மலை மீது இருக்கும் முருகன் கோயில் என்றாலே எப்போதும் தனிச்சிறப்பு உண்டு. அந்த வகையில், தமிழகத்தின் தேனி மாவட்டம், கம்பம் என்னும் இடத்தில் அமைந்துள்ளது சுருளிமலை முருகன் கோயில். இங்கு முருகப்பெருமான் சுருளிவேலப்பர் எனும் பெயரில் வணங்கப்படுகிறார்.
இக்கோயில் 2000 ஆண்டுகள் பழைமையான மலைக்கோயிலாகும். இத்தலத்தை, ‘நெடுவேல் குன்று’ என்றும் அழைப்பார்கள். இக்கோயில் சுருளி அருவி மற்றும் சுருளி பூத நாராயண சுவாமி கோயில் அருகில் உள்ளது. இங்கே இருக்கும் நிறைய நீர் சுணைகள் மருத்துவ குணங்களை கொண்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இது ஒரு குகை கோயிலாகும்.இங்கிருக்கும் தண்ணீரில் இலை, தண்டு போன்றவை 48 நாட்கள் இருந்தால் கல்லாக மாறும் என்று கூறுகிறார்கள். இங்கே இருக்கும் ஈர மண் அள்ள அள்ள விபூதியாக மாறும் என்று நம்பப்படுகிறது.
ஒரு சமயம் நிறைய ரிஷிகளும், தேவர்களும் சிவபெருமான் மற்றும் பார்வதி தேவியின் திருமணத்தைக் காண கயிலாய மலைக்கு சென்றதால், வடக்கே உயர்ந்தும், தெற்கே தாழ்ந்தும் போய்விட்டது. இதனால் சிவபெருமான் அதை சமன் செய்ய அகத்திய முனிவரை தென்திசை நோக்கி அனுப்பினார். இதனால் அகத்தியரால் சிவன் - பார்வதி திருமணக்கோலத்தை காண முடியவில்லை என்று வருத்தப்பட்ட போது, இக்குகையிலே அகத்தியருக்கு மணக்கோலத்தில் ஈசன் காட்சி தந்தார். ஆதலால் இக்குகை ‘கயிலாச குகை’ என்று அழைக்கப்படுகிறது. நம் வாழ்வில் செய்த பாவங்களிலிருந்து விடுப்பட இத்தல முருகனை வேண்டி பால்குடம் ஏந்தி, மொட்டை அடித்து பூஜை செய்வது நன்மை பயக்கும்.
இக்கோயிலில் சுருளிவேலப்பர், சிவன், மகாவிஷ்ணு, விநாயகர், அகத்தியர், சப்த கன்னியர், நாக தேவதைகள், ஸ்ரீராமர், லக்ஷ்மணர், சந்தான கிருஷ்ணர், வள்ளி, வீரபாகு ஆகியோரும் உள்ளனர். மேலும், இங்கே விபூதி குகை, சர்ப்ப குகை, பட்டய குகை, கிருஷ்ண குகை, கன்னிமார் குகை ஆகிய குகைகள் உள்ளன. இங்கே இருக்கும் ஒவ்வொரு குகையிலும் ஒரு நீரூற்று உள்ளது. இக்கோயிலில் உள்ள தீர்த்தம், சுரபி தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. இங்கிருக்கும் ஈரமான மண் காய்ந்ததும் திருநீராக மாறுவதாக சொல்லப்படுகிறது. அப்படிக் கிடைக்கும் திருநீர் அள்ள அள்ளக் குறையாது என்று கூறுகிறார்கள். தண்ணீரில் விழுந்த இலை 48 நாட்கள் இருந்தால் பாறையாக மாறுமாம்.
இங்கிருக்கும் கன்னிமார் குகையில் நாகக் கன்னிகள் வாழ்வதாகக் கூறப்படுகிறது. இங்குள்ள நாகக் கன்னிகள் அனுமதித்தால் மட்டுமே கயிலாய குகைக்கு பக்தர்கள் செல்ல முடியும் என்று நம்பப்படுகிறது.
இக்கோயிலில் சித்திரை உத்ஸவம், ஆடி பதினெட்டு, தைப்பூசம், வைகுண்ட ஏகாதசி, ஆடிப்பூரம், வைகாசி விசாகம், பங்குனி உத்திரம் ஆகிய பண்டிகைகள் இக்கோயிலில் கொண்டாடப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, ஒருமுறையாவது இந்த அதிசயக் கோயிலுக்கு சென்று முருகப்பெருமானை வழிபட்டு வருவது சிறப்பாகும்.