மாயக்கண்ணன் திருவிளையாடல் 
ஆன்மிகம்

யசோதையின் அன்பெனும் கயிற்றில் கட்டுண்ட மாயக் கண்ணன்!

ஆர்.வி.பதி

ரு சமயம் யசோதை வழக்கம் போல தனது இல்லத்தில் கோபிகை பெண்களோடு தயிர் கடைந்து கொண்டிருந்தாள். அப்போது அங்கே ஓடி வந்த குறும்புக்கார கண்ணன் வழக்கம் போல தயிர் பானையை உடைத்து விட்டான். கோபிகை பெண்கள் யசோதையிடம் கண்ணனின் குறும்புகளைப் பற்றி அவ்வப்போது குற்றம் சுமத்துவார்கள். ஆனால், அவற்றை யசோதை நம்பவில்லை. காரணம், கண்ணன் குறும்புகளைச் செய்து விட்டு ஏதுமறியாதவன் போல யசோதையின் அருகில் வந்து அப்பாவி போல அமர்ந்து கொண்டு விடுவான்.

இப்போதோ கண்ணன் செய்த குறும்பை யசோதை நேரில் பார்த்து விட்டாள். கண்ணன் மீது அவளுக்குக் கோபம் ஏற்பட்டது. அவனை தண்டிக்க துரத்திக் கொண்டு ஓடினாள். அருகில் நெருங்கி அவனை அடிக்கத் தனது கையை ஓங்கினாள். ஆனால், கண்ணனை அவளால் அடிக்க முடியவில்லை. அவளுடைய கை தானாகவே கீழே இறங்கியது. மிகவும் பாடுபட்டு அவனைப் பிடித்தாள். குறும்புகள் செய்யும் கண்ணனை அங்கிருந்த ஒரு உரலில் கட்டிவைக்க முடிவு செய்து அவனை உரலின் அருகே கொண்டு சென்றாள்.

அங்கேயிருந்த துண்டுக் கயிறுகளை எடுத்து அவற்றை இணைத்து கண்ணனைக் கட்ட முயற்சித்தாள். கண்ணன் செய்த மாயத்தால் அந்தக் கயிறு அவனைக் கட்ட முடியாத அளவிற்கு சிறிதாகிப் போனது. மீண்டும் சில துண்டுக் கயிறுகளை எடுத்து கண்ணனை உரலுடன் கட்ட முயற்சி செய்தாள். மீண்டும் அந்தக் கயிற்றின் அளவு கண்ணனின் சக்தியால் சிறியதாகிப் போனது. விடாமல் யசோதை முயற்சித்துக் கொண்டே இருந்தாள். ஒரு கட்டத்தில் சோர்ந்து போய் அமர்ந்தாள்.

கண்ணனுக்குத் தனது அன்னையைப் பார்க்க பாவமாக இருந்தது. எனவே, யசோதை தன்னை அடுத்தமுறை கட்ட முயற்சிக்கும்போது அவளிடம் கட்டுப்பட முடிவு செய்தான். யசோதை இப்போது மீண்டும் கயிறுகளை எடுத்துக் கட்டி அந்த கயிற்றால் கண்ணனைக் கட்டினாள். கயிற்றின் மறுமுனையை அங்கிருந்த ஒரு உரலில் கட்டி விட்டாள் யசோதை. கட்டுண்ட கண்ணன் ஏதுமறியாதவன் போல அங்கே உட்கார்ந்து கொண்டிருந்தான்.

“குறும்பு செய்யாமல் இங்கேயே இரு. என்னுடைய வேலைகளையெல்லாம் முடித்து விட்டு உன்னை அவிழ்த்து விடுகிறேன்” என்று சொன்ன யசோதை, தனது வேலைகளை கவனிக்க உள்ளே சென்றாள்.

கண்ணன் ஒரு காரணத்திற்காகவே உரலில் தன்னை கட்டுமாறு செய்தான். யசோதை அங்கிருந்து அகன்றதும் கண்ணன் தவழ ஆரம்பித்தான். நிமிர்ந்து நின்றிருந்த உரலானது கீழே சாய்ந்தது. அதை அப்படியே இழுத்துக் கொண்டு தோட்டத்திற்குச் சென்றான். ஒரு சாப விமோசனம் நிகழ்த்தவே கண்ணன் இவ்வாறு செய்தான்.

நளகூபன் மற்றும் மணிக்ரீவன் ஆகியோர் குபேரனின் இரண்டு மகன்கள். அவர்கள் கர்வம் கொண்டவர்கள். ஒரு சமயம் மதுவினை அருந்தி மந்தாகினி ஆற்றில் பெண்களோடு விளையாடிக் கொண்டிருந்தார்கள். அச்சமயத்தில் நாரதர் அவ்வழியாக வந்தபோது மது மயக்கத்தில் இருந்த நளகூபனும் மணிக்ரீவனும் நாரதரை அவமரியாதை செய்தார்கள். இதனால் கோபமடைந்த நாரதர் அவர்களைச் சபித்து மருத மரங்களாக மாற்றினார். இருவரும் நாரதப் பெருமானிடம் சாப விமோசனம் வேண்டி நின்றார்கள்.

நாரதப் பெருமானும் மனமிரங்கி சாப விமோசனத்தைக் கூறினார். “பூலோகத்தில் மகாவிஷ்ணு கண்ணனாக அவதரிக்கும்போது அவரால் நீங்கள் சாப விமோசனம் அடைவீர்கள்” என்றார்.

அந்த இருவரும் கோகுலத்தில் நந்தகோபனின் வீட்டுத் தோட்டத்தில் மருத மரங்களாகி நின்று கொண்டிருந்தனர்.

இருவருக்கும் சாப விமோசனம் தர வேண்டி கண்ணன் உரலை இழுத்துக் கொண்டு மருத மரங்களுக்கு இடையில் புகுந்து சென்றான். உரலானது இரண்டு மரங்களுக்கு இடையில் அகப்பட்டுக் கொண்டது. கண்ணன் தனது யோக பலத்தைப் பயன்படுத்தி உரலை இழுத்தான். அப்போது இரண்டு மரங்களும் வேரோடு சாய்ந்தன. மருத மர உருவில் இருந்த நளகூபனும் மணிக்ரீவனும் சாபம் நீங்கித் தங்கள் சுயரூபத்தை அடைந்தார்கள். தங்களுக்கு சாப விமோசனம் தந்த கண்ணனை இருவரும் வணங்கி நிற்க, கண்ணன் இருவருக்கும் அறிவுரைகளை வழங்கி அனுப்பி வைத்தான்.

மரங்கள் கீழே விழும் பெருஞ்சத்தத்தைக் கேட்டு அனைவரும் தோட்டத்திற்கு ஓடி வந்தார்கள். கண்ணன் ஏதுமறியாதவனைப் போல விளையாடிக் கொண்டிருந்தான். யசோதை அவனை வாரி அணைத்து முத்தமிட்டு மகிழ்ந்தாள்.

புரதம் நிறைந்த சோயா கீமா செய்யலாம் வாங்க! 

மாதச் சம்பளம் வாங்குபவர்கள் செய்யும் 6 நிதித் தவறுகள்! 

ஆரஞ்சு Vs சாத்துக்குடி: எது சிறந்தது?

Alia bhatt beauty tips: நடிகை ஆலியா பட் அழகின் ரகசியம் இதுதான்!

6 Super Cool Facts About The Moon!

SCROLL FOR NEXT