Vishnupathi Punyakaalathin Sirappu Theriyumaa?
Vishnupathi Punyakaalathin Sirappu Theriyumaa? https://tamil.oneindia.com
ஆன்மிகம்

விஷ்ணுபதி புண்யகாலத்தின் சிறப்பு தெரியுமா?

சேலம் சுபா

புண்யகாலம் என்பதை விஷு புண்யகாலம், உத்தராயண புண்ய காலம், தக்ஷிணாயண புண்ய காலம் என பலவாறாகக் கூறுவோம். இதைப்போலவே மாசி மாதம் முதல் நாள் வாழ்வில் வளம் சேர்க்கும் விஷ்ணுபதி புண்யகாலம் என்பதும் மிகவும் சிறப்பானது.

ஒவ்வொரு வருடமும் நான்கு விஷ்ணுபதி புண்யகாலங்கள் வருவதுண்டு. தமிழ் மாத கணக்கின்படி மாசி, வைகாசி, ஆவணி, கார்த்திகை மாதங்களில் இந்த விஷ்ணுபதி புண்யகாலம் வருகிறது.

பொதுவாக, திதிகளில் சிறந்ததான ஏகாதசியை மகாவிஷ்ணுவிற்கு மிகவும் உகந்ததாக சாஸ்திரங்கள் கூறுகின்றன. ஏகாதசி அன்று ஒருவர் செய்யும் பூஜைகளும், அனுஷ்டிக்கும் விரதமுறையும் அனைத்திலும் சிறந்த பலன் தரும் என்பர். ஆனால், அந்த ஏகாதசியை விடவும் மிகவும் சிறந்த பலனைத் தர வல்லது விஷ்ணுபதி புண்யகாலம் ஆகும்.

மகாவிஷ்ணுவின் அருளும் கருணையும் மிகவும் அதிகமாகவும், பூரணமாகவும் துலங்கும் அரிதான நாளாக இந்த தினம் அமைந்துள்ளது.

இவ்வளவு சிறப்புமிக்க விஷ்ணுபதி புண்யகாலமான மாசி மாதம் முதல் நாள் (நாளைய தினம்) அதிகாலை வேளையிலேயே எழுந்து நீராடி, பூஜை அறையில் பெருமாளை நினைத்து தீபமேற்றி வைத்து வழிபடலாம். வீட்டுக்கு அருகில் உள்ள பெருமாள் கோயில் சென்றும் வழிபாட்டை மேற்கொள்ளலாம். காலை 10 மணிக்கு முன்பு பெருமாள் கோயிலுக்கு சென்று வழிபாடு செய்வது நல்லது.

இந்த புண்யகாலத்தில் நாம் மகாவிஷ்ணுவையும், மஹாலக்ஷ்மியையும் மனதார வழிபாட்டு துதிகளைக் கூறி நமது சக்திக்கு இயன்ற பூஜைகளை செய்து எல்லா தேவைகளையும், வேண்டுதல்களையும் கூறி பிரார்த்திக்கலாம்.

பூஜை செய்யும் சூழல் இல்லாதவர்களும் அருகில் உள்ள விஷ்ணு ஆலயத்திற்கு அந்த குறிப்பிட்ட நேரத்தில் சென்று வழிபடலாம். துளசி பூஜை, கோ பூஜை மற்றும் ஸ்ரீதேவிக்கு ப்ரீத்தியைத் தரக்கூடிய காரியங்களை எல்லாம் சக்திக்குத் தகுந்தவாறு மேற்கொள்ளலாம். மற்ற விரத நாட்களில் செய்யக்கூடாத செயல்களைத் தவிர்ப்பதைப் போலவே இந்த நாளிலும் தவிர்ப்பது நன்று.

ஒருவர் ஒரு முறை இந்த விஷ்ணுபதி புண்யகால விரதத்தை அனுஷ்டிப்பது பல ஏகாதசி விரதங்களை அனுஷ்டித்ததற்கு சமம் என சாஸ்திரங்கள் கூறுகின்றன.

விஷ்ணுபதி புண்யகாலத்தில் பெருமாள் கோயிலுக்கு சென்று கொடி மரத்தினை வணங்கி 27 பூக்களை கையில் வைத்து கொண்டு 27 முறை பிராகார வலம் வாருங்கள். ஒவ்வொரு சுற்றுக்கும் ஒரு பூவை கொடி மரத்திற்கு முன்பு வைக்கலாம். 27 சுற்று முடித்த பின்பு மீண்டும் ஒருமுறை கொடிமரத்தை நமஸ்கரித்து வணங்குங்கள். கொடிமரம் இல்லாத பெருமாள் கோயில்களில் பிராகார வலம் வந்தாலே போதும்.

இந்த விரதத்தை அனுஷ்டிப்பதன் மூலம் உலகாதாயமான தேவைகளையும் மகிழ்ச்சியான மற்றும் செல்வ செழிப்புமிக்க வளமான வாழ்வினையும் பெற முடியும் என சாஸ்திரங்கள் கூறுகின்றன. மேலும், நமது அக வளர்ச்சி, ஆனந்தம், ஆன்மிக முன்னேற்றம், மன அமைதி மற்றும் மோட்சத்தையும் தரவல்லது விஷ்ணுபதி புண்யகால வழிபாடு ஆகும்.

Beard Growth Tips: இது தெரிஞ்சா தாடி வளர்ப்பது ரொம்ப ஈசி! 

மீண்டும் வருவாரா தோனி?

EPFO அறிமுகப்படுத்திய தானியங்கி முறையின் அம்சங்கள்!

IPL இறுதி கட்டத்தை நோக்கி இன்றைய மேட்ச்..! KKR (Vs) SRH – ஜெயிக்கப் போவது யாரு?

உலகின் இரண்டாவது சுவையான குடிநீர் சிறுவாணி பற்றி தெரியுமா?

SCROLL FOR NEXT