நூற்றியெட்டு திவ்ய தேசங்களில் புகழும் செல்வமும் கொழிக்கும் திருத்தலமாக விளங்குவது திருமலை திருப்பதியாகும். பல்லவ, சோழ மன்னர்களாலும், விஜய நகரப் பேரரசாலும் பல்வேறு திருப்பணிகளைக் கண்ட இத்திருத்தலம் ஏராளமான பெருமையும் புகழும் பெற்றதாகும். இத்திருக்கோயில் குறித்து சில சுவாரசியமான தகவல்களை இந்தப் பதிவில் காணலாம்.
1. திருப்பதி வேங்கடாஜலபதி திருக்கோயில் விஜயநகர பேரரசின் மன்னரான ஸ்ரீ கிருஷ்ணதேவராயரால் கட்டப்பட்டது. அவர் இந்த கோயிலுக்காக தங்கமும் மற்றும் விலை உயர்ந்த ஆபரணங்களையும் நன்கொடையாக கொடுத்துள்ளார்.
2. உலகிலேயே பழைமையும் பெருமையும் வாய்ந்த பாறை மலைகளில் இரண்டாம் இடம் வகிக்கும் மலைகள் இந்த திருமலை மலைகள்தான்.
3. நூற்றியெட்டு திவ்ய தேசங்கள் என்று அழைக்கப்படும் கோயில்களில் திருவரங்கத்திற்கு அடுத்தபடியாக இரண்டாம் இடத்தில் இருப்பது திருப்பதி வெங்கடாஜலபதி பெருமாள் கோயில்தான்.
4. திருப்பதியில் கொண்டாடப்படும் பிரம்மோத்ஸவம் புகழ் பெற்ற இக்கோயில் திருவிழாவாகும்.
5. திருப்பதி கோயிலில் தினமும் அதிகாலையில் ஸ்ரீ வேங்கடேச சுப்ரபாதம் ஒலிபரப்பினாலும் மார்கழி மாதத்தில் மட்டும் தமிழ் திருப்பல்லாண்டு மற்றும் திருப்பாவை பாசுரங்கள் ஒலிபரப்பப்படுகிறது.
6. திருப்பதியில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டு உலகப் புகழ் பெற்றதாகும். இந்த லட்டுகள் சர்க்கரை, கடலைப் பருப்பு, நெய், முந்திரிப் பருப்பு, உலர் திராட்சை, பச்சை கற்பூரம், குங்குமப்பூ, ஏலக்காய் போன்ற பொருட்களால் பிரத்யேகமான முறையில் தயாரிக்கப்படுகிறது.
7. திருப்பதியில் லட்டு பிரசாதத்தை 1931ம் ஆண்டு முதன்முதலாக அறிமுகப்படுத்தியவர் கல்யாணம் ஐயங்கார் என்னும் பெரியவர்.
8. சேஷாத்ரி, கருடாத்ரி, நீலாத்ரி, அஞ்சனாத்ரி, விருஷபாத்ரி, நாராயணத்ரி, வெங்கடாத்ரி என ஏழு மலைகள் சூழ்ந்த இடமே இந்த ஏழுமலையாகும்.
9. திருப்பதி திருக்கோயில் சமையல்கட்டு மிகவும் பெரியதாகும். பொங்கல், தயிர், சாதம், புளி சாதம், சித்ரான்னம், வடை, முறுக்கு, ஜிலேபி, அதிரசம், போளி, அப்பம், மனோகரம், லட்டு, பாயசம், தோசை, ரவா கேசரி, பாதாம் கேசரி, முந்திரிப் பருப்பு கேசரி போன்றவை தினமும் பெரிய அளவில் தயார் செய்யப்படுகின்றன.
10. ஏழுமலையானுக்காக தினமும் ஒரு புதிய மண்சட்டி வாங்குகிறார்கள். இதில் தயிர்சாதம் தவிர வேறு எந்த நெய்வேத்தியமும் கோயில் கர்ப்ப கிரக குலசேகரப்படியைத் தாண்டாது.
11. ஏழுமலையான் அணியும் உடை 21 முழ நீளமும் 6 கிலோ எடையும் கொண்ட பட்டு பீதாம்பரமாகும்.
12. ஏழுமலையானுக்கு ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் வில்வ இலை அர்ச்சனை செய்யப்படுகிறது.
13. சிவராத்திரி அன்று, ‘க்ஷேத்ரபாலிகா’ என்ற உத்ஸவம் நடைபெறுகிறது. அன்று உத்ஸவ பெருமாளுக்கு வைரத்தில் விபூதி நெற்றி பட்டை சாத்தப்பட்டு திருவீதி உலா நடைபெறுகிறது.
14. திருப்பதி ஆலயத்திலிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில், ‘சிலாதோரணம்’ என்ற அபூர்வ பாறைகள் உள்ளன. இதுபோன்ற பாறைகள் உலகத்திலேயே இங்கு மட்டும்தான் உள்ளன. இந்த பாறைகளின் வயது 250 கோடி வருடமாகும்.
15. திருப்பதி ஏழுமலையானின் நகைகளின் மதிப்பு ரூபாய் ஆயிரம் கோடிக்கும் மேல் ஆகும். அதில் சாளக்ராம தங்கமாலை பன்னிரண்டு கிலோ எடையாகும்.