Who knows the right to light the lamp in Thiruvannamalai? 
ஆன்மிகம்

திருவண்ணாமலையில் தீபம் ஏற்றும் உரிமை யாருக்குத் தெரியுமா?

கே.எஸ்.கிருஷ்ணவேனி

திருக்கார்த்திகையன்று திருவண்ணாமலையின் மலை உச்சியில் வருடா வருடம் மகாதீபம் ஏற்றப்படுவது மிகத் தொன்மையான வழக்கமாக இருந்து வருவது அனைவருக்கும் தெரிந்த விஷயம். இப்படி மலை உச்சியில் தீபம் ஏற்றி அண்ணாமலையாரை வழிபடும் உரிமையைப் பெற்றவர்கள் பர்வத ராஜகுலத்தினர் (மீனவர்) என்பது பலருக்கும் தெரியாத விஷயம். இவர்கள் செம்படவர்கள் என அழைக்கப்படுகின்றனர்.

தீபத் திருநாள் அன்று காலையில் மலையடிவாரத்தில் ஏற்றப்படும் தீபம் பரணி தீபம் என்றும், மாலையில் மலை உச்சியில் ஏற்றப்படுவது மகா தீபம் என்றும் அழைக்கப்படுகிறது. இதன் தாத்பரியம் என்னவென்றால், சிவபெருமான் அக்னி பிழம்பாக, நெருப்பு மலையாக நின்றார் என்பதை நினைவுபடுத்தும் வகையில் இந்த தீபம் ஏற்றப்படுகிறது. 2,668 அடி உயரம் கொண்ட இம்மலை மீது இரும்பு கொப்பரை கொண்டு தீபம் ஏற்றுவார்கள். இந்த தீபம் ஏற்ற சுமார் 3000 கிலோ நெய்யும், 1000 மீட்டர் காடா துணியும் பயன்படுத்தி தீபம் ஏற்றப்படுகிறது.

கார்த்திகை மாத பௌர்ணமி நாளில் கிருத்திகை நட்சத்திரமும் சேர்ந்த திருக்கார்த்திகை அன்று மலையை வலம் வருதல் சிறப்பான ஒன்றாக கருதப்படுகிறது. அதேபோல், பெரும்பாலான சிவாலயங்களில் இன்று சொக்கப்பனை கொளுத்துதல் வழக்கத்தில் உள்ளது.

பூலோக கற்பக விருட்சம் என்று புராணங்கள் போற்றும் பனை மரத்திற்கு நிறைய சிறப்புகள் உண்டு. பனை ஓலைகளைக் கொண்டு கூரை வேயவும், ஓலையின் அடி காம்புகள் கொண்டு நார் எடுத்துப் பயன்படுத்தவும், நுங்கு உணவாகவும், பனைமரத்தின் பாளையை வெட்ட பதநீர் கிடைப்பதும் என பனையின் அனைத்து பாகங்களும் நமக்கு பயன் தருவதால் இதனை, ‘பூலோக கற்பக விருட்சம்’ என்று சிறப்பித்து கூறுவர்.

சங்க காலத்தில் பனையில் தாலி செய்யும் வழக்கம் இருந்தது. பல கோயில்களில் தல விருட்சமாகவும் உள்ளது இந்த பனை மரம். அப்படிப்பட்ட பனை மரத்தை வெட்டி எடுத்து வந்து ஆலயத்தின் முன்புறத்தே நட்டு பனை ஓலைகளால் அதனைச் சுற்றி அடைத்து உயரமான கூம்பு போன்ற அமைப்பை உருவாக்கி அந்த பனைக்கூம்பின் முன்பு சுவாமி எழுந்தருளுவார்.

சுவாமிக்கு தீபாராதனை முடிந்ததும் சொக்கப்பனை கொளுத்தப்படும். அப்படி கொழுந்து விட்டு எரியும் அந்த ஜோதியை சிவமாக எண்ணி பக்தர்கள் வழிபடுவார்கள்.

அடி, முடி காணவொண்ணா அந்த அண்ணாமலையாரை அக்னி மய லிங்கமாக வழிபடுவதே செக்கப்பனையின் தாத்பரியமாகும். சொக்கப்பனைக்கு அக்னி இட்டு ஜோதி வடிவாகக் காட்சியளிக்கச் செய்து சிவபெருமான் ஜோதிப்பிழம்பாக தோன்றி அருளியதை நினைவுகூர்ந்து வழிபடுவது இன்றளவும் கடைபிடிக்கப்படுகிறது.

புரதச்சத்து மிகுந்த ஜோரான ரெசிபிக்கள் செய்து அசத்தலாமா?

ஒரு மனிதன் எப்போது மனிதனாகிறான் தெரியுமா?

தென்னிந்தியாவின் தாஜ்மகாலைப் பற்றித் தெரியுமா?

மூச்சிரைப்பு வந்தால் அதை சாதாரணமா நினைக்காதீங்க! 

காமதேனு சிலையை வீட்டில் எங்கு வைப்பது நல்லது தெரியுமா? 

SCROLL FOR NEXT