சுமங்கலிப் பெண்கள் அனுஷ்டிக்கும் விரதப் பண்டிகைகளில் வரலட்சுமி நோன்பும் ஒன்றாகும். நாளைய தினம் வெள்ளிக்கிழமை இந்த வரலட்சுமி நோன்புப் பண்டிகை அனுசரிக்கப்படுகிறது. இன்று மகாலட்சுமி தேவியை வழிபட்டால் வளமும் செல்வமும் பெருகும். சிராவண மாத சுக்ல பட்சத்தின் கடைசி வெள்ளிக்கிழமையில் சுமங்கலிப் பெண்கள் வரலட்சுமி விரதத்தைக் கடைப்பிடிக்கின்றனர்.
சிராவண மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமை சுக்லபட்சத்தில் அம்மனுக்கு பூஜை செய்து விரதம் இருந்தால் வேண்டுதல்கள் நிறைவேறி அருள் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இம்மாதத்தில் இந்த விரதத்தை செய்வதால் எப்போதும் வீட்டில் செல்வ வளம் நிறைந்திருக்கும் என்பது ஐதீகம்.
விரதத்தின் நன்மைகள்: கன்னிப் பெண்கள் இந்த விரதத்தை மேற்கொண்டால் அவர்களுக்கு நல்ல கணவன் அமையும் என்று கூறப்படுகிறது. இதனால் கன்னிப் பெண்கள் இந்த விரதத்தை மேற்கொண்டு பயனை பெறுங்கள்.சுமங்கலிப் பெண்கள் இந்த விரதம் இருந்தால் கணவருக்கு நல்ல ஆயுள் கிடைக்கும். மேலும், கணவரின் வேலை, தொழில் சிறப்பாக நடைபெறும் என்பது ஐதீகம்.
மேலும், இந்த விரதம் இருப்பவர்கள் வீட்டில் செல்வ வளம் பெருகும் என்றும், குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும் என்றும் கூறப்படுகிறது. குறிப்பாக, வழிபடும் மகாலட்சுமி வீட்டிலேயே தங்கி பரிபூரணமாக சுபிட்சம் அளிப்பார் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும்.