விமானப்பயணம் மகிழ்ச்சி தரும் பயணம் தான். ஆனால் உலகில் சில விமான நிலையங்களில் விமானம் தரையில் இறங்கும் போதும் சரி, மீண்டும் ஏறும் போதும் அதில் பயணம் செய்யும் பயணிகளுக்கு ஒரு வித திக் திக் ... அனுபவத்தை ஏற்படுத்தும். அப்படிப்பட்ட விமான நிலையங்களின் விபரம் இதோ...
நேபாளத்தில் உள்ள டென்சிங் ஹிலாரி விமான நிலையம் கடல் மட்டத்திலிருந்து 2860 மீ உயரத்தில் அமைந்துள்ளது. சில நூறு மீட்டர்கள் மட்டுமே ஓடு பாதை கொண்ட இந்த விமானம் நிலையம் அபாயகரமான விமான நிலையமாக கருதப்படுகிறது. இந்த விமான நிலைய ஓடு பாதையின் வடக்கே மலைச்சிரகங்களும், தெற்கில் ஆழமான அகழியும் உள்ளன. இமயமலையின் சிகரங்களுக்கிடையில் உள்ள லுக்லா நகரில் அமைந்துள்ள இந்த விமான நிலைய ரன் வே நீளம் 460 மீமட்டுமே. இங்கு சிறிய மற்றும் ஹெலிகாப்டர்கள் மட்டுமே தரையிறங்க அனுமதிக்கப்படுகிறது.
உலகின் மிக அபாயகரமான விமான நிலைய ஓடு பாதையாக பூடான் நாட்டின் பாரோ குறிப்பிடப்படுகிறது. இமயமலையின் பாரோ பள்ளத்தாக்கு பகுதியில் அமைந்துள்ள இந்த விமான நிலையத்தின் ஓடு பாதையில் இரவிலும், பனி படர்ந்த சமயங்களிலும் விமானங்களை ஏற்றி இறக்குவது மிகவும் சவாலானது. விமான நிலையத்தை சுற்றிலும் 6000 மீ உயரத்திலான மலைகள் சூழ்ந்து இருக்கும். இந்த விமான நிலையத்தில் இறங்கிச்செல்ல 8 விமானங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கேரள மாநிலம் கோழிக்கோடு விமான நிலைய ரன்வே ஒரு டேபிள் டாப் ரன்வே. இதன் நீளம் 2700 மீ (பொதுவாக ஓடு பாதையின் நீளம் 4000 மீக்கு மேல் இருக்கும்) இதில் விமானத்தை ஏற்றுவதும், இறங்குவதும் திறமையான விமானிகளால் மட்டுமே முடியும். மலைப்பகுதியில் உள்ள விமான நிலையங்களில் தான் இந்த டேபிள் டாப் ஓடு பாதை இருக்கும் . இது ஒரு டேபிள் மீது கச்சிதமாக விமானத்தை இறங்குவதற்கு ஒப்பானது. இந்த விமான நிலையத்தில் ஒரே ஒரு ஓடுதளம் மட்டுமே இருக்கும். எனவே இந்த விமான நிலையத்தில் விமானங்களை ஏற்றுவது மற்றும் இறக்குவது இரண்டுமே சவாலானது.
மாலத்தீவுகளின் மாலே சர்வதேச விமான நிலையத்தில் ஒரு விமானத்தை இறங்குவதும், மீண்டும் ஏற்றி பறப்பதும் மிகவும் சவாலானது. கடற்கரையில் இருந்து இரண்டு மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது இந்த விமான நிலையம். கடலின் நடுவில் அமைந்துள்ளது. விமானத்தை இறக்கும் போது விமானிகளின் கவனம் பிசகினால் நேரடியாக விமானம் இந்தியப் பெருங்கடலில் இறங்கி விடலாம்.
போர்ச்சுகல் நாட்டின் மடெய்ரா விமான நிலையம் ஒரு புறம் மலைகளையும், மறுபுறம் கடலையும் எல்லையாகக் கொண்ட போர்ச்சுகல் நாட்டின் மடெய்ரா தீவில் இருக்கிறது. இங்கு ஒரு விமான விபத்து ஏற்பட்டது. அதன் பின் மிகக்குறுகிய ஓடு பாதையை கடல் மீது ஒரு பாலம் கட்டி விரிவுபடுத்தினார்கள். அப்படியும் இங்கு விமானத்தை லேன்டிங் மற்றும் டேக் ஆப் செய்வது ரிஸ்க் தான்.
மேற்கிந்தியத்தீவுகளில் ஒன்றான செயின்ட் மார்ட்டின் தீவில் உள்ள பிரின்சஸ் ஜூலியானா விமான நிலைய ஒடு பாதை 2300 மீ நீளம் கொண்டது. மஹோ கடற்கரையை ஒட்டி மிக மிக அருகில் அமைந்துள்ளது. எனவே கடற்கரை பகுதியில் மிகத் தாழ்வாக பறந்து வந்து ஒடு பாதையில் இறங்க வேண்டும். இதுவும் விமானிகளுக்கு சவால் விடும் ஓடுபாதையாக குறிப்பிடப்படுகிறது.
கரீபியன் தீவுகளில் உள்ள சாபாவின் ஜுவாங்கோ விமான நிலையம் உலகின் மிக குறுகிய ஓடு பாதை கொண்டது. நீளம் 386 மீ. இந்த ஓடு பாதை ஒரு மலை மீது மூன்று பக்கங்களில் கடலால் சூழப்பட்டுள்ளது. மறுபுறம் மலை உச்சியும் உள்ளதால் இங்கு விமானத்தை தரையிறக்குவது பலவீனமான விமானிகளால் முடியாத காரியம்.
பிரான்ஸ் நாட்டின் கூர்ச்செவல் விமான நிலையம் ஆல்ப்ஸ் மலைப்பகுதியில் பனிச்சிகரத்தின் மீது அமைந்துள்ளது இந்த விமான நிலையத்தின் ஓடுபாதை வெறும் 525 மீ மட்டுமே. ஓடு பாதையின் முடிவு சரிவான பகுதி. இதில் விமானங்களை ஏற்றி இறக்குவது மிகவும் சவால் நிறைந்தது.
ஜிப்ரால்டர் நாட்டின் ஜிப்ரால்டர் விமான நிலையம் 1800 மீ நீளம் கொண்ட குறைந்த தூர ஓடு பாதையை கொண்டது. இதில் பாதி தூரம் கடல் மீது இருக்கிறது. இந்த ஓடு பாதையின் குறுக்கே முக்கிய சாலை ஒன்று குறுக்கிடுகிறது. விமானம் ஏறி இறங்கும் வேளைகளில் இந்த சாலை ரயில்வே கேட் போன்று மூடப் படுகிறது.
ஜப்பானில் உள்ள ஒசாகா வளைகுடாவில் அமைக்கப்பட்ட செயற்கைத்தீவில் அமைந்துள்ளது கான் காய் சர்வதேச விமான நிலையம். மூன்று மலைகளை உடைத்து கடலில் கொட்டி உருவான தீவு. நிலநடுக்கம், புயல் போன்ற இயற்கை சீற்றங்களால் கடும் பாதிப்புகளை சந்திக்கும் விமான நிலையம்.