புகழ்பெற்ற ஃப்ரான்ஸ் ஜோதிடரான நாஸ்ட்ரடாமஸ் கணித்த ஏராளமான விஷயங்கள் உண்மையாகவே நடந்திருக்கின்றன. அந்தவகையில் அவர் விஷ்ணுவின் கல்கி அவதாரத்தைப் பற்றி என்ன கூறியிருக்கிறார் என்று தெரியுமா?
ஜோதிடர் மற்றும் மருத்துவரான நாஸ்ட்ரடாமஸ் கூறிய அனைத்தும் அப்படியே நடக்கின்றன. அவருடைய குறிப்புகளைத் திரும்பத் திரும்ப ஆராய்ந்து, அவர் சொன்னவற்றில் எவையெல்லாம் நடந்திருக்கின்றன என்று வியந்துப்போகிறார்கள் ஆய்வாளர்கள். அவரால் எப்படிச் சரியாக எதிர்காலத்தைக் கணிக்க முடிந்தது என்பது ஆய்வாளர்கள் உட்பட யாருக்குமே விளங்கவில்லை. 1503-ம் ஆண்டு, டிசம்பர் 14-ம் தேதி ஃபிரான்ஸில் பிறந்தார், மைக்கேல் என்கின்ற நாஸ்ட்ரடாமஸ். இவர் யூத இனத்தைச் சேர்ந்தவர். அதனால் இவருக்கு சிறுவயதிலேயே ஜோதிடம் போன்றவற்றில் ஆர்வம் இருந்தது.
கிரேக்கம், லத்தீன், ஹீப்ரு போன்ற மொழிகளைக் கற்றார். அதன்பின்னர் ' உலகம் முடியும் வரைக்குமான தன்னுடைய கணிப்புகளை எழுதத் தொடங்கினார். The Centuries என்ற நூலில் தன்னுடைய கணிப்புகளை எழுதினார். இதனால் இவர்மீது வழக்குத் தொடுக்கப்பட்டது. பலர் இவரைப் பழித்தும் பேசினார்கள். தன்னுடைய இறுதி நாட்களில் மூட்டு தொடர்பான பிரச்சனைகளால் கஷ்டப்பட்டார். அப்போது, உயில் எழுதுவதற்காக பதிவாளர் வரவழைக்கப்பட்டார். அவரிடம் நாஸ்ட்ரடாமஸ், "நான் நாளை காலை இறந்துவிடுவேன்.’’ என்று கூறியிருக்கிறார். அதேபோல் நாஸ்ட்ரடாமஸ் அடுத்த நாளே இறந்துவிட்டார்.
இவர் கென்னடி சகோதரர்களின் படுகொலை, இங்கிலாந்து இளவரசி டயானா கார் விபத்தில் மரணம் அடைந்தது, மூன்றாம் உலகப்போர், உலகம் அழிவது குறித்த பல சம்பவங்களை முன்பே கண்டறிந்துள்ளார்.
அதேபோல், ஹிட்லர், ஹிரோஷிமா நாகசாகி சம்பவம், இந்திரா காந்தி, நேதாஜி, மகாத்மா குறித்து எத்தனை எத்தனையோ விஷயங்களை அந்தப் புத்தகத்தில் முன்பே கூறிவிட்டார். அதன்பின்னர் அந்தப் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டவர்கள் வந்தார்கள், வாழ்ந்தார்கள், இறந்தார்கள். அவர் குறிப்பிட்ட நிகழ்வுகளும் நிகழ்ந்தன.
