ஆன்மிகம்

குருக்ஷேத்ரத்தில் அர்ஜுனன் தேர் ஏன் எரிந்தது?

எம்.கோதண்டபாணி

பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் குருக்ஷேத்ரத்தில் கடும் போர் நடைபெற்று முடிவுக்கு வந்தது. ஸ்ரீ கிருஷ்ணர் தேரில் அமர்ந்தபடி, “அர்ஜுனா! போர்தான் முடிந்து விட்டதே! ஏன் இன்னும் நின்று கொண்டிருக்கிறாய். தேரை விட்டு இறங்கு!” என்றார்.

“மைத்துனா! நீதான் என்னைப் போரில் வெற்றி பெறச் செய்தாய். வெற்றி பெற்றவனை, தேரோட்டிதான் கையைப் பிடித்து இறக்கி விட வேண்டும் என்ற சம்பிரதாயம் உண்டே! அதை மறந்து விட்டாயே! அப்படி செய்வது எனக்கும் பெருமை அல்லவா! ஆனால், நீயோ என்னைக் கீழே இறங்கு என்று ஆணையிடுகிறாய். இது என்ன நியாயம்?” என்றான்.

அர்ஜுனனின் வார்த்தைகளை ஸ்ரீ கிருஷ்ணர், காதில் வாங்கிக்கொள்ளாமல், “அர்ஜுனா, தேரை விட்டு இறங்கு!” என்றார் கண்டிப்புடன். வருத்தத்துடன் அர்ஜுனன் கீழே இறங்கினான்.

அப்போது ஸ்ரீ கிருஷ்ணர், ”தேரின் பக்கத்தில் நிற்காதே அர்ஜுனா! சற்று தள்ளி நில்!” என்றார் அதட்டலுடன்!

அர்ஜுனனால் கிருஷ்ணரின் அதட்டலைப் பொறுத்துக்கொள்ளவே முடியவில்லை. வெற்றி பெற்ற மகிழ்ச்சி கூட அவனது மனதை விட்டு அகன்றுவிட்டது. ஒன்றும் புரியாதவனாய் தள்ளி நின்றான்.

வாடிய முகத்துடன் நின்ற அவனைக் கண்டு புன்னகைத்த ஸ்ரீ கிருஷ்ணர், தேரிலிருந்து குதித்து ஓடிச்சென்று, அர்ஜுனனை இறுகக் கட்டியணைத்துக் கொண்டார். அந்தக் கணமே அந்தத் தேர் தீப்பற்றி எரிந்தது.

“பார்த்தாயா அர்ஜுனா? தேர் எரிகிறது! அதனால்தான் உன்னை இறங்கச் சொன்னேன்!” என்றார் புன்முறுவலுடன்.

“தேர் ஏன் எரிந்தது?” அர்ஜுனன் எதுவும் புரியாமல் கேட்டான்.

“அர்ஜுனா! போர் புரியும்போது கௌரவர்கள் உன் மீது பல அஸ்திரங்களை ஏவினர். அவற்றின் சக்தி அளவிட முடியாதது. தேரில் நானும், தேர்க்கொடியில் அனுமனும் இவ்வளவுநேரம் அதைத் தடுத்துக் கொண்டிருந்தோம். அதனால், அவை வலிமையற்றுக் கிடந்தன. தேரை விட்டு நான் குதித்ததும், தேர்க்கொடியில் இருந்து அனுமனும் புறப்பட்டு விட்டான். அஸ்திரங்களின் சக்தி தலைதூக்கியது. தேர் பற்றி எரியத் தொடங்கிவிட்டது. உண்மை இப்படி இருக்க, நீயோ போரில் வெற்றி பெற்ற உன்னைக் கௌரவிக்கவில்லை என்று வருத்தப்படுகிறாய். வெற்றி பெற்றதும், ‘நான்’ என்ற ஆணவம் உனக்கு வந்து விட்டது. ஆணவம் அழிவுக்கு வழிவகுக்கும் என்பதை மறந்து விடாதே” என்றார் ஸ்ரீ கிருஷ்ணர்.

அந்தத் தேர் பற்றி எரிந்ததுபோல, அர்ஜுனன் மனதில் இருந்த ஆணவமும் பற்றி எரிந்து சாம்பலானது.

இறைவன் காரணமில்லாமல் யாருக்கும் எந்தக் கஷ்டத்தையும் தருவதில்லை. ஒவ்வொரு கஷ்டத்திலும் நமக்கான நன்மை ஒன்று ஒளிந்து கொண்டு இருக்கிறது என்பதைப் புரிந்து கொண்டால் எந்தத் துன்பமும் நம்மை பாதிக்காது.

ஒரு மனிதன் எப்போது மனிதனாகிறான் தெரியுமா?

தென்னிந்தியாவின் தாஜ்மகாலைப் பற்றித் தெரியுமா?

மூச்சிரைப்பு வந்தால் அதை சாதாரணமா நினைக்காதீங்க! 

காமதேனு சிலையை வீட்டில் எங்கு வைப்பது நல்லது தெரியுமா? 

யானை தந்தத்தால் செய்யப்பட்ட பொம்மைகள் விற்பனை… கைது செய்த வனத்துறையினர்!

SCROLL FOR NEXT