Vibhuti's history and its glory 
ஆன்மிகம்

விபூதி உருவான வரலாறும் அதன் பெருமையும்!

ஆர்.ஜெயலட்சுமி

கோயிலில் அர்ச்சகர் கொடுக்கும் விபூதியை வலது கையில் இருந்து இடது கைக்கு மாற்றாமல் அப்படியே, ‘சிவ சிவ’ என்று வடக்கு முகமாக நெற்றியில் பூச வேண்டும் என்பது ஐதீகம். திருநீற்றினை எக்காரணம் கொண்டும் கோயில் சுவற்றினில் தூண்களில் என எந்த இடத்திலும் கொட்டக் கூடாது. திருநீற்றை பூசும்போது கீழே சிந்தாமல் பூச வேண்டும். அப்படி சிந்தினால் அதை தங்கள் கரங்களால் துடைக்க வேண்டும்.

பேப்பரில் விபூதியை மடிப்பதைக் காட்டிலும் பன்னீர் இலை அல்லது வெற்றிலையில் மடித்துச் எடுத்துச் செல்வது மிகுந்த பலனைக் கொடுக்கும் பசுஞ்சாணம் விபூதி மிகுந்த பலனைக் கொடுக்கும். கோயிலில் கொடுக்கும் விபூதியை தாங்கள் மற்றவர்களுக்குக் கொடுக்கும் நோக்கம் இருந்தால் வீட்டுக்கு எடுத்துச் செல்லலாம். இல்லையெனில் உடல் முழுவதும் பூசிக்கொள்ளலாம். பெண்கள் மாதவிடாய் காலத்திலும் விபூதியை தரிக்கலாம். இதனால் தீட்டு கிடையாது.

இரவு உறங்குவதற்கு முன்பு திருநீற்றை பூசி உறங்கினால் நன்றாகத் தூக்கம் வரும். பயம் நீங்கும், தீய கனவுகள் பலிக்காது. திருநீற்றை நெற்றியில் பூசும்போது மூன்று விரல்களால் மட்டுமே பூச வேண்டும் என்கிற விதி உள்ளது. திருநீற்றை தீட்சை பெற்றவர்கள் மட்டும் தண்ணீரில் குழைத்துப் பூச அனுமதி உண்டு. இனி, விபூதி உருவான கதையை பார்ப்போம்.

பர்ணநாதன் என்பவன் உணவையும் தண்ணீரையும் மறந்தவனாக ஈசனை நினைத்து கடுந்தவம் புரிந்தான். ஒரு நாள் அவனுக்கு கடுமையான பசி எடுத்தது. தவம் கலைந்தது. கண்ணைத் திறந்தான். அப்போது அவனைச் சுற்றி சிங்கங்களும் புலிகளும் பறவைகளும் என பல வன உயிரினங்கள் யாவும் காவலுக்கு இருந்தன. பசியால் முகம் வாடி இருந்தவனைக் கண்ட பறவைகள் பழங்களை பறித்து பர்ணநாதன்  முன் வைத்தன. இது ஈசனின் கருணையே என்ற மகிழ்ந்து பசி தீர கனிகளை சாப்பிட்டு முடித்து, மீண்டும் தவத்தை தொடர்ந்தான். இப்படியே பல வருடங்கள் கடந்து ஓடியன.

தவத்தை முடித்துக் கொண்டு சிவ வழிபாட்டை தொடங்கினான். ஒரு நாள் தர்ப்பை புல்லை அறுக்கும்போது அவன் கையில் கத்தி பட்டு இரத்தம் கொட்டியது. அவனுக்கோ எந்த பதற்றமும் இல்லை. குழந்தைக்கு ஆபத்து என்றால் தாய் பதறுவதைப் போல பதறியது ஈசன்தான். சிவபெருமான் வேடன் உருவில் தோன்றி பர்ணநாதன் கையை பிடித்தார். என்ன ஆச்சரியம்? இரத்தம் சொட்டிய இடத்தில் விபூதி கொட்ட ஆரம்பித்தது. வந்தது தாயுமானவர் என்பதை அறிந்தான் பர்ணநாதன். ‘இரத்தத்தை நிறுத்தி சாம்பலை கொட்டச் செய்த தாங்கள், நான் வணங்கும் சர்வேஸ்வரன் என்பதை நான் அறிவேன். இந்த அடியேனுக்கு தங்கள் சுய உருவத்தைக் காண பாக்கியம் இல்லையா?’ என்று வேண்டினான் பர்ணநாதன்.

ஈசன் தனது சுய ரூபத்தில் அவனுக்குக் காட்சி கொடுத்து, “உனக்காகவே இந்த சாம்பலை உருவாக்கினேன். உனது நல் தவத்தால் விபூதி உருவானது. அதனால் இந்த சாம்பல் இன்று முதல் விபூதி என்று அழைக்கப்படும். அக்னியை எதுவும் நெருங்க முடியாததைப் போல, இந்த விபூதியை பூசி அணிந்து கொள்பவர்களின் அருகில் துஷ்ட சக்திகள் எதுவும் நெருங்காது. விபூதி எனது ரூபம். அதற்கு நீயும் துணையாக இருந்து வா” என்று ஆசி வழங்கினார் சிவபெருமான்.

‘விபூதியால் என்ன நன்மை?’ என்று ஸ்ரீ ராமர், அகத்திய முனிவரிடம் கேட்டார். ‘பகை, தீராத வியாதி, மனநல பாதிப்பு ,செய்வினை பாதிப்பு இப்படி எதுவாக இருந்தாலும் தொடர்ந்து விபூதியை அணிந்து வந்தால் அந்தப் பிரச்னைகள் விலகும்’ என்று அகத்திய முனிவர், ஸ்ரீராமருக்கு உபதேசம் செய்தார்.

ஸ்ரீ மகாலட்சுமிக்கும் உகந்தது விபூதி. விபூதி கலந்த நீரில் தினமும் அவள் நீராடுகிறாள். ‘திரு’ என்றால் மகாலட்சுமி. அதனால் விபூதியை திருநீறு என அழைக்கிறோம்.

பூச்சிகளின் கூட்டுக்கண்கள் பற்றி தெரியுமா? 

செம்பட்டை முடி கருகருன்னு மாறணுமா? வறண்ட கூந்தல் வளம் பெறணுமா? இதை ட்ரை பண்ணுங்க..!

சிறுகதை: என்னவள்... terms and conditions!

சென்னை அரசு மருத்துவமனையில் ஆன்மீகவாதியின் படம் வந்தக் கதை தெரியுமா?

பச்சை நிற ஏரி, யானைப் பாறை, வெந்நீர் ஊற்று - மிரள வைக்கும் அழகைக் கொண்ட 3 இடங்கள்!

SCROLL FOR NEXT