ஆன்மிகம்

மன இணக்கம் தரும் உமாமகேஸ்வர விரதம்!

மும்பை மீனலதா

தீய எண்ணங்களை ஒடுக்கி, நல்ல எண்ணங்களை வளர்க்க, உணவைக் குறைத்து, ஒருமுக மனதுடன் இருந்து பலன்களைப் பெறுவதற்காகவே விரதங்கள், வேண்டுதல்கள் ஆகியவை ஏற்படுத்தப்பட்டன. விரதங்கள், சித்ரா பௌர்ணமி, தை அமாவாசை, தைப்பூசம், சுக்ரவாரம், சஷ்டி, கிருத்திகை, சிராவண நவராத்திரி என இந்த விரதங்கள் பல வகைப்படும். அநேகர் இத்தகைய விரதங்கள் இருக்கையில், முழு நாள் பட்டினி, பகல் ஒரு பொழுது சாப்பாடு மற்றும் இரவில் பழங்கள், நிவேதன பிரசாதம், தண்ணீர், பால் என்று கடைப்பிடிப்பார்கள்.

சிவபெருமானுக்குரிய விரதங்கள்: சோமவாரம், திருவாதிரை, சிவராத்திரி, பிரதோஷம், பாசுபத, அஷ்டமி, கேதார கௌரி, பார்வதி - பரமேஸ்வர (உமாமகேஸ்வர) விரதம் ஆகிய எட்டு வகை விரதங்கள் சிவபெருமானுக்கு உரியதாகும். இவற்றில் பார்வதி - பரமேஸ்வர விரதத்தைக் கடைபிடித்தால், வேறு விரதம் எதுவும் செய்யத் தேவை கிடையாதென, ‘தெய்வத்தின் குரல்’ பதிவில் மகாபெரியவர் கூறியுள்ளார். சிவபெருமானுடன் இணைந்து பார்வதி தேவி இருப்பது சிவசக்தி தத்துவத்தை உணர்த்துவதாகும்.

பிருகு முனிவர், சிவபெருமானை மட்டும் வழிபட்டதைக் கண்ட பார்வதி தேவி, கடும் விரதம் மேற்கொண்டு சிவபெருமானின் இடது பாதி உடலைப் பெற்று சிவசக்தி ஆனார் எனப் புராணங்கள் தெரிவிக்கின்றன.

பார்வதி – பரமேஸ்வர விரதம்: இந்த விரதத்தை ஆரம்பிப்பவர்கள், தொடர்ந்து 16 ஆண்டுகள் இந்த விரதத்தை செய்தல் அவசியம். ஆவணி அல்லது புரட்டாசி மாத பௌர்ணமி தினத்தன்று இதை மேற்கொள்வது வழக்கம். இன்று உமாமகேஸ்வர விரதம் எனப்படும் பார்வதி – பரமேஸ்வர விரத தினமாகும். இன்று காலை நீராடி, தூய ஆடை அணிந்து இறைவனை வழிபட்டு சங்கல்பம் செய்து, பார்வதி – பரமேஸ்வரரை கலசத்தில் ஆவாஹணம் செய்து சோடச உபசார பூஜைகளைச் செய்ய வேண்டும். இன்று பகல் ஒரு நேரம் உணவருந்தக் கூடாது.

முதல் வருடம் நிவேதனத்துக்கு அதிரசம் செய்ய வேண்டியது அவசியம். தொடர்ந்து வரும் ஆண்டுகளில் சிவபெருமானுக்கு விருப்பமான பொருட்கள் எதையும் நிவேதனமாக வைத்துப் படைக்கலாம். பூஜை முடிந்த பின்னர் சிவனடியார்கள், விருந்தினர்கள், ஏழைகளுக்கு உணவளித்த பின்னரே விரதமிருக்கும் தம்பதியினர் உணவருந்த வேண்டும்.

பார்வதி – பரமேஸ்வரர் படம் வைத்தும் இந்த விரதத்தை மேற்கொள்ளலாம். ஆனால், சிலையை வைத்து வழிபடுபவர்கள் 16 ஆண்டுகள் சென்ற பின்னர், அதை ஏதாவதொரு சிவன் கோயிலுக்குக் கொடுத்துவிட வேண்டும். 16 முடிச்சுகள் போட்ட சிவப்பு நோன்புக் கயிறை பூஜையில் வைத்து வணங்கிய பின்னர், அதைக் கையில் கட்டிக்கொள்ள வேண்டும்.

மகாலட்சுமியை பிரிந்த திருமால், கௌதம முனிவரின் ஆலோசனைப்படி இந்த விரதத்தைக் கடைப்பிடித்துதான் திருமகளை அடைந்தாரெனக் கூறப்படுகிறது. பிரிந்தவர்கள் கூடவும், நல்லவைகள் நடைபெறவும், உடலைப் பேணவும், இறைவனை மனதார வழிபடவும் இதுபோன்ற விரதங்கள் பயன்படுகின்றன என்பது நிதர்சனம்.

ஸ்ரீ ஆதிசங்கரர் இயற்றிய மந்திர அதிர்வுகள் கொண்ட உமாமகேஸ்வர ஸ்தோத்திரத்தை தினமும் காலை, மதியம், மாலை என மூன்று வேளையும் துதித்து சிவபார்வதியை வணங்குபவர்கள் வாழ்வில் அனைத்து நலன்களும் பெறுவார்கள் என்பது ஐதீகம்.

இந்த வழிபாட்டின் முதல் பாடல்:

நம:சிவாப்யாம் நவயௌவநாப்யாம்
பரஸ்பராச்லிஷ்ட வபுர்தராப்யாம்|
நகேந்த்ரகன்யா வ்ருஷகேத நாப்யாம்
நமோநம:சங்கர பார்வதீப்யாம்||

ஓம் ஸ்ரீ உமா மஹேஸ்வராய நம:

குழந்தைகளுக்கு வளர்ச்சி மொழிக் கோளாறு ஏற்படுத்தும் சிக்கல்கள்!

முகத்துக்கு நீராவி பிடிங்க… கரும்புள்ளிகள் எல்லாம் காணாமல் போகும்! 

பார்ப்பதற்கும் கவனிப்பதற்கும் உள்ள வித்தியாசத்தை உணர்த்திய துரோணாச்சாரியார்!

வயதாகும் வேகத்தைக் குறைக்க விபரீத முடிவெடுத்த தொழிலதிபர்!

நடிகர் முரளி அம்மாவுக்கு இப்படி ஒரு மரணமா? கனவில் கூட யாருக்கும் இப்படி நடக்கக்கூடாதப்பா!

SCROLL FOR NEXT