சேலம் அருகே உள்ள ஆத்தூர் திருத்தலத்தில் பாய்கிறது வசிஷ்ட நதி. தற்போது அது வறண்டு காணப்பட்டாலும், அறுபது ஆண்டுகளுக்கு முன்பு வரை நீர் பெருகி ஓடிய நதியாகத்தான் இருந்திருக்கிறது. அதிலும் குறிப்பாக, ஆடி மாதத்தில் இந்த ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் என்று கூறுகிறார்கள் விஷயம் தெரிந்தவர்கள்.
சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பு இப்படி இந்த ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டபோது ஆற்றில் ஏதோ ஒரு பொருள் அடித்து வரப்பட்டதை மக்கள் பார்த்தார்கள். அது கரையருகே வந்ததும்தான் அது ஒரு பிள்ளையார் சிலை என்பது அவர்களுக்குத் தெரிந்தது. மக்கள் பயபக்தியோடு அந்தப் பிள்ளையாரை ஆற்றின் கரையோரம் பிரதிஷ்டை செய்து அவரை, 'வெள்ளம் பிள்ளையார்' என்று அழைத்து வழிபட்டனர். காலப்போக்கில், பிள்ளையார் அமர்ந்த அந்த இடம் மிகவும் செழிப்படைந்தது. இந்தப் பிள்ளையார் கோயிலைச் சுற்றி முக்கியக் கடைவீதிகள், கோயில் அருகிலேயே பேருந்து நிலையம் என்று எல்லாம் அமைந்தன. இவ்விடம் வழியாக வருபவர்கள் தங்கள் வாகனத்தை நிறுத்திவிட்டு ஒரு நிமிடம் நின்று இந்த பிள்ளையாரை வணங்கி விட்டுச் சென்றனர். அவர்களில் பெரும்பாலோருக்கு அவர்களின் வேண்டுதல்கள் நிறைவேறவே இந்தப் பிள்ளையார், 'வாகன பிள்ளையார்' என்னும் பெயர் பெற்றார்.
இக்கோயிலில் நித்திய அர்ச்சனை, அபிஷேகம் முதலியவை நடைபெற்றாலும், இங்கே முக்கிய பூஜையே வாகனங்களுக்குத்தான். புதிய வண்டி வாகனம் வாங்குபவர்கள் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் வாகனத்திற்கான பதிவை முடித்த கையோடு இங்கே வந்து பிள்ளையார் கோயிலில் வாகனத்திற்கு பூஜை போட்ட பிறகே வாகனத்தைப் பயன்படுத்த ஆரம்பிக்கிறார்கள்.
இக்கோயிலின் மற்றொரு சிறப்பம்சமாக பெண் அழைப்பு, மாப்பிள்ளை அழைப்பு போன்ற வைபவங்கள் நடைபெறுகின்றன. இதனால் திருமணம் செய்துகொள்ளும் அந்த மணமக்கள் சகல சௌபாக்கியங்களுடன், நீண்ட ஆயுளுடன் வாழ்வார்கள் என்னும் நம்பிக்கை இந்தப் பகுதியில் நிலவுகிறது. இக்கோயிலிலேயே திருமண வைபவங்களும் நடைபெற அனுமதிக்கப்பட்டு, சிறப்பாக நடைபெறுகின்றன.
அனைத்துப் பிள்ளையார் கோயிலிலும் பிள்ளையாருக்கு எதிரே மூஞ்சூறு வாகனத்தை பிரதிஷ்டை செய்திருப்பார்கள். மகாராஷ்டிரா மாநிலத்தில் இரட்டை மூஞ்சூறு வாகனங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கின்றன. ஆனால், இந்தக் கோயிலில் பிள்ளையார் சன்னிதிக்கு எதிரில் மிகவும் அதிசயமாக இரண்டு குட்டி மூஞ்சூறுகளுடன் ஒரு பெரிய மூஞ்சூறும் வாகனமாக வீற்றிருக்கின்றன. இவ்விதம் அமைந்திருக்கும் ஒரே பிள்ளையார் கோயில் இதுவாகத்தான் இருக்கும்.
திருமணத்தடை நீங்க, புத்திர பாக்கியம், குழந்தைகள் கல்வியின் சிறந்து விளங்க என்று எல்லா பிரார்த்தனைகளும் இந்தப் பிள்ளையார் கோயிலில் மேற்கொள்ளப்பட்டு, நிறைவேறுகின்றன என்பது கோயிலுக்கு வரும் பக்தர்களின் அனுபவமாக இருக்கிறது.