Sri Ramar with sita devi
Sri Ramar with sita devi 
ஆன்மிகம்

யார் அந்த இரு மாதர்?

ஆர்.ஜெயலட்சுமி

திருமணத்திற்குப் பிறகு சீதா தேவியை அலங்காரம் செய்து ஸ்ரீ ராமபிரானின் இருப்பிடத்திற்கு அனுப்பி வைத்தனர். ஸ்ரீ ராமபிரான் உறங்குவது போல கண்ணை மூடிக் கொண்டிருந்தார் . சீதாப்பிராட்டி அவர் அருகே சென்று காலடியில் அமர்ந்தார். ‘தேவி, என் பாதங்களைப் பிடித்து விடேன்’ என்று புன்முறுவலுடன்  கூறினார் ராமபிரான் . ஆனால், சீதா தேவி தலையை குனிந்து கொண்டாள். பாதங்களை பிடித்து விடவில்லை.

அதைக்கண்ட ஸ்ரீராமபிரான், ‘என்ன தேவி, அரச குமாரியான  நாம் பாதங்களை பிடிக்கும் பணியை செய்வதா என்ற தயக்கமா? அவ்வாறாயின் வேண்டாம்’ என்று பாதங்களை இழுத்துக்கொண்டார்.

‘அப்படியல்ல சுவாமி, ஒரு கதை கேள்விப்பட்டேன். தாங்கள் மிதிலை வரும் வழியில் ஒரு கல்லை தங்கள் பாதம் தீண்ட அழகான பெண்ணொருத்தி வெளி வந்து நின்று வணங்கினாளாம். இன்று எனக்கு அலங்காரம் செய்யும்போது நவரத்தின கற்கள் கொண்ட மோதிரத்தை பூட்டி உள்ளனர். தங்கள் பாதம் பட்டவுடன் நவரத்தின கற்கள் அழகிய கன்னியாக உருப்பெற்று வந்து நின்றுவிட்டால் என்ன செய்வது? எனக்குப் போட்டி ஏற்பட்டு விடுமோ என்றுதான் அஞ்சுகின்றேன்’ என்று குறும்புடன் சொல்லி சிரித்தார் பிராட்டி.

ஸ்ரீராமர் எழுந்து உட்கார்ந்து கொண்டார். தனது கையில் சீதா தேவியின் உள்ளங்கையை எடுத்து வைத்துக்கொண்டு, அதன் மீது தமது கையை வைத்து சத்தியம் செய்து கொடுத்தார். ‘தேவி, உன்னைத் தவிர இரு மாதரை மனதாலும் தீண்டேன்’ என்று உறுதிமொழி கூறினார்.

கம்பன் கூறும் இந்த நிகழ்ச்சியில் இரு மாதர் என்று வரும் பாடல் வரிக்கு பொருள் கூறும்போது, ‘நீ ஒருத்திதான் எனக்கு உரியவர். வேறு மாதரை இரண்டாவதாக மனதாலும் தீண்ட மாட்டேன்’ என்று சொல்வதாகவே எல்லோரும் கூறுவார்கள். அது சரியில்லை. மகாவிஷ்ணுவுக்கு ஸ்ரீதேவி பூதேவி நீளாதேவி என்ற மூன்று மனைவிமார் உண்டு. பூவுலகில் ராமபிரானாக அவதரித்தபோது, ஸ்ரீதேவி சீதையாக அவரை மணந்து கொள்ள வந்து விட்டாள்.

ஆனால், பூதேவியும் நீளாதேவியும் வைகுண்டத்திலேயே தங்கி விட்டனர். இந்த ஜன்மத்தில் பூமிக்கு  வந்து விட்ட பிறகு வைகுந்தத்தில் இருக்கும் எனக்குரிய தேவியரான பூதேவியையும் நீளா தேவையும் கூட நான் மனதாலும் நினைக்க மாட்டேன் என்று ராமபிரான் கூறியதாகத்தான் அதற்கு பொருள் கூற வேண்டும்.

திருமணம் மூலம் தன்னை அடைந்திராத வேறு பெண்களை தான் மனதாலும் நினைக்க மாட்டேன் என்று கூறுவதில் தனியாக சிறப்பு ஒன்றும் இல்லை. ஆனால், தன்னை மனைவியாக அடைந்திருந்த, தனக்கு உரிமையானவர்களான இரு தேவியரையும் கூட தமது மனத்தாலும் தீண்ட மாட்டேன் என்று கூறியதில்தான் எத்தனை பெருமை, சிறப்பு அடங்கியுள்ளது.

ஒரு உபன்யாசத்தில் கேட்டது…

கொன்றை பூவின் ஆரோக்கிய மகத்துவம் தெரியுமா?

உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?

Remote Work: தொழில்நுட்பமும், தொலைதூர வேலைகளும்! இதுதான் எதிர்காலமா? 

18 முறை படையெடுத்தும் 6 முறை தரைமட்டமாகியும் மீண்டெழுந்த ஆலயம்!

Managing Debts: சாமானியர்களுக்கான கடன் நிர்வாக யுக்திகள்! 

SCROLL FOR NEXT