அருணகிரிநாதர், வில்லிபுத்தூரார் வாதுப்போர் 
ஆன்மிகம்

வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு!

ம.வசந்தி

றுநூறு ஆண்டுகளுக்கு முன்பு புலவர்கள் என்று தங்களைச் சொல்லிக் கொள்பவர்கள் அவர்களுக்கு மேம்பட்ட புலவர்கள் கேட்கும் கேள்விக்குத் தக்க பதில் சொல்லாவிட்டால் அவர்களைத் தண்டிக்கின்ற வழக்கம் இருந்தது.

‘நைடதம்' பாடிய அதிவீரராம பாண்டியன் கேட்கும் கேள்விக்குப் புலவர்கள் தவறாக பதில் சொன்னால் அவர்கள் தலையில் ஓங்கிக் குட்டுகின்ற பழக்கத்தைக் கொண்டிருந்தார். அதைப்போல், வில்லிபுத்தூர் ஆழ்வார் பிழைபட எழுதுபவர்கள், பிழையான பதில் சொல்பவர்கள், யாராக இருந்தாலும் அவர்களின் காதுகளை அறுக்கும் வழக்கத்தை வைத்திருந்தார்.

வில்லிபாரதம் பாடிய வில்லிபுத்தூர் ஆழ்வாரின் செவிகளை அறுக்கும் இந்தத் தீச்செயலை நிறுத்த வேண்டும் என்பதற்காக திருப்புகழ் பாடிய அருணகிரிநாதர் அவருடன் ஒருநாள் வாதுப் போருக்குச் சென்றார்.

“என்னுடன் வாதுப் போருக்கு வருகிறீர்களே! என் நிபந்தனை என்னவென்று தெரியுமல்லவா?'' என்று வில்லிபுத்தூர் ஆழ்வார் கேட்டார். “தெரியும்'' என்றார் அருணகிரிநாதர்.

அப்போது அருணகிரிநாதர், “தாங்கள் தோற்றால், தங்கள் காதுகளை நான் அறுத்துக் கொள்ளலாமா?'' என்று கேட்டார். “ஓ, தாராளமாக அறுத்துக் கொள்ளலாம்!'' என்றார் வில்லியார்.

போட்டி தொடங்கியது. ஒரு நாளல்ல, இருநாளல்ல, பல நாட்கள் போட்டி தொடர்ந்து நடந்தது. அவர் கேட்ட கேள்விக்கு இவரும், இவர் கேட்ட கேள்விக்கு அவரும் சரியாகப் பதில் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.

ஒரு நாள் கந்தர் அந்தாதி பாடினார் அருணகிரிநாதர். அதில் ஐம்பத்து மூன்று செய்யுள்களுக்கு சரியான பதில் சொல்லி வந்தார் வில்லிபுத்தூரார். ஐம்பத்து நான்காவது செய்யுளான கட்டளைக்கலித்துறையை ‘த'கர வர்க்கத்தில் கேட்போர் திகைக்குமாறு பாடினார் அருணகிரிநாதர்.

‘திதத்தத்தத் தித்தத் திதிதாதை தாததுத் தித்தத்திதா
திதத்தத்தத் தித்த திதித்தித்த தேதுத்து தித்திதத்தா
திதத்தத்தத் தித்தத்தை தாததி தேதுதை தாததத்து
திதத்தத்தத் தித்தித்தி தீதீ திதிதுதி தீதொத்ததே’

 “இதற்குப் பொருள் சொல்லுங்கள்'' என்றார் அருணகிரிநாதர்.

இப்படிப் பாடினால் யாருக்குத்தான் என்ன தெரியும்? வில்லிபுத்தூர் ஆழ்வாருக்கு இதன் பொருள் தெரியவில்லை. அதனால் தோற்றுவிட்டதற்கு அடையாளமாக அவர் காதை நீட்டினார், அறுத்துக் கொள்ளலாமென்று. அறுப்பாரா அருணகிரிநாதர்? வில்லிபுத்தூராரைத் திருத்த வேண்டும் என்பதற்காகத்தானே வாது போர் நடத்துகிறார்? அப்போது அருணகிரிநாதர் சொன்னார், "இந்த உலகத்தில் எல்லாம் தெரிந்தவர்கள் என்று யாரும் இல்லை. ஏதும் தெரியாதவர்கள் என்றும் எவருமில்லை. உங்களுக்குத் தெரிந்தது எனக்குத் தெரியாமல் இருக்கலாம். எனக்குத் தெரிந்தது உங்களுக்குத் தெரியாமல் இருக்கலாம். நம் இருவருக்கும் தெரிந்தது மற்றவர்களுக்குத் தெரியாமல் இருக்கலாம்.

மற்றவர்களுக்குத் தெரிந்தது நம் இருவருக்கும் தெரியாமல் இருக்கலாம். இந்தக் காலத்தில் படித்தவனுக்குத் தெரியாத ஒன்றைப் படிக்காதவன் சுலபமாகச் சொல்லிவிட்டுப் போய்விடுவான். ஆகவே, ஒவ்வொருவருக்கும் ஒரு திறமை இருக்கும். அதனால் ஒருவனுக்குத் தெரியாத ஒன்றைச் சொல்லித் திருத்த வேண்டுமே தவிர, இப்படிக் காதை அறுக்கும் பாவச் செயலைச் செய்யக் கூடாது!” என்றார்.

“அப்படியே செய்கிறேன் ஐயா. என் செயலை மன்னித்துவிடுங்கள்” என்று பணிவோடு கேட்டுக் கொண்ட வில்லிபுத்தூரார், “தாங்கள் பாடிய, ‘திதத்தத்தத் தித்தத் திதிதாதை’ என்று தொடங்குகின்ற செய்யுளுக்கு என்ன அர்த்தம் என்று நான் தெரிந்து கொள்ளலாமா?'' என்று கேட்டார்.

அதற்கு அருணகிரிநாதர், ‘திதத்தத்தத் தித்தத் திதிதாதை’ என்ற தாளத்தில் நடனமாடும் சிவனும் திருமாலும் நான்முகனும் வணங்குகின்ற முதல்வனே; தெய்வானையின் மணவாளா; இறப்பு பிறப்புக்குக் காரணமான எலும்பும் தோலும் சதையும் நரம்புகளாலான இவ்வுடலை உற்றார் உறவினர்கள் தீயிட்டு எரிக்குமுன் அல்லது புதைக்குமுன் முருகா உன்னை நினைத்துத் துதிக்கும் படியான நல்ல புத்தியை எனக்குக் கொடு' இதுதான் இதற்குப் பொருள்'' என்றார்.

வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு என்பதை அருணகிரிநாதர் வில்லிபுத்தூராருக்கு உணர்த்திய விதம் அருமை.

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

உடல் எடை குறைக்க விரும்புவோர் பின்பற்ற வேண்டிய லோ கிளைசெமிக் டயட்!

தொழிலதிபர் ஜாக் மாவின் 10 ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்!

இவர்களைத் தெரியும்; இந்தத் தகவல்கள் தெரியுமா?

SCROLL FOR NEXT