காயத்ரி ஜெபம்
கர்ண பரம்பரையாகச் செவி வழியே தலைமுறை தலைமுறையாக ஆயிரம் ஆண்டுகளாகப் பண்டிதர்களால் பயிற்றுவிக்கப்பட்டது வேதமாகும். இதற்கு இன்றளவும் நூல்கள் கிடையாது. ‘எழுதாக் கிளவி’ என அழைக்கப்படும் வேதத்தைப் பயிலத் தொடங்கும் சிறுவர்களுக்கு ஆவணி அவிட்டத்தன்றுதான் முதன்முதலில் பாடம் துவங்கும் வழக்கம் ஏற்பட்டது. வேதம் குறித்த இக்கல்வி ‘உபகர்மா’, ‘ஆவணி அவிட்டம்’ எனக் கூறப்படுகிறது.
ஆவணி அவிட்டத்திற்கு மறுநாள் வரும் காயத்ரி ஜெபம் மிக சக்தி வாய்ந்ததாகும். சிறு வயது முதல் அக்கறையுடனும், அன்புடனும் செய்து வருகின்ற காயத்ரி ஜெபம் மானசீக சக்தி மற்றும் நல்ல வளர்ச்சியை அளிப்பதாகும். வேதத்தின் தாயாகிய காயத்ரி அன்னை, ஜெபம் செய்கிறவர்களை பாதுகாத்து, பாவம் போக்குபவள்.
தினமும் சூரிய நமஸ்காரம் செய்து காயத்ரி ஜெபம் செய்வதோடு, ஆவணி அவிட்டத்திற்கு மறுநாள் வரும் காயத்ரி ஜெபம் அன்றும் 108 அல்லது 1008 முறை உச்சரித்து வணங்குவது பலனளிக்கும்.
காயத்ரி மந்திரம் மற்றும் எண்ணும் முறை
‘ஓம்பூர் புவஸ் ஸுவ:
தத்ஸ விதுர் வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீமஹி
தியோ யோ ந: ப்ரசோதயாத்’
இம்மந்திரத்தை ஜெபிக்கும்போது கணக்கு வைத்துக்கொள்ள உதவுவது கைவிரல்கள்.
மோதிர விரலின் இரண்டாவது கணு தொடங்கி கீழ்நோக்கி வந்து சுண்டு விரலின் முதல் கணுவரை மேல்நோக்கி வந்து, ஆள்காட்டி விரலின் அடிக்கணு வரை வருகையில் எண்ணிக்கை பத்து வரும். இவ்வாறு ஒவ்வொரு பத்தாக எண்ணி 108, 1008 என்கிற எண்ணிக்கையில் காயத்ரி ஜெபம் செய்ய வேண்டும். தவிர, முத்து, பவள மாலைகளை கைகளால் உருட்டியவாறும் செய்யலாம்.
காயத்ரி ஜெபம் செய்ய தேர்ந்தெடுக்கப்படும் இடம்
ஓடுகின்ற நீரோடை அல்லது நதிக்கரை.
சுத்தம் செய்யப்பட்ட வீட்டு பூஜையறை அல்லது வேறு அறை.
மகான்கள் சித்தி பெற்ற ஸ்தலங்கள், தெய்வீகமான ஆலய சன்னிதிகள்
பெருமாள் சன்னிதி.