப் பருகி தங்கள் பசி, தாகத்தை தீர்த்துக் கொண்டனர். மகாவிஷ்ணு காட்டிய நெல்லிமரத்தை, ‘அருள்புரிந்த நெல்லி’ என்ற பொருள்படும்படி, ‘திருநெல்லி’ என்று போற்றியதுடன், அந்த மரத்தின் அருகில் மகாவிஷ்ணுவுக்குச் சிலை ஒன்றை நிறுவி கோயிலமைத்து வழிபட்டு வந்தனர். அதன் பிறகு, அங்கு தற்போதிருக்கும் விஷ்ணு கோயில் ஏற்பட்டது என்று மற்றொரு கதையும் இக்கோயிலின் தல வரலாறாகச் சொல்லப்படுகிறது.

கருங்கற்களைக் கொண்டு கட்டப்பட்டிருக்கும் இந்தக் கோயிலில் மூலவராக மகாவிஷ்ணு அருள்புரிகிறார். இந்தக் கோயில் வளாகத்தில் கணபதி, நாகர்கள் உள்ளிட்ட துணைத் தெய்வங்களும் இடம் பெற்றிருக்கின்றன. ஆலயத்தின் தெற்குப் பகுதியில், ஐந்து புனித ஆறுகளின் நீர் இணைந்திருப்பதாகக் கருதப்படும் ‘பஞ்சதீர்த்தம்’ எனும் குளம் இருக்கிறது. இக்குளத்தின் நடுவில் அமைந்திருக்கும் பாறையின் மேல் விஷ்ணுவின் கால் தடம் பதிந்திருக்கிறது. கால் தடத்தின் இருபுறமும் சங்கு, சக்கரம் இடம் பெற்றிருக்கிறது. மகாவிஷ்ணு இந்த இடத்தில் நின்றுதான் பிரம்மனுக்குக் காட்சியளித்தார் என்று சொல்லப்படுகிறது. கோயிலின் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் பிரம்மன் நீராடிய நீர்வீழ்ச்சி உள்ளது. இந்த நீர்வீழ்ச்சியை, ‘பாபநாசினி’ என்கின்றனர். இங்கிருக்கும் மலை, பிரம்மனின் பெயரால் ‘பிரம்ம கிரி’ என்றும் அழைக்கப்படுகிறது.

பஞ்ச தீர்த்தமும் விஷ்ணு பாதமும்

இந்த ஆலயம் பித்ருக்கடன் என்று சொல்லப்படும் முன்னோர் வழிபாட்டுக்கான முதன்மையான இடமாக கருதப்படுகிறது. இங்கு முன்னோர் வழிபாட்டுக்குக் கட்டணம் செலுத்தினால், அதற்குத் தேவையான தர்ப்பை, அரிசி, எள், துளசி அடங்கிய பொருட்கள் தரப்படுகின்றன. அதைப் பெற்றுக் கொண்டு மகாவிஷ்ணுவை வழிபட்டு பின்பு, அங்கிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும், ‘பாபநாசினி’ நீர்வீழ்ச்சிக்குச் செல்ல வேண்டும். நீர்வீழ்ச்சிக்குச் செல்லும் வழியில் இருக்கும் சிவபெருமான் கோயில் மற்றும் பஞ்சதீர்த்தக்குளம் ஆகியவற்றை வழிபட்டுச் செல்லலாம். பாபநாசினி நீர்வீழ்ச்சியில் குளித்துவிட்டு, அங்கிருக்கும் பாறையில் நீண்ட பள்ளமாக அமைந்திருக்கும் ‘பின்னப்பாரா’ என்று அழைக்கப்படும் வாய்க்காலில் முன்னோருக்கான வழிபாடுகள் செய்யப்படுகின்றன. இந்தச் சடங்குகள் முடிந்தவுடன், மீண்டும் திருநெல்லி மகாவிஷ்ணுவை வழிபட்டுத் திரும்பலாம்.

முன்னோர் வழிபாட்டுக்குச் சிறந்த இடமாக இது விளங்குவதால், திருநெல்லியை, ‘தென்னிந்தியாவின் காசி’ என்று அழைக்கின்றனர். ஸ்ரீராமரும் லட்சுமணரும் தங்களது தந்தை தசரதன் மறைவுக்குப் பின்னர், இங்கு வந்து முன்னோர் வழிபாட்டை நடத்தியதாகச் சொல்லப்படுகிறது. இங்கு அமாவாசை, திதி என்று எந்தவொரு குறிப்பிட்ட நாளையும் தேர்வு செய்து முன்னோர் வழிபாடு செய்ய வேண்டியதில்லை. எந்த நாளிலும் முன்னோர் வழிபாடு செய்யலாம். பெண்களும் இங்கு முன்னோர் வழிபாடு செய்ய அனுமதிக்கப்படுகின்றனர்.

நெல்லி மரத்தின் கீழ் மகாவிஷ்ணு அருள்புரிந்த இடம் என்பதால், இது ‘திருமால் நெல்லி’ என்று அழைக்கப்பட்டுப் பிற்காலத்தில் ‘திருநெல்லி’ என்று மருவிவிட்டதாக கூறுகின்றனர். இந்த ஆலயம் ஒன்பது அல்லது பத்தாம் நூற்றாண்டில் கட்டப்பட்டு இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. இரண்டு மன்னர்களுக்கு இடையே ஏற்பட்ட சண்டையால், ஆலயம் முழுமையாகக் கட்டப்படாமல் பாதியில் நின்றுள்ளது. இன்றும் அப்படியே இருக்கிறது. இந்த ஆலய இறைவனுக்கு அபிஷேகம் செய்வதற்காகப் பிரம்மகிரி மலையில் இருந்து பாறைகளில் வாய்க்கால் வெட்டப்பட்டுத் தண்ணீர் கொண்டு வரப்பட்டிருக்கிறது. தற்போதும் அது பயன்பாட்டில் உள்ளது. கிழக்கு நோக்கி அமைந்திருக்கும் இந்த ஆலயம் தினமும் காலை 5.30 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 5.30 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் வழிபாட்டுக்காக திறந்திருக்கும்.

உளவியல் விஞ்ஞானிகளுக்கு ஆன்மிகத்தின் அதிசயத்தை உணர்த்திய ஸ்ரீ சத்ய சாயி பாபா!

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

உடல் எடை குறைக்க விரும்புவோர் பின்பற்ற வேண்டிய லோ கிளைசெமிக் டயட்!

தொழிலதிபர் ஜாக் மாவின் 10 ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்!

SCROLL FOR NEXT