உதாரணத்திற்கு சில சம்பவங்கள்:
இந்திரா காந்தி குறித்து எழுதியதாவது: மூன்று புறம் கடல் சூழ்ந்த நாட்டில், பெரும் அதிகாரம்கொண்ட பெண்மணி எதிர்க்கட்சிகள் ஒற்றுமை இன்றி இருப்பதால் அதிகாரத்தை மீண்டும் பெறுவார். தனது சொந்த மெய்க்காப்பாளர்களாலேயே அவர் 67-ம் வயதில் கொல்லப்படுவார். நூற்றாண்டு முடிய 16 ஆண்டுகள் இருக்கும்போது இது நடக்கும்' என்று அந்தப் புத்தகத்தில் குறிப்பிட்டார் நாஸ்ட்ரடாமஸ்.
எமர்ஜென்ஸியால் தேர்தலில் தோற்றுப்போன இந்திரா காந்தி எதிர்க்கட்சிகள் ஒற்றுமை இல்லாமல் தமக்குள் சண்டை போட்டுக்கொண்டதால் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியதையும், 1984-ம் ஆண்டில் அவர் சொந்த மெய்க்காப்பாளர்களில் ஒருவரால் சுட்டுக்கொல்லப்பட்டதையும் இது குறிக்கிறது.
இஸ்ரேல் தோற்றம் :
`புதிய நிலத்தில் புதிய சட்டம். சிரியா, பாலஸ்தீனம், ஜூடியா போன்றவை பிரியும்.’ - இஸ்ரேல் நாடு உருவானதை இது குறிக்கிறது.
ஹிரோஷிமா-நாகசாகி :
`துறைமுகத்திற்கு அருகில் இரண்டு நகரங்கள் முன்பு ஒருபோதும் கண்டிராத அளவு பேரழிவுக்கு உள்ளாகும். பஞ்சம், கொள்ளை நோய் இருக்கும். மக்கள் உதவிக் கேட்டு ஓலமிடுவார்கள்.’ - இது ஹிரோஷிமா மற்றும் நாகசாகி சம்பவத்தை உணர்த்துகிறது.
ஹிட்லர் :
`முற்றுகையிட்டவர்களின் கோட்டை, துப்பாக்கி மற்றும் வெடி மருந்தால் மூடப்படும். துரோகிகள் உயிரோடு சமாதி ஆவார்கள்’ என்று நாஸ்ட்ரடாமஸ் குறிப்பில் உள்ளது. அதாவது, ஹிட்லர் மற்றும் அவருடைய கூட்டாளிகள் குழியில் இறந்ததைக் கூறுகிறது.
அந்தவகையில் அவர் விஷ்ணுவின் கல்கி அவதாரத்தைப் பற்றி அந்தப் புத்தகத்தில் குறிப்பிட்டிருந்ததைப் பார்ப்போம்.
ஒரு நபர் முக்கடலால் சூழப்பட்ட ஒரு இடத்தில் பிறப்பார். வியாழக்கிழமை அதிக சக்திகளுடனும் பலத்துடனும் பிறக்கப்போகும் அவரே கடலையும் நிலத்தையும் ஆழ்வார். அனைத்துத் தீய நிகழ்வுகளிலிருந்தும் மக்களைக் காப்பவர் அவர்.
அந்த மனிதன் நிலத்தில் தன் மகுடத்தை இறக்கி வைத்துவிட்டு, கடலுக்கடியில் சென்று ஒரு தீயவனை இரும்பு ஆயுதத்தால் தாக்கிக் கொல்வார். கிழக்கில் எந்த மதம் அதிகம் இருக்கிறதோ, அந்த மதத்தில் பிறப்பார். அந்த நாடு, சமுத்திரத்தின் பெயரைக் கொண்டிருக்கும். அவர் ஃப்ரான்ஸ் நாட்டைக் கடந்து பகைவர்களை அழிப்பார் என்று அந்தப் புத்தகத்தில் தெளிவாக கூறியிருக்கிறார்.
ஆகையால், இது அனைத்துமே விஷ்ணுவின் கடைசி அவதாரமான கல்கி அவதாரத்தைப் பற்றி என்றே ஆய்வாளர்களும் உலக மக்களும் கணிக்கின்றனர்.