‘கோதை பிறந்த ஊர், கோவிந்தன் வாழும் ஊர் எனப் போற்றப்படும் திருத்தலம் ஸ்ரீவில்லிபுத்தூர்! ‘ஸ்ரீ’ என்றால் லக்ஷ்மி. இவளே ஆண்டாளாக அவதாரம் செய்தாள். ‘வில்லி’ என்பது இவ்வூரை ஆண்ட மன்னனின் பெயர். பாம்புப் புற்று நிறைந்த பகுதியாக இது இருந்ததால், ‘புத்தூர்’ எனப் பெயர் வந்தது. பிற்காலத்தில், இவற்றை மொத்தமாகத் தொகுத்து ‘ஸ்ரீவில்லிபுத்தூர்’ என அழைத்தனர்.
சூடிக் கொடுத்த சுடர்க் கொடியாம் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார், அவளது தந்தை விஷ்ணு சித்தர் ஆகியோரின் அவதாரத் தலமும் இதுவே! விஷ்ணு சித்தர், பெருமாளுக்குப் புஷ்ப கைங்கர்யம் செய்ததும், அவரது நந்தவனத்தில் ஸ்ரீ ஆண்டாள் அவதரித்ததும், பெருமாள் மீதான காதல் கலந்த பக்தியால், அவருக்கான மாலையை ஆண்டாள் சூடிக்கொடுத்ததுமான அற்புதத் திருத்தலம் இது!
ஸ்ரீவில்லிபுத்தூர் புராண வரலாறு மெய்சிலிர்க்கச் செய்வது என்றால், அத்தலத்தில் ஓங்கி உயர்ந்து நின்று எழிலூட்டுகிற ராஜகோபுரத் தகவல்கள் சுவாரஸ்யமானவை. விஷ்ணு சித்தருக்கு, ‘பெருமாள் குடிகொண்டிருக்கும் இந்த ஆலயத்துக்கு ஓர் கோபுரம் எழுப்ப வேண்டும்!’ என்று ஆசை! ஸ்ரீவல்லபதேவ பாண்டிய மன்னர், பரம்பொருளை விளக்கும்படி ஒரு போட்டி வைத்தார். அதில் வெற்றி வாகை சூடி, பொற்கிழி பரிசினைப் பெற்றார் விஷ்ணு சித்தர். அத்துடன், கோபுரம் எழுப்புகிற தனது ஆசையையும் மன்னரிடம் தெரிவித்தார். இதைக் கேட்ட மன்னர், அழகிய, ஓங்கி உயர்ந்த ராஜகோபுரத்தைக் கட்டிக் கொடுத்தார்.
பெரிய தேர், பெரியாழ்வார், பெரிய குளம்... என அமைந்த இந்தத் தலத்தில் மன்னர் பெருமான் கட்டித் தந்த கோபுரமும் மிகப்பெரியது. இன்றைக்கும் அழகு குறையாமல், பொலிவுடன் காட்சி தருகிறது இந்த ராஜகோபுரம்! கவிச்சக்கரவர்த்தி கம்பர், அந்த கோபுரத்தின் உயரம் மற்றும் கட்டுமானங்களைக் கண்டு வியந்து பாடியிருக்கிறார். கோபுரத்தின் முன்பக்கத் தோற்றம் எப்படி அமைந்திருக்கிறதோ, அதேபோல் கோயிலின் பின்பக்கத் தோற்றமும், அதாவது கோயிலில் இருந்து பார்க்கின்ற கோபுரப் பகுதியும் அமைந்துள்ளது இதன் சிறப்பு!
ஏழாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த கோபுரம், சுமார் 196 அடி உயரமும், தெற்கு வடக்காக சுமார் 120 அடி, கிழக்கு மேற்காக சுமார் 82 அடி அகலமும் கொண்டது; 11 நிலை; 11 கலசங்கள் கொண்டது! கிருஷ்ண தேவராயர், திருமலை நாயக்கர் என மன்னர்கள் பலராலும் திருப்பணி செய்யப்பட்டு பராமரிக்கப்பட்ட ஆலயம் இது. பெரியாழ்வாரின் பரம்பரையினர் இந்தக் கோயிலின் கைங்கர்யப் பணியில் இன்றளவும் ஈடுபட்டு வருகின்றனர். இக்கோயில் கோபுரம் தமிழக அரசின் சின்னமாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. கோடி அதிசயங்களையும் அற்புதங்களையும் ஒருங்கே கொண்டுள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் கோபுரத்தை தரிசியுங்கள்; கோடி புண்ணியங்களைப் பெற்றிடுங்கள்!