சிவபெருமானின் ஆசீர்வாதம் நிலைத்திருக்க சில விசேஷங்களை மட்டுமே சிவ வழிபாட்டில் வழங்கவேண்டும் என்பது நம்பிக்கை. சிவ வழிபாட்டில் முக்கியமாக சந்தனம், வில்வ இலை மற்றும் பச்சரிசி, திருநீறு ஆகியவை வழங்கப்படுகின்றன. ஆனால், மஞ்சள், குங்குமம் வழங்கப்படாது. அதற்கான காரணத்தை இப்பதிவில் தெரிந்துகொள்வோம்.
குங்குமம் அழகின் சின்னம்
குங்குமம் அழகின் அடையாளமாகக் கருதப்படுகிறது. மேலும், நல்ல அதிர்ஷ்டத்தைத் தருகிறது. குங்குமத்தை திருமணமானப் பெண்கள் பயன்படுத்துகிறார்கள். குங்குமம் பெண்பால் என்று கருதப்படுகிறது. சிவபெருமான் முற்றிலும் துறந்தவராகக் கருதப்படுகிறார். எனவே, குங்குமம் சிவ வழிபாட்டில் வழங்கப்படுவதில்லை.
குங்குமம் மஞ்சளால் ஆனது
குங்குமம் என்பது மஞ்சளில் இருந்து தயாரிக்கப்படும் பொருள் ஆகும். சிவலிங்கத்தின் மீது மஞ்சள் அர்ச்சனை செய்தால் சிவனை வழிபட்ட பலன் கிடைக்காது என்றும், சிவன் கோபம் அடையலாம் என்றும் நம்பப்படுகிறது. இத்துடன் பெண்களின் அழகை அதிகரிக்க மஞ்சள் பயன் படுத்தப்படுவதால் மஞ்சள் சிவனுக்கு உகந்தது இல்லை என்பது நம்பிக்கை.
திருநீற்றின் மகிமை
‘மந்திரமாவது நீறு’ என்று திருஞானசம்பந்தர் போற்றி பாடிய விபூதியை, பசுவின் சாணம் மற்றும் பசு நெய், மூலிகை பொருட்கள், ஆகியவற்றைக்கொண்டு தயாரிக்கின்றனர். மிகவும் கடின முயற்சிகளை மேற்கொண்டாலுமே, மிகக் குறைந்த அளவிலான முதல் தரமான தூய விபூதியைத்தான் தயாரிக்க இயலும்.
அவரவர் மனதிற்கு பிடித்த முறையிலும், செலவு இல்லாத வகையிலும், தினசரி செயல்களில் தானாக அமையும் வகையிலும் இயல்பான விருப்பத்தோடு நெற்றியில் திருநீறு பூசிக்கொண்டு சிவனை வழிபட வேணும்.
சிவபெருமான் தனி மனிதராகக் கருதப்படுகிறார்
சிவபெருமானுக்கு உலக இன்பங்கள் அல்லது பொருள் விஷயங்களில் பற்றுதல் இல்லை என்று நம்பப்படுகிறது. உலக இன்பங்களில் இருந்து விலகி கைலாயத்தில் வசிக்கும் துறவி. இதனாலே அவருக்கு அழகு சார்ந்த எதையும் வழங்குவது வழக்கம் இல்லை என்று அறிவுறுத்தப்படுகிறது. எனவே, சிவ வழிபாட்டில் குங்குமம் பயன்படுத்துவதில்லை.
சிவபெருமான் அழிப்பவராக கருதப்படுகிறார்
அதிர்ஷ்டத்தைப் பாதுகாக்க பெண்கள் குங்குமத்தைத் நெற்றியில் பூசுவார்கள் என்பதும், சிவன் அழிப்பவராகக் கருதப்படுகிறார் என்பதும் நம்பிக்கை. இதனால் குங்குமத்திற்குப் பதிலாக சந்தனம் அல்லது சாம்பலை பூசி சிவ வழிபாடு செய்பவர்களை மகிழ்விக்கலாம். அழகு, அல்லது உலக இன்பத்துடன் தொடர்பு உடைய எந்தவொரு பொருளும் சிவ வழிபாட்டில் ஏற்பதில்லை.
அன்னை பார்வதிக்கு குங்குமம் அளிக்கப்படுகிறது
சிவ வழிபாட்டில் குங்குமம் தடை செய்யப்பட்டாலும் மறுபுறம் அன்னை பார்வதிக்கு குங்குமம் கண்டிப்பாக அளிக்கப்படுகிறது. இப்படி செய்வதால் அன்னையின் அருளுடன் சிவபெருமானின் அருளும் கிடைக்கும். ஏனென்றால் பார்வதி தேவி, சிவனின் பாதியாக இருப்பதாலும், பார்வதி தேவிக்குப் பிடித்தமான பொருள் குங்குமம் என்பதாலும் பரிபூரண அருள் கிட்டும்.
சிவனின் சொத்தாகக் கருதப்படும் திருநீற்றை கோயிலில் வாங்கியதும் நெற்றியில் இட்டுக்கொள்ள வேண்டும். கண்ட இடத்தில் போடக்கூடாது. தினமும் சிவனின் சொத்தாகிய திருநீற்றை அணிந்துவந்தால் நாமும் நம் குலமும் சிறந்து விளங்கி மறுபிறப்பின்றி தப்பித்து விடலாம்.
சிவனுடன் பார்வதியையும் வணங்கி நெற்றியில் சந்தனமும், திருநீறும் பூசி மற்றும் அன்னை பார்வதியின் குங்குமத்தையும் வைத்துக்கொள்வோம்.